இன்னா நாற்பது
- விவரங்கள்
- கபிலர்
- தாய்ப் பிரிவு: சங்க இலக்கியம்
- பதினென்கீழ்கணக்கு நூல்கள்
கபிலர் என்னும் புலவர் இயற்றியது இன்னா நாற்பது என்னும் நூல். நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற் தொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் நான்கு கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை. இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பன. இவ்விரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளும் இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன. நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலும் கூட 'இன்னா', இனிதே என்னும் சொற்கள் அமைந்துள்ளன. இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் 'இன்னா' என எடுத்துக் கூறுதலின் 'இன்னா நாற்பது' எனப் பெயர்பெற்றது. இந்நூலை இயற்றியவர் கபில தேவர். ஆசிரியர் தமது கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால் இவர் சமயப் பொது நோக்கு உடையவர் என எண்ண இடமுண்டு.
(பாட வேற்றுமைகள் @ % & குறிகள் கொண்டு காட்டப்பட்டுள்ளது )
கடவுள் வாழ்த்து
முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை@ யுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா% வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு.
@பொற்பன வெள்ளியை %மன்றப்பின்னாது
நூல்
பந்தமில் லாத மனையின் வனப்பின்னா
தந்தையில் லாத புதல்வ னழகின்னா
அந்தண ரில்லிருந் தூணின்னா@ வாங்கின்னா
மந்திரம் வாயா விடின். 1
@ ஊணின்னாது
பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா
ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா
பாத்தில் புநடைவை யுடையின்னா@ வாங்கின்னா
காப்பாற்றா வேந்த னுலகு. 2
@உடையின்னாது
கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா
நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா
கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா
தடுமாறி வாழ்த லுயிர்க்கு. 3
எருதி லுழவர்க்குப் போகீர மின்னா
கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா
திருவுடை யாரைச் செறலின்னா வின்னா
பெருவலியார்க் கின்னா செயல். 4
சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா
உறைசேர்@ பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா
முறையின்றி யாளு மரசின்னா வின்னா
மறையின்றிச் செய்யும் வினை. 5
@புரைசேர்
அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா@
மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா
இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா
கொடும்பா டுடையார்வாய்ச் சொல். 6
@ கடு மொழியின்னா
ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா
நாற்ற மிலாத மலரி னழகின்னா
தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா
மாற்ற மறியா னுரை. 7
பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா
நகையாய நண்பினார் நாரின்மை யின்னா
இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா
நயமின் மனத்தவர் நட்பு. 8
கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா
வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா
வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா
பண்ணில் புரவி பரிப்பு. 9
பொருளணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா
இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா
அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா
பொருளில்லார் வண்மை புரிவு. 10
உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னா@
இடனில் சிறியரோ டியர்த்தநண் பின்னா
இடங்கழி யாளர் தொடர்பின்னா வின்னா
கடனுடையார் காணப் புகல். 11
@மனைவி தொழி லின்னா
தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா
வலைசுமந் துண்பான் பெருமித மின்னா
புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னா
முலையிள்ளாள் பெண்மை விழைவு. 12
மணியிலாக் குஞ்சரம் வேந் தூர்த லின்னா
துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா
பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா
பிணியன்னார் வாழு மனை. 13
வணரொலி@ யைம்பாலார் வஞ்சித்த லின்னா
துணர்தூங்கு மாவின் படுபழ மின்னா
புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா
உணர்வா ருணராக் கடை. 14
@வணரொளி
புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா
கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா
இல்லாதார் நல்ல விருப்பின்னா@ வாங்கின்னா
பல்லாரு ணாணப் படல். 15
@விழைவின்னா
உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா
நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனியின்னா
கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா
எண்ணிலான் செய்யுங் கணக்கு. 16
ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா
மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா
நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா
ஈன்றாளை யோம்பா விடல். 17
உரனுடையா னுள்ள மடிந்திருந்த லின்னா
மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா
சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா
மனவறி யாளர்@ தொடர்பு. 18
@அகம்வறியாளர்
குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா
நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா
நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா
கலத்தல் குலமில் வழி. 19
மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா
வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா
மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா
மூரி யெருத்தா லுழவு. 20
ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா
பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா
மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா
ஒத்திலாப் பார்ப்பா னுரை. 21
யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா
ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா
தேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா
கான்யா@ றிடையிட்ட வூர். 22
@ கானாறு
சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா
துறையிருந் தாடை கழுவுத லின்னா
அறைபறை யன்னவர்@ சொல்லின்னா வின்னா
நிறையில்லான் கொண்ட தவம். 23
@அறைபறை யாயவர்
ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா
தீமை யுடையா ரயிலிருந்த னன்கின்னா
காமமுதிரி னுயிர்க்கின்னா@ வாங்கின்னா
யாமென் பவரொடு நட்பு. 24
@உயிர்க்கின்னாது
நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னா@
ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா%
கட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னா
நட்ட கவற்றினாற் சூது. 25
@ இடுக்க ணனிகண்டா னன்கின்னா
% கண்டாற் பெரிதின்னா
பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா
அரியவை செய்து மெனவுரைத்த லின்னா
பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா
பெரியோர்க்குத் தீய செயல். 26
பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா
கிழமை யுடையார்க்@ களைந்திடுத லின்னா
வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா
இளமையுண் மூப்புப் புகல். 27
@கிழமை யுடையாரை
கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா
வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா
இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா
கல்லாதான் கோட்டி கொளல். 28
குறியறியான் மாநாக@ மாட்டுவித்த லின்னா
தறியறியா% னீரின் பாய்ந்தாட& லின்னா
அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா
செறிவிலான் கேட்ட மறை. 29
@மானாகம் %இன்னா தறிவறியான்
& கீழ்நீர்ப்பாய்ந்தாடுதல்
நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா@
கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா
ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா
கடும்புலி வாழு மதர். 30
@ நெடுமார்நீள் கோட்டுயர் பாஅய்த லின்னா
பண்ணமையா யாழின்கீழப் பாடல் பெரிதின்னா
எண்ணறியா மாந்தர்@ ஒழுக்குநாட் கூற்றின்னா
மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா
தண்மை யிலாளர்% பகை. 31
@ எண்ணறிய மாந்தர் %தன்மையிலாளர்
தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா
முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா
நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா
தொன்மை யுடையார் கெடல். 32
கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா
முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா@
வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா
கள்ள மனத்தார் தொடர்பு. 33
@ நடக்கி னனியின்னா
ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த@ லின்னா
விழுத்தகு நூலும்% விழையாதார்க் கின்னா
இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா
கழிப்புவாய் மண்டிலங் கொட்பு. 34
@ ஒழுக்கமிலாளர் குறைவுரைத்தல்
%விழித்தகுநூலும்
எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா
குழலி னினிய@ மரத் தோசைநன் கின்னா
குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா
அழகுடையான் பேதை யெனல். 35
@குழலினிய
பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா
நெடுமாட நீணகர்க் கைத்தின்மை யின்னா
வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா
கெடுமிடங் கைவிடுவார் நட்பு. 36
நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து@ போகுத லின்னா
அறியாண் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல். 37
@துறையறியா நீரிழிந்து
பிறர்மனையாள் பின்னோர்க்கும் பேதைமை யின்னா
மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா
வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா
திறனிலான் செய்யும் வினை. 38
கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா
கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா
கொடுத்த விடாமை கவிக்கின்னா வின்னா
மடுத்துழிப் பாடா விடல். 39
அடக்க முடையவன் மீளிமை யின்னா
துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா
அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா
அடக்க வடங்காதார் சொல். 40