இந்த உலக படைப்புகள் எல்லாம் பயனை மையமாகக் கொண்டனவேயாம். பயன்படுத்தப்படாதன கழிகின்றன. தவறாகப் பயன்படுத்தப்படுவன தீமையை விளைவிக்கின்றன. இந்த உலகில் ஆற்றல் வாய்ந்தவைகளில் "சொல்" தலையாயது. சொல்லப்படுவது சொல். அறிந்து ஆராய்ந்து சொல்லப்பெறும் சொற்கள் பயனைத்தரும்.

பயனுடைய சொற்களே சொல். பயனற்றவைகள் 'சொல்' என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப் பெறுதல் இல்லை. வறுமை, பொருள் சார்ந்தது மட்டுமல்ல. சொற்களிலும் வறுமை உண்டு என்பது இளங்கோவடிகள் கருத்து. "வறுமொழியாளர்" என்று சிலம்பு கூறுகிறது. பயன் மிகுதியும் இல்லாத சொற்கள் என்பது சிலம்பின் கருத்து. "வெற்றெனத் தொடுத்தல்" என்று இலக்கணம் கூறும்.

தீய சொற்கள் அவற்றைச் சொல்வோருக்குத் தீமை விளைவிப்பதும் உண்டு. திருக்குறள், சொற்களில் அதிகக் கவனம் செலுத்துகிறது. இனியவை கூறல், புறங்கூறாமை போன்ற அதிகாரங்கள் மூலம் விளக்கியுள்ளது. இவை போக "பயனில் சொல்லாமை" என்று தனியே விரித்தும் கூறியது. பயனில்லாத சொற்களையும் சொல்லக்கூடாது என்பதேயாகும்.

வாழ்க்கை, பயனைக் குறிக்கோளாக உடையது. வாழ்க்கையின் குறிக்கோளை அடைதற்குரிய கருவிகளில் ஒன்று சமூகம். சமூக அமைப்பும் உறவும் சொற்களால் இயக்குவிக்கப்படுகின்றன. சமூகத்தில் இயங்கி நம்முடைய வாழ்க்கைக்கும் ஆக்கம் தரும் நெறிகளைப் பற்றி அறிவது "அரும் பயன்" ஆகும்.

அற்ப மகிழ்ச்சி; சிறுபொழுது இன்பக் கிளர்ச்சிகளுக்காகச் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. நீண்ட நெடிய பயன் வேண்டும். அரிய பயனாக இருந்தால் மட்டும் போதாது. திருவள்ளுவருக்குக் கொள்ளை ஆசை! பெரும் பயன் வேண்டும் என்கிறார்.

வாழ்க்கையின் அருமைக்குரிய பயன்களை ஆராய்ந்து அறிக! அந்த, அறிய பயன்களைத் தரக்கூடிய சொற்களைத் தேர்வு செய்க. அச்சொற்களையே சொல்லுக.

"அரும்பய னாயும் அறிவினார் சொல்லார் பெரும்பய னில்லாத சொல்." (திருக்குறள் 198)

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework