முயற்சி
- விவரங்கள்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- பழமொழி நானூறு
149.
எமக்குத் துணையாவார் வேண்டுமென் றெண்ணித்
தமக்குத் துணையாவார்த் தாந்தெரிதல் வேண்டா
பிறர்க்குப் பிறர்செய்வ துண்டோ மற்றில்லை
'தமக்கு மருத்துவர் தாம்'.
150.
கற்றதொன்(று) இன்றி விடினும் கருமத்தை
அற்ற முடிப்போன் அறிவுடையான் - உற்றியம்பும்
நீத்தநீர்ச் சேர்ப்ப! 'இளையோனே ஆயினும்
மூத்தோனே ஆடு மகன்'.
151.
வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து
வாளாண்மை யாலும் வலியராய்த் தாளாண்மை
தாழ்க்கு மடிகோள் இலராய் 'வருந்தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று'.
152.
ஒன்றால் சிறிதால் உதவுவதொன்(று) இல்லையால்
என்றாங்(கு) இருப்பின் இழுக்கம் பெரிதாகும்
அன்றைப் பகலேயும் வாழ்கலார் நின்றது
'சென்றது பேரா தவர்'.
153.
இனியாரும் இல்லாதார் எம்மிற் பிறர்யார்
தனியேம்யாம் என்றொருவர் தாமடியல் வேண்டா
முனிவில ராகி முயல்க 'முனிவில்லார்
முன்னிய(து) எய்தாமை இல்'.
154.
தற்றூக்கித் தன்துணையும் தூக்கிப் பயன்தூக்கி
மற்றவை கொள்வ மதிவல்லார் - அற்றன்றி
'யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகி விடும்'.
155.
வீங்குதோள் செம்பியன் சீற்றம் விறல்விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால் - ஆங்கு
முடியும் திறத்தால் முயல்க தாம் 'கூரம்பு
அடியிழுப்பின் இல்லை அரண்'.
156
எங்கண் ஒன்றில்லை எமரில்லை என்றொருவர்
தங்கண் அழிவதாம் செய்யற்க - எங்காணும்
நன்கு திரண்டு 'பெரியவாம் ஆற்றவும்
முன்கை நெடியார்க்குத் தோள்'.
157.
நிலத்தின் மிகையாம் பெருஞ்செல்வம் வேண்டி
நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து
நிலத்து நிலைகொள்ளாக் காலரே காணின்
'உலக்கைமேல் காக்கை' என்பார்.
158.
தலைக்கொண்ட தங்கருமம் தாமடி கொண்டு
கடைப்பிடி யில்லாதார்பால் வைத்துக் - கடைப்பிடி
மிக்கோடி விட்டுத் திரியின் அது 'பெரிது
உக்கோடிக் காட்டி விடும்'
159.
தம்மால் முடிவதனைத் தாமாற்றிச் செய்கல்லார்
பின்னை ஒருவரால் செய்வித்தும் என்றிருத்தல்
சென்னீர் அருவி மலைநாட ! 'பாய்பவோ
வெந்நீரும் அடாதார் தீ.
160.
முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்
'இழுகினான் ஆகாப்ப தில்லையே முன்னம்
எழுதினான் ஓலை பழுது'.
161.
முடிந்தற்(கு) இல்லை முயற்சி முடியாது
ஒடிந்ததற்(கு) இல்லை பெருக்கம் - வடிந்தற
வல்லதற்(கு) இல்லை வருத்தம் 'உலகினுள்
இல்லதற்(கு) இல்லை பெயர்'.