யோகம்

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! ... 1

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! ... 2

வான மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே கண்ணம்மா! ... 3

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! ... 4

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணு மொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! . ... 5

காதலடி நீ யெனக்குக் காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா! . ... 6

நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! ... 7

தரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைத்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! ... 8

Add a comment

புன்னாகவராளி - திஸ்ர ஏகதாளம்
ரசங்கள்: அற்புதம், கருணை

தஞ்ச முலகினில் எங்கணு மின்றித்

தவித்துத் தடுமாறி,
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்,
பார முனக் காண்டே!
ஆண்டே! - பாரமுனக் காண்டே! ... 1

துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச்
சுகமருளல் வேண்டும்;
அன்புடன் நின்புகழ் பாடிக்குதித்து நின்
ஆணை வழி நடப்பேன்;
ஆண்டே! - ஆணைவழி நடப்பேன். ... 2

சேரி முழுதும் பறையடித் தேயருட்
சீர்த்திகள் பாடிடுவேன்;
பேரிகை கொட்டித் திசைக ளதிரநின்
பெயர் முழக்கிடுவேன்;
ஆண்டே! - பெயர் முழக்கிடுவேன். ... 3

பண்ணைப் பறையர் தங் கூட்டத்தி லேயிவன்
பாங்கிய மோங்கி விட்டான்;
கண்ண னடிமை யிவனெனுங் கீர்த்தியில்
காதலுற் றிங்கு வந்தேன்;
ஆண்டே! - காதலுற் றிங்குவந்தேன். ... 4

காடு கழனிகள் காத்திடுவேன், நின்றன்
காலிகள் மேய்த்திடுவேன்;
பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென்
பக்குவஞ் சொல்லாண்டே!
ஆண்டே! - பக்குவஞ் சொல்லாண்டே! ... 5

தோட்டங்கள் கொத்திச் செடிவளர்க்கச் சொல்லிச்
சோதனை போடாண்டே!
காட்டு மழைக்குறி தப்பிச் சொன்னா லெனைக்
கட்டியடி யாண்டே!
ஆண்டே! - கட்டியடி யாண்டே! ... 6

பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்
பிழைத்திட வேண்டுமையே!
அண்டை யலுக்கென் னாலுப காரங்கள்
ஆகிட வேண்டுமையே!
உபகாரங்கள் - ஆகிட வேண்டுமையே! ... 7

மானத்தைக் காக்கவோர் நாலுமுழத்துணி
வாங்கித் தரவேணும்!
தானத்துக்குச் சில வேட்டிகள் வாங்கித்
தரவுங் கடனாண்டே!
சில வேட்டி - தரவுங் கடனாண்டே. ... 8

ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி
யொருசில பேய்கள் வந்தே
துன்பப் படுத்துது மந்திரஞ் செய்து
தொலைத்திட வேண்டுமையே!
பகையாவுந் - தொலைத்திட வேண்டுமையே! ... 9

பேயும் பிசாசுந் திருடரு மென்றன்
பெயரினைக் கேட்டளவில்,
வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க
வழி செய்ய வேண்டுமையே!
தொல்லைதீரும் - வழிசெய்ய வேண்டுமையே! ... 10

Add a comment

ராகம் - புன்னாகவராளி
பல்லவி

நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

1.
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ... (நின்னை)

2.
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . ... (நின்னை)

3.
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் ... (நின்னை)

4.
துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட ... .(நின்னை)

5.
நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! ... (நின்னை)

Add a comment
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework