183.
ஆஅம் எனக்கெளி(து) என்றுலகம் ஆண்டவன்
மேஎம் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
தோஒம் உடைய தொடங்குவார்க்(கு) 'இல்லையே
தாஅம் தரவாரா நோய்'.
184.
நற்பால சுற்றாரும் நாடாது சொல்லுவர்
இற்பாலர் அல்லார் இயல்பின்மை நோவதென்?
கற்பால் கலங்கருவி நாட! 'மற் றியரானும்
சொற்சோரா தாரோ இல்'.
185.
பூந்தண் புனற்புகார்ப் பூமிகுறி காண்டற்கு
வேந்தன் வினாயினான் மாந்தரைச் - சான்றவன்
கொண்டதனை நாணி மறைத்தலால் தன் 'கண்ணிற்
கண்டதூஉம் எண்ணிச் சொலல்'.
186.
ஒருவன் உணராது உடன்றெழுந்த போருள்
இருவ ரிடைநட்பான் புக்கால் - பெரிய
வெறுப்பினால் போர்த்துச் செறுப்பின் 'தலையுள்
குறுக்கண்ணி யாகி விடும்'.
187.
எனைப்பலவே யாயினும் சேய்த்தாற் பெறலின்
தினைத்துணையே யானும் அணிக்கோடல் நன்றே
இனக்கலை தேன்கிழிக்கும் மேகல்சூழ் வெற்ப!
'பனைப்பதித்(து) உண்ணார் பழம்'.
188.
மனங்கொண்டக் கண்ணும் மருவில செய்யார்
கனங்கொண்(டு) உரைத்தவை காக்கவே வேண்டும்
சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க
'இனங்கழு வேற்றினார் இல்'.
189.
கடுப்பத் தலைக்கீறிக் காலும் இழந்து
நடைத்தாரா என்பதூஉம் பட்டு - முடத்தோடு
பேர்பிறி தாகப் பெறுதலால் 'போகாரே
நீர்குறி தாகப் புகல்'.
190.
சிறியதாய கூழ்பெற்றுச் செல்வரைச் சேர்ந்தார்
பெரிதாய கூழும் பெறுவர் - அரிதாம்
'இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால்
கிடப்புழியும் பெற்று விடும்'.
191
புன்சொல்லும் நன்சொல்லும் பொய்யின்(று) உணர்கிற்பார்
வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?
புன்சொல் இடர்ப்படுப்ப தல்லால் ஒருவனை
'இன்சொல் இடர்ப்படுப்ப தில்'.
192.
மெய்ந்நீர ராகி விரியப் புகுவார்க்கும்
பொய்ந்நீர ராகிப் பொருளை முடிப்பார்க்கும்
எந்நீர ராயினும் ஆகு அவரவர்
'தந்நீர ராதல் தலை'.
193.
யாவரே யாயினும் இழந்த பொருளுடையார்
தேவரே யாயினும் தீங்கோர்ப்பர் - பாவை
படத்தோன்று நல்லாய்! 'நெடுவேல் கெடுத்தான்
குடத்துளும் நாடி விடும்'.
194.
துயிலும் பொழுதத்(து) உடைஊண்மேற் கொண்டு
வெயில்விரி போழ்தின் வெளிப்பட்டா ராகி
அயில்போலுங் கண்ணாய்! அடைந்தார்போல் காட்டி
'மயில்போலும் கள்வர் உடைத்து'.
195.
செல்லற்க சேர்ந்தார் புலம்புறச் செல்லாது
நில்லற்க நீத்தார் நெறியொரீப் - பல்காலும்
நாடுக தான்கண்ட நுட்பத்தைக் கேளாதே
'ஓடுக ஊரோடு மாறு'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework