நடுவு நிலைமை ஓர் உயர்ந்த குணம்; பண்பு. நடுவு நிலைமை என்பது சார்புகள் காரணமாக முடிவு எடுக்காத கொள்கையாகும். எவரையும் எந்தச் சூழ்நிலையைப் பற்றியும் கவலைப்படாமல், யார் யார் சொன்னாலும் விருப்பும் வெறுப்பும் இன்றிக் கேட்டு, ஆய்வு செய்து விவாதித்து முடிவு எடுத்தலாகும்.

நடுநிலைப் பண்பு, நீதியைச் சார்ந்தது. நீதி உயிர்; நடுவு நிலைமை உடல், நடுவு நிலைக் குணம் அனைத்துக் குணங்களுக்கும் தாய் போன்ற முதல்நிலைக் குணம்.
மாந்தர் இயல்பாகச் சஞ்சலப்புத்தி உடையவர்கள். வெற்றியையும் இன்பத்தையுமே விரும்புவர் தோல்வி, துன்பங்கள் கண்டு அஞ்சுவர். இதனால், மாந்தர் இச்சை பலவுடையவராக இருப்பர். விழிப்புணர்வு மிகமிகக் குறைவு; ஏமாறவும் செய்வர். இதனால் தற்காப்பு, தன்முனைப்பு ஆகியனவற்றின் வயப்பட்டு நடுநிலை பிறழ்வார்.

நிறுவை செய்யப் பயன்படுவது தராசு. தராசின் தட்டுக்கள் இரண்டும் சம எடையில் இருப்பதை துலாக்கோலை – நிறுக்கும் கருவியைத் தூக்கிச் சரிபார்த்துக் கொண்டுதான் நிறுவை செய்ய வேண்டும். நிறுவைத் தட்டுக்களில் ஏதாவது ஒன்றில் ஒரு பாக்கு அளவு புளி ஒட்டிக்கொண்டிருந்தால்கூட நிறுவை பாதிக்கும்.

அதுபோல் நாம் பலருடைய கருத்துக்களையும் கேட்க வேண்டும். கேட்பதற்குமுன் நமது மனநிலையைச் சார்புகளிலிருந்து விடுதலை செய்து கொண்டும், சொல்லுவோர் அனைவரிடத்திலும் சமநிலை மனோபாவத்துடனும் கேட்க வேண்டும். ஒரு மனிதனுடைய வார்த்தைகளைக் கேட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. இருகட்சிகளையும் – பல கட்சிகளையும் அமைதியாய்க் கேட்க வேண்டும். கேட்கும் செய்திகளைச் சார்பின்றி விருப்பு வெறுப்பின்றிக் கேட்க வேண்டும்.

நமக்கு என்று ஒரு கருத்து இருந்தாலும் அக்கருத்தை காய்தல், உவத்தலின்றிக் கேட்க வேண்டும். இப்படிக் கேட்க மறுத்தால் சுதந்திரம் பறிபோகும்; சமத்துவக் கொள்கைக்கு ஊறு விலையும்; நடுநிலைமை பிறழ்வதால் சமுதாயத்தில் சீர்குலைவு தோன்றும்; மாந்தர் பாதுகாப்பை இழந்துவிட்டதாக உணர்வர். இது வரவேற்கத்தக்கதல்ல.

ஆதலால் மனிதர்களை, சாதிகளை, மதங்களை இவற்றை மையமாகக் கொள்வது மனிதம்-நன்று-தீது என்ற அடிப்படையிலேயே நடுவுநிலைமை வளர வேண்டும்.

"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி" (திருக்குறள் – 118)

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework