"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று" (திருக்குறள் – 108)

என்பது திருக்குறள். இந்த 'நன்றி' என்ற சொல் இன்று உலக வழக்கில் சாதாரண வழக்கிற்கே கையாளப்பெறுகிறது. அதாவது, ஒருவர் செய்த உதவியை மறத்தல் கூடாது. உதவியைப் பெற்றவுடன் நன்றி கூறுதல் வேண்டும் என்ற வழக்கு மேலோங்கி நிற்கிறது.

இன்று எந்த நிகழ்ச்சியானாலும் "நன்றி கூறல்" என்பது ஒரு சடங்காக இடம் பெற்றுவிட்டது. இது தவறன்று. ஆயினும், திருக்குறளின் பொருள் வழி நன்றி என்ற சொல் ஆழமான பொருள் தருவது. நன்று என்ற சொல்லிலிருந்து நன்றி என்ற சொல் பிறக்கிறது. அதாவது 'நல்லது' என்ற சொல்தான் நன்றி என்ற சொல்லாக வழங்கப் பெறுகிறது.

ஒருவர் ஒருவருக்குச் செய்த நல்லதை மறத்தல் கூடாது என்பது கருத்து. அந்த நல்லதைத் தொடர்ந்து சிந்தையிலும் செயலிலும் காப்பாற்றி வரவேண்டும் என்பதே கருத்து. அப்படி காப்பாற்றிக் கொண்டு வாழ்வதே நல்லது செய்தவருக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் தருவதாகும்.

ஒருவர், ஒருவருக்கு நல்லது செய்தல் என்பது விரிந்த அளவுடையது. சிந்தையால், சொல்லால், செயலால் நன்மை செய்யலாம். ஆனால், இன்று நன்மை என்பதைப் பொருள் அளவினதாகச் சுருக்கி விட்டார்கள்.

பொருளைவிட, நல்லறிவு கொள்ளுதல், நன்னடை நல்குதல் முதலியனவும் நல்லனவேயாம். இத்தகு நல்லனவற்றைப் பாராட்டி ஏற்று ஒழுகுதலே நன்றி. ஒரோ வழி நன்றல்லாதவற்றை மறந்தால் தான் நெஞ்சிறுக்கம் கொஞ்சம் குறையும். ஆதலால், அன்றே மறப்பது நன்று என்றார்.

புறநானூறு, திருக்குறளை அறநூல் என்று பாராட்டுகிறது ஏன்? அறங்களில் சிறந்தது நன்றி மறவாமை. இந்த நன்றி மறவாமை என்ற சிறந்த பண்பின் வாயிலாக பல்வேறு நற்பண்புகள் தோன்றி வளர வாய்ப்புள்ளது.

ஆதலால், நற்பன்புகளுக்குள் சிறந்த பண்பு நன்றி மறவாமை. நன்றி பாராட்டுதல் ஒரு நல்லொழுக்கம். நன்றி பாராட்டுதல் ஒரு சிறந்த வாழ்க்கை நெறி.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework