உலகியலை எண்ணிப் பார்க்கையில் எல்லாமே முதன்மையுடையவனாகவே தெரியும். அதாவது நாடு, மொழி, சமயம், கலை, பொருள் ஆகியன. இவையெல்லாவற்றுக்கும் அடிப்படையாகவும் ஆதாரமாகவும் அமையும் நாடு மிகமிக இன்றியமையாதது. எல்லா விழுமிய பற்றுக்களிலும் மிகவும் விழுப்பம் உடையது நாட்டுப் பற்றேயாம். விழுப்பம் தரும் நாட்டுப்பற்றிலும் மிக்குயர்ந்தது நாட்டு எல்லைகளைக் கடந்த உலகந்தழீயிய விருப்பம். நாட்டுப்பற்றோடு இணைந்தது, பிணைந்தது நாட்டில் வாழும் மக்களிடத்தே நிலவ வேண்டிய ஒருமைப்பாடு.

ஒரு நாட்டின் மக்கள் ஒருமைப்பாடுடையவர்காளாயில்லாது போனால் அந்த நாடு சிந்தையில் ஒன்றாக விளங்கும் நாடாக உருப்பெறுதல் அரிது. நாட்டு மக்களிடத்தில் நல்ல வண்ணம் கலந்து பேசிக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும்; பழக்கம் மூலம்தான் நம்பிக்கை வளரும்; நல்லெண்ணம் வளரும்; நட்பு கால்கொள்ளும், உறவு தழைக்கும்; ஒருமைப்பாடு நிலவும். இந்த இனிய ஒப்புரவுப் பண்பாட்டுக்குத் துணையாகக் கற்கும் மொழிகள் அமைய வேண்டும். எந்த மொழி ஒருவரைப் பலருக்கு உறவாக்குகிறதோ அந்த மொழியை முயன்று கற்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பல மொழிகளைக் கற்பது மானிடத்திற்கு நல்லது.

இந்தியா ஒரு பெரிய நாடு. பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாடு. நமது நாட்டிற்கு உணர்வு பூர்வமான ஒருமைப்பாடு தேவை. இந்த ஒருமைப்பாட்டை அவாவி வாழும் ஒழுக்க உணர்வின் வாயிலாகத்தான் உருவாக்க முடியும்; வளர்க்க முடியும். இதற்கு நாம் கற்கும் மொழிகள் துணை செய்தல் நல்லது.

ஒரு மனிதன் எந்த மொழியைக் கற்பது என்ற வினா எழுமானால் ஐயத்திற்கிடமின்றிக் கிடைக்கக் கூடிய முதல் விடை அவனுடைய தாய்மொழி என்பதே. தாய்மொழியை ஆரம்பக் கல்வியிலிருந்து பல்கலைக் கழகம் ஈறாக ஆய்வு நிலையில் கூடப் பயிற்று மொழியாகவும் எழுதும் மொழியாகவும் இருக்க வேண்டும். இது மனிதவியல் விஞ்ஞானத்தின் தெளிந்த முடிவு. இந்த வகையில் தமிழகம் பின்தங்கியிருக்கிறது என்பதை நாம் உணர்ந்து, தமிழை துறைதோறும் பயிற்று மொழியாகக் கொண்டுவர வேண்டும்.

அடுத்து, பிற மொழிகளைக் கற்பது என்பது நல்லது; வரவேற்கத் தக்கது. இங்ஙனம் கற்கும் பல மொழிகள் ஆய்வுக்கும் உறவுக்கும் பயன்படும். ஆனால் எந்த ஒரு மொழியையும் மக்கள் விரும்பிக் கற்குமாறு செய்வதே நல்ல மரபு. தமிழ் மக்கள் இந்த ஒப்புரவைக் காணத்தக்க வகையில் இந்திய மொழிகளையும் உலக உறவுகளையும் வளர்த்துக் கொள்ளும் வகையில் உலக மொழிகளையும் கற்க முன்வர வேண்டும். விரும்பிக் கற்பது என்பது எதிரதாகக் காத்துக்கொள்ளும் சமுதாய விழிப்புணர்வுடையோருக்கே உரியது. சாதாரண மக்கள் எளிதில் விழிப்படைய மாட்டார்கள். அவர்களை விருப்புமுறச் செய்வதும் அதற்குரிய நயத்தக்க மரபுகளைக் கடைப்பிடிப்பதும் தவிர்க்க முடியாதவை. இந்தியாவின் முதல் தேவை ஒருமைப்பாடேயாம். இரண்டாவது இடத்திலேயே மொழி இருக்க வேண்டும். இந்த விழுமிய கோட்பாட்டை நினைவிற் கொள்ள வேண்டும்.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework