நன்று என்ற சொல்லின் அடிப்படையில் நன்றி என்ற சொல் பிறக்கிறது. அதாவது ஒருவர், ஒருவருடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும், முன்னேற்றதிற்கும் உதவி செய்ததை மறத்தல் கூடாது. நன்றை – நல்லதை மறவாதிருக்கும் பண்பினைக் குறிக்கும் சொல் நன்றி என்பது. இந்தப் பரந்த உலகத்தில் மானுடம் ஒருவருக்கு ஒருவர் கலகம் செய்து அழிந்து கொண்டே வந்திருகிறது. அழிந்துமிருக்கிறது.

இத்தகு உலகில் ஒருவர் பிறிதொருவருக்கு நன்மை செய்வது என்பதே வளர்ந்த மனிதரின் நிலை. இங்ஙனம் ஒருவர் செய்த நன்மையை மறக்காது பாராட்டினால் மேலும் பல நன்மைகளைச் செய்ய அவர் முன்வருவார். நாடு வளரும். அதோடு நன்மையை அடைந்த ஒருவர் அந்த நன்மையை மறவாதிருத்தலே அவர் அந்த நன்மையின் – தன்மையின் பயனை அறிந்திருக்கிறார் என்று உணரப்பெறும். இங்ஙனம் தன்மையை அறிந்துணரும் நிலையில்தான் நன்மை வளரும். பலரும் பயன் பெறுவர்.

ஒருவர் செய்த நன்மையை மறந்து விட்டால், அவருக்கு யாரும் நன்மை செய்ய முன்வர மாட்டார்கள். அதனால் அவர் தம் வாழ்வில் தேக்கம் ஏற்படும். துன்பங்களும், துயரங்களும் தோன்றி அல்லற்படுவர்; அழிந்து போவார். அதனால் "நன்றி மறப்பது நன்றன்று" என்றது திருக்குறள். நன்மையை மறவாதிருத்தலே நன்மையை நிலையாகப் பாதுகாக்கவும் மேலும் பல நன்மைகளைப் பெறவும் கூடிய வழி.

நன்மை செய்தல் நல்லவர் பண்பு. நல்லவர்களாலே மட்டுமா இந்த உலகம் இயங்குகிறது. இல்லையே! இந்த உலகில் நல்லவர்கள் – நன்மை செய்யக்கூடியவர்கள் மிக மிகச் சிறுபான்மையினரேயாம். தீமை செய்பவர்களே மிகுதி. ஆதலால் நமக்கு ஒருவர் தீமை செய்துவிட்டால் அந்தத் தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும். ஏன்? தீமையால் விளையக்கூடிய பயன் யாதுமில்லை.

ஒருவர் செய்த தீமையை மறவாமல் நினைவில் வைப்பதால் தீமை செய்தார் மீது காழ்ப்புணர்ச்சி கால்கொள்ளும் – அவருக்கு தீமை செய்ய வேண்டும் என்ற முனைப்பு தோன்றும். தீமை செய்தவருக்குத் தீமை செய்ய நேரிடும். தீமையை அடைந்தவர் நாம் செய்த தீமைக்குத்தானே தீமை என்று நினைக்க மாட்டார். மீண்டும் முறுகி எழும் சினத்துடன் தீமை செய்வார். அதனால் தீமையே சுழன்று கொண்டு வரும். முடிவு அழிவே. அதனால்

"நன்றல்லது அன்றே மறப்பது நன்று"

என்று திருக்குறள் அறிவுறுத்துகிறது. ஆம்! தண்டனைகளால் மனித உலகம் திருந்தாது. தீமை செய்யும் அறியா மானுடர்பால் அனுதாபமும், இரக்கமும் பரிவும் காட்டித் திருத்த முயல்வதே நன்மை நாடுவோர் பணி! வையகம் வளர வாழ வழி! "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று." இத்திருக்குறள், மானுட வரலாறு, சமூக இயல், உள இயல் அடிப்படையில் தோன்றியது. அற்புதமான திருக்குறள். நன்றி மறப்பதனால் தீமை வளர்ந்து விடாது. அல்லது தீமை வளராது. நன்மை குறையும். அவ்வளவுதான். ஆனால் நன்றல்லாதவற்றை மறவாதிருப்பது பெருந்தீமை பயக்கும். அதனால் அதை "அன்றே" மறந்திடுக என்று வலியுறுத்துகிறது திருக்குறள்.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework