ஒழுக்கம் உடையராதல் அரிது. ஆயினும் ஒழுக்கம் உடையராக வாழ்தலே வாழ்தல். "ஒழுக்கம்" என்ற சொல் பலராலும் கேட்கப் பெறும் சொல். ஆயினும் ஒழுக்கம் என்ற சொல்லுக்கு மக்கள் மன்றத்தில் கற்பிக்கப் பெற்றுள்ள பொருள் மிகச் சுருங்கியது. அதாவது ஆண் பெண் உறவுகளில் குற்றம் ஏற்படாமல் வாழ்வதே ஒழுக்கமுடமையாகும் என்பது வலிமை சான்ற ஒரு கருத்து. இதில் தவறில்லை; உண்மை இருக்கிறது. ஆயினும் பெண் வழி நேரிடும் பிழைகளைத் தவிர்த்தல் மட்டுமே ஒழுக்கமுடமையாகாது. இது ஒழுக்கமுடைமையின் ஒரு கூறு.

மேலும் கள்ளுண்ணல், கவறாடல் முதலியன செய்யாமை ஒழுக்கம் என்று கூறுவாரும் உளர். இதிலும் உண்மை இருக்கிறது. ஆயினும் கள்ளுண்ணாதிருத்தல், கவறாடாதிருத்தல் மட்டும் ஒழுக்கமுடைமையாகாது. இவையும் ஒழுக்கத்தின் கூறுகளே! இந்த அளவில் மட்டும்தான் ஒழுக்கம்பற்றி நமது நட்டு மக்கள் அறிந்திருக்கின்றனர். கள்ளுண்ணாதிருத்தல் கவறு (சூது) ஆடாதிருத்தல், முறை தவறான பால் ஒழுக்கங்கள் மேற்கொள்ளாதிருத்தல் மட்டும் உடையவரே ஒழுக்கமுடையவர் என்று கருதும் கருத்து நமது சமுதாய அளவில் மேம்பட்டிருக்கிறது. இவைகள் ஒழுக்கத்தின் கூறுபாடுகளே. ஆனால் நிறை நலம் மிக்க ஒழுக்கம் எது?

நாம் இந்த உலகத்தில் வாழ்கின்றோம். இந்த உலக சமுதாயம் நம் கண்முன்னே இயங்கிக் கொண்டிருக்கிறது; வளர்ந்து கொண்டிருக்கியது; நாம் இந்த மானுட சமுதாயத்துக்குள் சங்கமமாக வேண்டும். மானுட சமுதாயத்தின் நடைமுறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப ஒழுகி வெற்றி பெறுதல் வேண்டும். உலக நடைமுறை தீயதாக இருக்கலாம். அத்தீய ஒழுக்கமும் ஏற்புக்குரியதா என்ற கேள்வி தோன்றும். இல்லை. இல்லை. தீயஒழுக்கத்தை ஏற்றுக் கொள்ளல் இல்லை! உலகத்தைப் புரிந்து கொண்டு அதற்குத்தக ஒழுகுதல் என்பதே பொருள். உலக இயலுக்குத் தக்கவாறு என்றால் ஒத்து ஒழுகுதல் என்று மட்டுமே பொருள் கொள்ளுதல் வேண்டா. உலக நடையினைப் புரிந்து கொண்டு அதனோடு மோதாமல் ஒத்துப் போகக் கூடியதாயின் ஒத்து ஒழுகுதல் வேண்டும். ஒத்து ஒழுக இயலாதது எனில் அதனை நாம் விரும்பும் நிலைக்கு மாற்ற முயலுதல் வேண்டும். இங்ஙனமின்றி முரண்பட்டு நின்றும், கலகங்களை வளர்த்தும் வாழ்தல் கூடாது.

இந்த உலகில் எல்லாவற்றுக்கும் மேலானது மனித நேயமே ஆதலால் உலக மாந்தர்க்கு நல்லது செய்யும் வழியில் வாழ்தலே ஒழுக்கமுடைய வாழ்க்கை. உலக மானுட சமுதாயத்துடன் ஒத்து உடன் நின்று வாழ்தலே ஒழுக்கமுடைமை.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்"

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework