227.
எவ்வம் துணையாய்ப் பொருள்முடிக்கும் தாளாண்மை
தெய்வம் முடிப்புழி என்செய்யும்? - மொய்கொண்டு
பூப்புக்கு வண்டார்க்கும் ஊர! 'குறும்பியங்கும்
கோப்புக் குழிச்செய்வ(து) இல்'.
228.
சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்
பட்ட விருத்தம் பலவானால் - பட்ட
பொறியின் வகைய கருமம் அதனால்
'அறிவினை ஊழே அடும்'.
229.
அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
திங்களும் தீங்குறுதல் காண்டுமால் - பொங்கி
அறைப்பாய் அருவி அணிமலை நாட!
'உறற்பால யார்க்கும் உறும்'.
230.
கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேற்சென் றதனால் - விழுமிய
வேண்டினும் வேண்டா விடினும் 'உறற்பால
தீண்டா விடுதல் அரிது'.
231.
ஆஅய் வளர்ந்த அணிநெடும் பெண்ணையை
ஏஎய் இரவெல்லாம் காத்தாலும் - வாஅய்ப்
படற்பாலார் கண்ணே படுமே 'பொறியும்
தொடற்பாலார் கண்ணே தொடும்'.
232.
முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார்
பிற்பெரிய செல்வம் பெறலாமோ? - வைப்போடு
இகலிப் பொருள்செய்ய எண்ணியக்கால் என்னாம்?
'முதல்இலார்க்(கு) ஊதியம் இல்'.
233.
பன்னாளும் நின்ற இடத்தும் கணிவேங்கை
நன்னாளே நாடி மலர்தலால் - மன்னர்
உவப்ப வழிபட் டொழுகினும் செல்வம்
'தொகற்பால போழ்தே தொகும்'.
234.
குரைத்துக் கொளப்பட்டார் கோளிழுக்குப் பட்டுப்
புரைத்தெழுந்து போகினும் போவர் - அரக்கில்லுள்
பொய்யற்ற ஐவரும் போயினார் 'இல்லையே
உய்வதற்(கு) உய்யா இடம்'.
235.
இதுமன்னும் தீதென்று இசைந்ததூஉம் ஆவார்க்கு
அதுமன்னும் நல்லதே யாகும் - மதுமன்னும்
வீநாறு கானல் விரிதிரை தண்சேர்ப்ப !
'தீநாள் திருவுடையார்க்(கு) இல்'
236.
ஆற்றுந் தகைய அரசடைந்தார்க் காயினும்
வீற்று வழியல்லால் வேண்டினும் கைகூடா
தேற்றார் சிறியர் எனல்வேண்டா 'நோற்றார்க்குச்
சோற்றுள்ளும் வீழும் கறி'.
237.
ஆகும் சமயத்தார்க்கு ஆளவினையும் வேண்டாவாம்
போகும் பொறியார் புரிவும் பயனின்றே
ஏகல் மலைநாட ! என்செய்தாங்கு என்பெறினும்
'ஆகாதார்க்(கு) ஆகுவது இல்'.
238.
பண்டுருத்துச் செய்த பழவினை வந்தெம்மை
இன்றொறுக் கின்ற தெனவறியார் - துன்புறுக்கும்
மேவலரை கோவதென்? மின்னேர் மருங்குலாய் !
'ஏவலாள் ஊருஞ் சுடும்'.
239.
சுடப்பட்டு உயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்கால்
செயிரறு செங்கோல் செலீஇயனான் 'இல்லை
உயிருடையார் எய்தா வினை.'
240.
நனியஞ்சத் தக்க அவைவந்தால் தங்கண்
துனியஞ்சார் செய்வ(து) உணர்வார் - பனியஞ்சி
வேழம் பிடிதழூஉம் வேய்சூழ் மலைநாட!
'ஊழம்பு வீழா நிலத்து'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework