அட்டுமலர் மார்பன்
- விவரங்கள்
- குமட்டூர்க் கண்ணனார்
- தாய்ப் பிரிவு: எட்டுத்தொகை
- பதிற்றுப்பத்து
பெயர் - அட்டுமலர் மார்பன் (20)
துறை - இயன்மொழி வாழ்த்து
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
நும்கோ யார்என வினவின் எம்கோ
இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேர லாதன் வாழ்கஅவன் கண்ணி 5
வாய்ப்(பு)அறி யலனே வெயில்துகள் அனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
கண்ணின் உவந்து நெஞ்(சு)அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்(பு)அறி யலனே
கனவினும், ஒன்னார் தேய ஓங்கி நடந்து 10
படியோர்த் தேய்த்து வடிமணி இரட்டும்
கடாஅ யானைக் கணநிரை அலற
வியல்இரும் பரப்பின் மாநிலம் கடந்து
புலவர் ஏத்த ஓங்குபுகழ் நிறீஇ
விஉளை மாவும் களிறும் தேரும் 15
வயியர் கண்ணுளர்க்(கு) ஓம்பாது வீசிக்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
நெடுமதில் நிலைஞாயில்
அம்(பு)உடை யார்எயில் உள்அழித்(து) உண்ட
அடாஅ அடுபகை * அட்டுமலர் மார்பன்* 20
எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்
பாசில் மாக்கள் வல்லார் ஆயினும்
கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்
மன்உயிர் அழிய யாண்டுபல மாறித்
தண்இயல் எழிலி தலையா(து) ஆயினும் 25
வயிறுபசி கூர ஈயலன்
வயிறும்ஆ(சு) இலீயர்அவன் ஈன்ற தாயே.