124.
ஒட்டிய காதல் 'உமையாள் ஒரு பாலக்
கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே'
விட்டாங்கு அகலா முழுமெய்யும் கொள்பவே
நட்டாரை ஒட்டி யுழி.
125.
புரையின்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
உரையும் பொருள்முடிவும் ஒன்றால் - உரைபிறிது
கொண்டெடுத்துக் கூறல் கொடுங்கழித் தண்சேர்ப்ப!
'ஒன்றேற்று வெண்படைக்கோள் ஒன்று'.
126.
விலங்கேயும் தம்மோ(டு) உடனுறைதல் மேவும்
கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா - இலங்கருவி
தாஅய் இழியும் மணலைநாட! 'இன்னாதே
பேஎயோ டானும் பிரிவு'.
127.
இனியாரை உற்ற இடர்தீர் உபாயம்
முனியார் செயினும் மொழியால் முடியா
துனியால் திரையுலாம் நூங்குநீர்ச் சேர்ப்ப!
'பனியால் குளநிறைதல் இல்'.
128.
தாம்நட்(டு) ஒழுகுதற்குத் தக்கார் எனல்வேண்டா
யார்நட்பே யாயினும் நட்புக் கொளல்வேண்டும்
கானாட்டு நாறும் கதுப்பினாய் ! 'தீற்றாதோ
நாய்நட்டால் நல்ல முயல்?'
129.
தீர்ந்தேம் எனக்கருதித் தேற்றா(து) ஒழுகித்தாம்
ஊர்ந்த பரிவும் இலராகிச் - சேர்ந்தார்
பழமை கந்தாகப் பரியார் புதுமை
'முழநட்பிற் சாணுட்கு நன்று'.
130.
கொழித்துக் கொளப்பட்ட நண்பின் அவரைப்
பழித்துப் பலர்நடுவண் சொல்லாடார் - என்கொல்?
விழித்தலரும் நெய்தல் துறைவா! 'உரையார்
இழித்தக்க காணிற் கனா'.
131.
நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட்ட டார்களைக்
கண்கண்ட குற்றம் உளவெனினும் காய்ந்தீயார்
பண்கொண்ட தீஞ்சொல் பணைத்தோளாய்! 'யாருளரோ
தங்கன்று சாக்கறப் பார்'.
132.
தம்தீமை இல்லாதார் நட்டவர் தீமையையும்
எம்தீமை என்றே உணர்பதாம் - அந்தண்
பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப!
'ஒருவர் பொறைஇருவர் நட்பு'.
133.
தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்பனப் பட்டார்க்(கு)
உற்ற குறையை உரைப்பதாம் - தெற்ற
அறையார் அணிவளையாய்! தீர்தல் உறுவார்
'மறையார் மருத்துவர்க்கு நோய்'.
134.
முட்டின்(று) ஒருவர் உடைய பொழுதின்கண்
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டலர்தார் மார்ப! கலியூழிக் காலத்துக்
'கெட்டார்க்கு நட்டாரோ இல்'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework