நடுவுநிலைமை என்பது உயர்வாழ்வின் கொள்கை, கோட்பாடு. இருவேறு நிலையினதாக இயங்குவதே உலகத்தின் பெருவழக்கு. பல சமயங்களில் பன்முக நிலையில்கூட உலகியல் நிகழும். இந்த நிலைகளில் தன்னலம், சார்பு நிலைகள் கருதி ஒருபக்கம் சார்ந்து விடுதல் கூடாது.

எல்லாக் கருத்துக்களையும், எல்லா நிலைப்பாடுகளையும் அறிவார்ந்த நிலையிலும் பொதுப் பயன்பாட்டு நிலையிலும் தீர ஆய்வு செய்து, ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றையதைத் துணிவுடன் தள்ள வேண்டும். அநீதிக்கும் நீதிக்கும் இடையில் நடுவுநிலையில் நிற்றல் என்பது கூடாது. நன்மையைச் சார்ந்து இராத நடுவு நிலைமை தீமையாகும்.

இன்றைய நமது சமுதாயத்தின் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கினால் அநியாயங்களே நியாயங்களாகிக் கொண்டு வருகின்றன. இன்றைய சமுதாய அமைப்பில் விருப்பு வெறுப்பு உணர்வுகள் (இராகதுவேஷங்கள்) நிறைந்துள்ளன.

நாம் தெரிந்தோ, தெரியாமலோ விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி; சமுதாயத்தில் வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகு சூழ்நிலையில் நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் அறிந்தறிய வேண்டிய ஒன்று.

ஒரு கருத்து அல்லது ஒரு நடைமுறை சரி அல்லது தவறு என்று ஆய்வில்லாமல் முடிவுக்கு வரக்கூடாது. ஆய்வு நிலையில் ஆய்வுக்குரிய செய்திகள் பாலும் ஆய்வுக்குரிய செய்திக்குரியர்பாலும் நிறை நலம் சார்ந்த நம்பிக்கை இருத்தல் வேண்டும். மதிப்புணர்வு இருத்தல் வேண்டும். அதே போழ்து எல்லை கடந்த சார்பு நிலையும் ஆகாது.

பழங்காலத்தில் வணிகர்கள் பொருளை எடை போடும் முன் எடைப்போடப் பயன்படும் துலாக்கோலை (தராசை) முதலில் எடுத்துத் துலாக்கோலைச் சமநிலையில் காட்டுவர்; பின் எடை போடுவர். அதுபோல முதலில் அனைவரும் ஒத்த கருத்தினர் என்ற சமநிலை உணர்வு தேவை. இன்று நம்முடைய வாழ்க்கையில் துறைதோறும் நடுவு நிலை முறை பிறழ்ந்து கிடக்கிறது. அரசியலில், சொல்லும் கருத்துக்கள் ஆராயப்படாமல் நபர்கள் ஆராயப்படுகின்றனர்.

"சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி." (குறள் – 118) என்பது திருக்குறள்.

"சமன்செய்து", என்றார் திருவள்ளுவர். அதாவது இயல்பாகச் செய்யும் மனப்போக்கு இல்லை. வாழ்வியல் இல்லை என்பது தெளிவு. இந்தப் பூவுலகை மலைகள், கடல்கள் பிரிதிருக்கும் பிரிவுகளை விடக் கோடிக்கணக்கான பிரிவுகளை மனிதன் படைத்திருக்கின்றான். மனிதன் படைத்த பேதா பேதங்கள் – பிரிவுகள் ஆகியன பெற்றெடுத்த நச்சுப் பேய்கள்தானே ‘சுவர்’ ‘காவல்’ ‘வேலி’ ஆகியன. இவற்றிலிருந்து மனிதகுலம் என்று மீளும்? சீர்தூக்கும் கோல் என்றார்.

ஆம்! ஆய்வில் கூடச் சீர்மை பார்த்தலே நோக்கம். தீமை தூக்குவது இல்லை. தீமை தெரியாது! கண்ணிற்குப் படாது! ஆதலால், "கோடாமை" என்றார். ஆம்! மனிதர்கள் அவசரமாகக் கட்சி கட்டிக்கொண்டு, நியாயங்களைப் பார்க்காமல் ஒரு பக்கம் சாய்ந்து விடுகிறார்கள். இது மரபன்று. எந்தக் காரணத்தை முன்னிட்டும் நியாயத்தின்பால் நிற்காமல் சாய்ந்துவிடக் கூடாது. இத்தகு வாழ்க்கையே மக்களாட்சி முறையை வளர்க்கும்: அறநெறியை வளர்க்கும்.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework