குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் தேவி ஈன்றமகன்
தண்டாரணியத்துக் கோள்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்(டு) ஓரூர் ஈத்து 5
வான வரம்பன்எனப் பேர்இனிது விளக்கி
ஏனை மழவரைச் செருவின் சுருக்கி
மன்னரை ஓட்டிக்
குழவிகொள் வா஡஢ன் குடிபுறந் தந்து
நாடல் சான்ற நயன்உடை நெஞ்சின் 10
*ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை*
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்

காக்கைபாடினியார் நச்செள்ளையார்
பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்: வடுவடு நுண்ணயிர், சிறுசெங்குவளை, குண்டுகண்ணகழி, நில்லாத்தானை, துஞ்சும்பந்தர், வேந்துமெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளைவிறலி, ஏவிளங்கு தடக்கை, மாகூர்திங்கள், மரம்படுதீங்கனி. இவை பாட்டின் பதிகம்.

பாடிப்பெற்ற பரிசில்: கலன் அணிக என்று அவர்க்கு ஒன்பது காப் பொன்னும் நூறயிரங்காணமும் கொடுத்துத் தன்பக்கத்துக்கொண்டான் அக்கோ.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முப்பதெட்டியாண்டு வீற்றிருந்தான்.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework