பொறுத்தாற்றல், பண்புகள் அனைத்திற்கும் மேம்பட்ட பண்பாகும். பொறுத்தாற்றல் பண்பால் பகைமை தடுக்கப்படுகிறது; திருத்தங்கள் காண்பதற்குரிய வாயில்கள் தோன்றுகின்றன; வலிமையும் தகுதியும் வளர்கின்றன. மகிழ்ச்சியின் திறவுகோலாகப் பொறுத்தாற்றும் பண்பு விளங்குகிறது.

உணர்ச்சிவசப்படுதல், அளவுக்கும் அதிகமான தன்மானம், பெருமை ஆகியன பற்றிக் கவலைப்படுதல், தேவையில்லா ஒரு மதிப்புபுணர்ச்சியைத் தமக்குத்தாமே உருவாக்கிக் கொள்ளுதல் ஆகியன பொறுத்தாற்றும் பண்புக்குத் தடையானவை. சில நாள் பொறுத்திருந்தாலே பல சாதனைகள் செய்யலாம். காலம் கருதிக் காத்திருப்பின் சல்லடையில்கூடத் தண்ணீர் எடுத்துச் செல்ல இயலும். ஆம்! தண்ணீர் பனிக்கட்டியாக உறையும்வரை காத்திருக்க வேண்டும்.

வாழ்க்கையின் இயல்பே கூடிச்சேர்ந்து வாழ்தல்தான் அதுவே மானுட சாதியினுடைய படைப்பின் நோக்கம். கூடிவாழ்தல் எளிதான செயலா? அம்மம்ம! உயிர்க்குலம் அனைத்தினோடும் கூடக் கூடி வாழ்தல் இயலும். பாம்பினைப் பழக்கிடலாம். ஆனால், மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது எளிமையான காரியமன்று!

மானுட ஜாதி தன் பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்தே சண்டை போடுதலைத் தொடங்கிவிட்டது. ஆம்! கலகங்களையும் சண்டைகளையும் நேரிடும் அவமானங்களையும் கண்டு வருந்துதல் கூடாது. திருத்தங்கள் காண முயலவேண்டும். குற்றங்களுக்குத் திருத்தம் காணும் முயற்சியிலேயே கூட்டுறவு வெற்றிபெற இயலும். திருத்தம் காண இயலாது போனால், பொறுமையாக இருந்தாக வேண்டும். சண்டைபோட்டுக் கொள்வதும் பிரிவதும் விரும்பத்தக்கதல்ல.

பொறுத்தாற்றும் பண்பை வளர்த்து உறுதிபடுத்துவது நம்மை வளர்த்துக் கொள்வதேயாகும். வலிமை, தூய்மை யாரிடம் இருக்கிறதோ அவர்களை எந்த இழிவும் சென்றடையாது. அவதூறுகள் நெருப்பிடை வீழ்ந்த உமியெனக் கருகிப்போம். சிலர் கோழை என்று கூறி ஆறுதல் பெறுவார். அதனால் நமகென்ன குறை?

குப்பை கூளம் இல்லாத இடத்தில் நெருப்பு பற்றி எரியுமா என்ன? ஆதலால் பொருத்தாற்றும் பண்பைப் பெற வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்; தூய்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தகுதிகள் பலவற்றையும் முயன்று அடைய வேண்டும்.

இப்படி வளர்ந்த நிலையில் காட்டும் பொறுமைதான் பொறுமை; வலிமை சார்ந்த பொறுமை. தகுதி மிகுதியும் உடையோரின் பொறுமையே வாழ்வளிக்கும்; வையகத்தின் வரலாற்றை இயக்கும் திருக்குறள்,

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல்." என்று கூறி வழிநடத்துகிறது.

ஆம்! மற்றவர் பழிதூற்றினால் அதனால் உண்மையில் விளைவது; தகுதியில்லாதவராக இருந்தால் சினம், பகை, கலகம்; தகுதிமிகுதியும் உடையோராக இருந்தால் திருத்தம் காண முயற்சி செய்வர்; பழிதூற்றுவாரையும் வாழ்த்துவர்.

பரபரக்க வேண்டாம்; உணர்ச்சி வேண்டாம்; தேர்ந்து தெளிக! குப்பைகள் அகற்றப்பட வேண்டியவையே! குப்பைகள் உடைய இடங்கள் அகற்றப்படுவன அல்ல; அகற்றவும் இயலாது. குற்றங்களைத் திருத்துக. பயன் கொள்ள முயலுக. இவ்வழி பொறுத்தாற்றும் பண்பு வளரும்; நாளும் குற்றங்களிலிருந்து விடுதலை பெறுக; வளர்க! வலிமை பெற்றுயர்ந்திடுக; தகுதிகள் பலவும் பெற்று உயர்ந்திடுக; எல்லாரும் அணைவர். கூடி வாழ்ந்திடலாம். கோடி நன்மை பெறலாம்.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework