கண்ணம்மா - என் காதலி - 3
- விவரங்கள்
- சி.சுப்ரமணிய பாரதியார்
- தாய்ப் பிரிவு: சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
- கண்ணன் பாட்டு
(முகத்திரை களைத்தல்)
நாதநாமக்கிரியை - ஆதிதாளம்
சிருங்கார ரசம்
தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பு ரண்டையும் - துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ ? ... 1
ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் - பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் - வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ட சப்பிலே - கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? ... 2