205.
தந்தம் பொருளும் தமர்கண் வளமையும்
முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக
அந்தண் அருவி மலைநாட! சேணோக்கி
'நந்துநீர் கொண்டதே போன்று'.
206.
மறந்தானும் தாமுடைய தாம்போற்றின் அல்லால்
சிறந்தார் தமரென்று தேற்றார்கை வையார்
கறங்குநீர்க் காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப !
'இறந்தது பேர்தறிவார் இல்'.
207.
அமையா இடத்தோர் அரும்பொருள் வைத்தால்
இமையாது காப்பினும் ஆகா - இமையோரும்
அக்காலத்(து) ஓம்பி அமிழ்துகோட் பட்டமையால்
'நற்காப்பின் தீச்சிறையே நன்று'.
208.
ஊக்கி உழந்தொருவர் ஈட்டிய ஒண்பொருளை
நோக்குமின் என்றிகழ்ந்து நொள்வியார் கைவிடுதல்
போக்கில்நீர் தூஉம் பொருகழித் தண்சேர்ப்ப!
'காக்கையைக் காப்பிட்ட சோறு'.
209.
தொடிமுன்கை நல்லாய்அத் தொக்க பொருளைக்
குடிமகன் அல்லான்கை வைத்தல் - கடிநெய்தல்
வேரி கமழும் விரிதிரைத் தண்சேர்ப்ப!
'மூரியைத் தீற்றிய புல்'.
210.
முன்னை யுடையது காவாது இகந்திருந்து
பின்னையஃ தாராய்ந்து கொள்குறுதல் - இன்னியல்
மைத்தடங்கண் மாதராய்! அஃதாதல் 'வெண்ணெய்மேல்
வைத்து மயில்கொள்ளு மாறு'.
211.
கைவிட்ட ஒண்பொருள் கைவரவு இல்லென்பார்
மெய்ப்பட்ட வாறே உணர்ந்தாரால் - மெய்யா
மடம்பட்ட மானோக்கின் மாமயில் அன்னாய்!
'கடம்பெற்றான் பெற்றான் குடம்'.
212.
கடங்கொண்ட ஒண்பொருளைக் கைவிட் டிருப்பார்
இடங்கொண்டு தம்மினே - என்றால் தொடங்கிப்
பகைமேற்கொண் டார்போலக் 'கொண்டார் வெகுடல்
நகைமேலும் கைப்பாய் விடும்'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework