கண்ணம்மா - என் காதலி - 4
- விவரங்கள்
- சி.சுப்ரமணிய பாரதியார்
- தாய்ப் பிரிவு: சி.சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
- கண்ணன் பாட்டு
(நாணிக் கண் புதைத்தல்)
நாதநாமக்கிரியை - ஆதிதாளம்
சிருங்கார ரசம்
மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை - இவன்
மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?
சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ? - இங்கு
செய்யத் தகாதசெய்கை செய்தவ ருண்டோ ?
வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன் - நின்றன்
மதங்கண்டு துகிலினை வரிதுரிந்தேன்.
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? - எனக்
கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா! ... 1
கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? - கன்னங்
கன்றிச் சிவக்கமுத்த மிட்ட தில்லையோ!
அன்னிய மகாநம்முள் எண்ணுவதில்லை - இரண்
டாவிவயுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? - துகில்
பறித்தவள் கைப்பறிக்கப் பயங்கொள்வனோ?
என்னைப் புறமெனவுங் கருதுவதோ? - கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ? ... 2
நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும் - சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் - தம்முள்
பன்னி உபசரணை பேசுவ துண்டோ ?
நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே - விண்ணை
நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகிளையச் சோதி கவ்வுங்கால் - அவை
முன்னுப சாரவகை மொழிந்திடுமோ? ... 3
சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திடேன்; - அவர்
சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில் வந்து உறவன்றடீ! - மிக
நெடும்பண்டைக் காலமுதற் சேர்ந்து வந்ததாம்.
போற்றுமி ராமனென முன்புதித்தனை, - அங்கு
பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்;
ஊற்றுமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோ ன்- கண்ணன்
உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்கு நான். ... 4
முன்னை மிகப்பழமை இரணியனாம் - எந்தை
மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ;
பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன் - ஒளிப்
பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்.
சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர்காண்; - அவர்
சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; - இதில்
ஏதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே? ... 5