குழந்தைகள் வளர்க்கப் பெறுதல் வேண்டும். நாளைய நாடு இன்றைய குழந்தைகள் கையில்தான் இருக்கப் போகிறது. மனிதர்கள் வருவார்கள் — போவார்கள்! ஆனால், நாடு என்றும் இருக்கும். ஆதலால் நாட்டின் நிலையான தன்மையை நினைவிற்கொண்டு எதிர்வரம் தலைமுறையைச் சீராக வளர்க்க வேண்டும். நமது நாட்டின் நேற்றைய தலைமுறை, அதாவது நமக்கு முந்திய தலைமுறை நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தலைமுறை.

இன்றைய தலைமுறையினராகிய நாம் சுதந்திரத்தை அனுபவிக்கின்றோம். அதேபோழ்து, நாம் மற்றவர்கள் சுதந்திரத்தில் ஆக்கிரமிப்புச் செய்து கொண்டிருக்கிறோம். கையூட்டு, வரதட்சணை, முறை பிறழ்ந்த குடியாட்சி முறைகள் மற்றவர்களுடைய சுதந்திரதிற்கு கேடு விளைவிப்பதுதானே! ஆனாலும், நாம் எதிர்வரும் தலைமுறையைச் சீராக வளர்க்க வேண்டும்.

கிராமம் தோறும் முன்கல்விப் பள்ளி (Primary Schools) தொடங்கப் பெற வேண்டும். இந்தப் பள்ளி மூன்று முதல் ஐந்து வயதுக் குழந்தைகளுக்குரியது. இந்தப் பள்ளியில் பயில ஏடுகள் வேண்டாம். கரும்பலகைகள் வேண்டாம். கூடவும் கூடாது. காணல், கேட்டல், சொல்லுதல் ஆகியனவே பயிற்சி. இந்தப் பருவத்தில் உற்றுக் காணல், கவனமாகக் கேட்டல், ஆர்வமுடையன சொல்லுதல் ஆகிய பயிற்சிகள் விளையாட்டுகளுடனும் இசையுடனும் சொல்லித்தரப் பெறுதல் வேண்டும்.

குழந்தைகளுக்கு பாரம்பரியமும் சூழ்நிலையும் சீராக அமைந்தால் சிறப்பாக வளர்வார்கள். இன்றைய கிராமக் குழந்தைகளுக்கு இவை இரண்டுமே பாராட்டத்தக்க வகையில் அமையாதது ஒரு பெருங்குறை. இன்றைய அறங்களில் தலைசிறந்தது — இன்றைய நாட்டுப் பணிகளில் சிறந்தது இன்றைய குழந்தைகள் நன்றாக வளர்வதற்குரிய சூழ்நிலைகளை அமைத்துத் தருவதேயாம். இந்தப் பணியைச் செய்வதில் பெற்றோர்களுக்கும் சமூக நிறுவனங்களுக்கும் அரசுக்கும் நிறைய பொறுப்புண்டு.

குழந்தைகள் வளர்ச்சி நிலைப்பருவம் 18 மாதம் முதல் 13 வயது வரை ஆகும். இந்த வயதுக் காலத்தில் குழந்தைகள் பாலர் பள்ளி, ஆரம்ப பாடசாலைகளில் கல்வி பயிலுகின்றனர். பல சிற்றூர்களில் பாலர் பள்ளிகள் இல்லை. இருக்கும் இடங்களில் தக்க ஆசிரியர்கள் இல்லை. இன்றைய ஆரம்ப பாடசாலைகளின் நிலை…..எழுதக் கை நடுங்குகிறது! அவ்வளவு மோசமான நிலை!

இன்றைய ஆரம்பக் கல்வி குழந்தைகளை ஊக்கப்படுத்தி ஆற்றுப்படுத்துவதாக இல்லை. ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களிலும் தங்களுடைய பொறுப்பு வாய்ந்த பணியை உணர்ந்து செயற்படுவோர் சிலரே! எல்லாவற்றையும்விட இந்தக் குழந்தைகளைச் சுற்றியுள்ள உலகம் திருத்தமுறுதல் நல்லது. காரணம், இந்தக் குழந்தைகள் தாம் காண்பனவற்றைத் தான் முன் மாதிரியாக எடுத்துக் கொள்கின்றன.

நவம்பர் 14 குழந்தைகள் தினவிழா, குழந்தைகள் நலனுக்குரியான செய்வோம்! முறையாக வளர்ப்போம்! சீராக வளர வாய்ப்பளிப்போம்! இன்றைய குழந்தைகளின் — நாளைய தலைவர்களின் அறிவையும், ஆற்றலையும் முறையாக வளர்ப்பது நமது கடமை! நீங்காக் கடமை.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework