அவையறிதல்
- விவரங்கள்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- பழமொழி நானூறு
17.
கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண்
வேட்கை அறிந்துரைப்பார் வித்தகர் - வேட்கையால்
வண்டு வழிபடரும் வாட்கண்ணாய் ! 'தோற்பன
கொண்டு புகாஅர் அவை'.
18.
ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு
இருவரா வாரும் எதிர்மொழியல் பாலா
பெருவரை நாட! சிறிதேனும் 'இன்னாது
இருவர் உடனாடல் நாய்'.
19.
துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை உரைக்கப் படற்பாலான் - முன்னி
மொழிந்தால் மொழியறியான் கூறல் 'முழந்தாள்
கிழிந்தானை மூக்குப் பொதிவு'.
20.
கல்லாதும் கேளாதும் கற்றாரவை நடுவண்
சொல்லாடு வாரையும் அஞ்சற்பாற்(று) - எல்லருவி
பாய்வரை நாட! 'பரிசழிந் தாரோடு
தேவரும் ஆற்றல் இலர்'.
21.
அகலம் உடைய அறிவடையார் நாப்பண்
புகலறியார் புக்கவர் தாமே - இகலினால்
வீண்சேர்ந்த புன்சொல் விளம்பல் அதுவன்றோ
'பாண்சேரி பற்கிளக்கு மாறு.
22.
மானமும் நாணும் அறியார் மதிமயங்கி
ஞானம் அறிவார் இைப்புக்குத் தாமிருந்து
ஞானம் வினாஅய் உரைத்தல் 'நகையாகும்
யானைப்பல் காண்பான் புகல்'.
23.
அல்லவையுள் தோன்றி அலவலைத்து வாழ்பவர்
நல்லவையுள் புக்கிருந்து நாவடங்கக் கல்வி
அளவிறந்து மிக்கார் அறிவெள்ளிக் கூறல்
'மிளகுளு வுண்பான் புகல்'
24.
நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப்
புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல் - புல்லார்
புடைத்தறுகண் அஞ்சுவான் 'இல்லுள்வில் லேற்றி
இடைக்கலத்து எய்து விடல்'.
25.
நடலை இலராகி நன்றுணரார் ஆய
முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்
உடலா ஒருவற்கு உறுதி உரைத்தல்
'கடலுளால் மாவடித் தற்று'.