துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: உருத்(து)எழு வெள்ளம்

இகல்பெரு மையின் படைகோள் அஞ்சார்
சூழாது துணிதல் அல்லது வறி(து)உடன்
காவல் எதிரார் கறுத்தோர் நாடுநின்
முன்திணை முதல்வர்க்(கு) ஓம்பினர் உறைந்து
மன்பதை காப்ப அறிவுவலி உறுத்து 5
நன்(று)அறி உள்ளத்துச் சான்றோர் அன்னநின்
பண்புநன்(கு) அறியார் மடம்பெரு மையின்
துஞ்சல் உறூஉம் பகல்புகு மாலை
நிலம்பொறை ஒராஅநீர் ஞெமரவந்(து) ஈண்டி
உரவுத்திரை கடுகிய *உருத்(து)எழு வெள்ளம்* 10
வரையா மாதிரத்(து) இருள்சேர்பு பரந்து
ஞாயிறு பட்ட அகன்றுவரு கூட்டத்(து)
அஞ்சாறு புரையும் நின்தொழில் ஒழித்துப்
பொங்கு பிசிர்நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயிஅ அனையை 15
சினம்கெழு குருசில்நின் உடற்றிசி னோர்க்கே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework