துறை: வாகை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: ஏவல் வியன்பணை

பிறர்க்(கு)என வாழ்திநீ ஆகல் மாறே
எமக்கில்என் னார்நின் மறம்கூறு குழாத்தர்
துப்புத்துறை போகிய வெப்(பு)உடைத் தும்பைக்
கறுத்த தெவ்வர் கடிமுனை அலற
எடுத்(து)எறிந்(து) இரங்கும் *ஏவல் வியன்பனை* 5
உரும்என அதிர்பட்டு முழங்கிச் செருமிக்(கு)
அடங்கார் ஆர்அரண் வாடச் செல்லும்
காலன் அனைய கடும்சின முன்ப
வாலிதின், நூலின்இழையா நுண்மயிர் இழைய
பொறித்த போலும் புள்ளி எருத்தின் 10
புன்புறப் புறவின் கணநிரை அலற
அலந்தலை வேலத்(து) உலவை அம்சினைச்
சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்
இலங்குமணி மிடைந்த பசும்பொன் படலத்(து)
அவிர்இழை தைஇ மின்உமிழ்(பு) இலங்கச் 15
சீர்மிகு முத்தம் தைஇய
நார்முடிச் சேரல்நின் போர்நிழல் புகன்றே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework