பெயர் - காடுறு கடுநெறி (11)
துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும்


தேஎர் பரந்தபுலம் ஏஎர் பரவா
களி(று)ஆ டியபுலம் நாஞ்சில் ஆடா
மத்(து)உர றியமனை இன்னியம் இமிழா
ஆங்குப், பண்டுநற்(கு) அறியுநர் செழுவளம் நினைப்பின்
நோகோ யானே நோதக வருமே 5
பெயல்மழை புரவின்(று) ஆகிவெய்(து) உற்று
வலம்இன்(று) அம்ம காலையது பண்(பு)எனக்
கண்பனி மலிர்நிறை தாங்கிக் கைபுடையூ
மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப்
பீர்இவர் வேலிப் பாழ்மனை நெருஞ்சிக் 10
*கா(டு)உறு கடுநெறி* யாக மன்னிய
முரு(கு)உடன்று கறுத்த கலிஅழி மூதூர்
உரும்பில் கூற்றத்(து) அன்னநின்
திருந்துதொழில் வயவர் சீறிய நாடே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework