சத்தியம், உண்மை என்ற சொற்களால் உணர்த்தப் பெறும் ஒன்றைத் திருக்குறள் ‘வாய்மை’ என்று கூறுகிறது. "சத்" என்ற சொல்லுக்குப் பொருள் "உள்ளது" என்பது. உள்ளது என்ற சொல் உண்மை என்ற பொருளை மட்டும் தரும்.

உண்மை கூறுதல் என்பது உள்ளது உள்ளவாறே (The Principle of Sincerely) என்ற பொருளில் வழங்கப் பெறுகிறது, கடவுள் தமது இரண்டு கரங்களில் ஒன்றில் உண்மையையும் பிறிதொன்றில் உண்மையைத் தேடும் ஆர்வத்தையும் தாங்கியிருக்கிறான் என்ற அனுபவ உரை ஒன்று உண்டு.

எனவேதான் "சத்தியமே கடவுள்" என்ற கொள்கையுடைய அண்ணல் காந்தியடிகள் சத்தியத்தைத் தேடுவதிலும் சத்தியத்தைத் தமது வாழ்க்கையில் சோதிப்பதிலும் செலவழித்தார்.

உண்மை கூறுதல் என்ற அடிப்படையில் உள்ளதை உள்ளவாறு கூறலாமா? அங்ஙனம் கூறுவது மனித குலத்திற்கு நலம்பயக்குமா? பல சமயங்களில் உள்ளதை உள்ளவாறு கூறுதல் நலம் பயப்பதில்லை என்பதே வாழ்வியல் உண்மை. மாறாக எதிர் விளைவுகளையே உருவாக்கி வந்துள்ளன.

உள்ளதை உள்ளவாறே கூறுதல் பற்றி, மகாவீரர், "நீ உண்மை பேசுவதினால் ஒருவர் மனம் நோகும். உன் பேச்சு ஒருவனுக்குப் பிடிக்காது பிற உயிர்களுக்குத் துன்பம் நேரும் என்றால் அதைப் பேசாதிருத்தல் நலம். அது உண்மையாக இருந்தாலும் உனக்குப் பாவமே நல்கும்" என்று கூறுவதை அறிக.

ஆதலால், உண்மையை உள்ளவாறே கூறுதல் நலம் பயப்பதில்லை என்பதையறிந்த திருவள்ளுவர், திருக்குறளில், சத்தியம், உண்மை என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் "வாய்மை" என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார்.
வாழ்க்கையின் நோக்கு, தீமைகளைப் புறங்கண்டு நலங்காண்பதேயாகும். தீமை கொடிது. எந்த ஒன்றையும் விடத் தீமைக் கொடிது. ஆதலால் உள்ளதை உள்ளவாறே கூறுகிறோம் என்று, தொற்றுநோய் பரப்பும் கிருமிகளைப் போலச் செய்திகளை வதந்திகளைப் பரப்பும் மனிதர்கள் காலராவை விடக் கொடியவர்கள்.

ஒருவர் பிறிதொருவரைபற்றித் தகாதன சொன்னாலும் அதை அப்படியே மற்றவரிடம் சொல்லிக் கோபத்தையும், கலகத்தையும் வளர்ப்பது உண்மையன்று; பொய்; சின்னத்தனம். எனவே, திருக்குறள்,

"வாய்மை யெனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்" (திருக்குறள் – 291) என்று கூறுகிறது.

வாய்மை என்று கூறப்படுவது யாது? எவ்வுயிர்க்கும் எந்தவிதத் தீமையையும் செய்யாததே வாய்மை. எவ்வுயிர்க்கும் தீமையைத் தராததே வாய்மை. வாய்மையல்லாதன கூறுபவர்களையும் நல்லன பல சொல்லித் தேற்றுவோம்.

நம் செவிக்கு வரும் செய்திகளில் உள்ள வாய்மையைத் தேறித் தெளிய வேண்டும். செவிப்புலனுக்கு வரும் செய்திகளில் வாய்மையினைக் கண்டுணராமல் கோபித்தலும் பகை கொள்ளலும் நட்பு பாராட்டலும் நன்றல்ல. ஆதலால் எவ்வுயிர்க்கும் நல்லன தருவதே வாய்மை.

வாய்மையே பேசுக. எந்தச் சொல்லிலும் பொருளை மட்டும் நாடாமல் வாய்மையை நாடுக. நமக்கும் பிறருக்கும் ஒரு தீங்கும் இல்லாத நலம் தரும் சொற்களையே கூறுக.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework