சமுதாய அமைப்பில் ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். ஆதலால், ஒவ்வொருவரும் பிறிதொருவருக்குச் சமுதாயத்தில் பலருக்குக் கடமைப்பட்டிருக்கின்றனர். இந்தக் கடமைப்பாட்டினை அறிந்து கொண்டு ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் இசைந்து கூடி நட்புறவுப் பாங்கில் வாழ்தல் வேண்டும்.

தம்தம் நிலையை வற்புறுத்தாமல் மற்றவர்கள் நிலையறிந்து அவர்களுடன் கூடி வாழ்தல் ஒத்தறிந்து வாழ்தல். பூத பௌதிக மாற்றங்களால் உடல் நலம் கேடுறாது பார்த்துக் கொள்வதுபோல நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களை நமது உணர்வு, ஒழுங்கு, ஒழுக்கங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் மற்றவர்களுடைய நலனுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் வாழ்தல் ஒத்தறிந்து வாழும் வாழ்க்கை; ஒப்புரவு வாழ்க்கை, தீமை பயக்கும் வாயில்களை அடைத்துவிடும். நல்வாழ்க்கைக்குரிய இயல்புகளை குணங்களைத் தந்து ஊக்குவிக்கும்.

ஊருணி, ஊராருக்கு உண்ணும் தண்ணீர் தருவதால் "ஊருணி" என்று பெயர் பெற்றது. ஊரார் ஊருணித் தண்ணீரை அள்ளிக் குடிப்பதால் "ஊருணி" என்று புகழ் பெற்றது.

பல ஊருணிகளில் ஊற்று வளம் இருப்பதில்லை. அதுபோல் அறிவுடையானிடம் செல்வம் இருப்பின் அச்செல்வம் ஊராருக்குப் பயன்படும். ஆயினும் அறிவறிந்த ஆளுமை இன்மையால் செல்வம் அவனிடம் ஊற்றுப் போலப் பெருகி வளராது. இருக்கும் வரையில் கொடுப்பான். பின் அவனும் ஓர் இரவலனாகி விடுவான். அதனால்தான் நம் நாட்டில் வாழ்ந்த புலவர்கள் வறுமையில் வாழ்ந்தார்கள் போலும்!

ஊருணியை ஊர் பயன்படுத்தாது போனால் மேலும் ஊருணி கெடும். அதுபோல அறிவுடையோனின் செல்வம் வழங்கப் பெறாது போனால் அழிந்து போகும். ஆதலால், ஊருணி நீரைப் போல இழந்து போகாமல் மேலும் செல்வ வளம் பெற உழைப்பு வேண்டும். அறிவறிந்த ஆள்வினைதான் செல்வத்தை வளர்க்கும்; பாதுகாக்கும்! மற்றவர்க்கு வழங்கி வாழ்வதில் உலகந்த்ழீஇய புகழ் கிடைக்கும்.

இந்த உலகத்தில் எல்லாரும் உண்டு உடுத்து மகிழ்ந்து வாழ இயலும். ஆனால் நம் ஒவ்வொருடைய பேராசையின் காரணமாக இருந்து வரும் இல்லாத நிலை ஏன்? பேராசைதான் காரணம்! பேராசை இழப்பில்தான் மகிழ்ச்சி தொடங்குகிறது. ஆதலால், எல்லாரும் வாழ உரிமை உடையவர்கள் என்ற கருத்து முதலில் ஏற்கப் பெறுதல் வேண்டும். பாவேந்தன் பாரதிதாசன் சொன்ன,

"உலகன் உண்ண உண்! உடுத்த உடுத்து!" என்ற பெருநெறியே, ஒப்புரவு நெறி!

இந்த ஒப்புரவு நெறி சார்ந்த வாழ்க்கைக்கு ஈடாக ஒரு வாழ்க்கை நெறி இந்த உலகத்திலும் இல்லை! தேவர் உலகத்திலும் இல்லை! ஆம்! ஒருவரை ஒருவர் சார்ந்தும் இணைந்தும் உறவு கொண்டாடி வாழ்தலே ஒப்புரவு வாழ்க்கை!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework