சிவாஜி தாழ்ந்த ஜாதி! அரசியலே அறியாதவன்! ஹ§ம்! யார்? தானும் நாடும் ஒன்றெனக் கண்டு தன்னையே தந்த மன்னன் சிவாஜி தாழ்ந்த ஜாதியா? மன்னர் குலத்தில் பிறக்காதவன், பரம்பரை உரிமை இல்லாதவன், மானம் காக்கும் குடியானவன், மகுடம் தாங்க முடியாதா? தார்தாரியார் தந்த புரவியில் அமர்ந்து ஆர்த்தெழுந்த சிவாஜியைக் கண்டு நாட்டுக்குடைய நல்லவனென்றும் போர்ப்பாட்டு முழக்கும் மன்னவனென்றும், ஆரத்தியெடுத்த மக்களேங்கே? ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும் அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று காத்திருந்த இந்த ஆணவக்காரர்கள் எங்கே? உறையிருந்த வாளெடுத்து ஒவ்வொரு முறையும், மராட்டியம் என்றே முழங்கி இரையெடுக்கத் துடித்த வேங்கை போல் எங்கே பகைவர் எங்கே பகைவர் என்று தேடி கறை படியாத என் அன்னை நாட்டை காப்பேன்! காப்பேன்! என சூளுரைத்து இந்த நாடு என் சொந்த நாடு. இந்த மக்கள் என் சொந்த மக்கள், உயிரினும் இனிய என் மக்களுக்காக ஓடினேன். பகைவரைத் தேடினேன். வாள் கொண்டு சாடினேன். வெற்றியை நாடினேன். பகைத் தேடி வெல்ல மட்டும் உரிமை உண்டாம். முடி சூட்டிக் கொள்ள மட்டும் தடை செய்வாராம்.


அரசியலை நான் அறியாதவனா? ஹ… அரசு வித்தைகள் புரியாதவனா? ஹ… ஹ… எவனோ வந்தவன் சொன்ன வாய்ப்புரை கேட்டு நொந்து போக நான் நோயாளி அல்ல! என்னை விட்டொருவன் இந்த தரணியாளும் தகுதியை அடைந்துவிட்டானா? ஏமாந்த மக்களிடம் ஏற்றம் கொண்டு நாமேதான் நாடொன்று தலைதூக்கித் திரியும் அந்த புல்லுருவிகள் எனது முடியைத் தடுக்கிறார்களா அல்லது தங்கள் முடிவைத் தெடுகிறார்களா?

அதோ போர்ணா! கொட்டிய முரசும், கூவிய படையும் எட்டிய பரியும் எழுந்து நடந்து கோட்டை மதிலை சுற்றி வளைத்து வேட்டையாடி வெற்றி படைத்து, வாழ்க சிவாஜி வாழ்கவென்று வாழ்த்துரை கூறி வழங்கியபோது, ஓஹோ என்று எதிரொலித்ததே இந்தக் கோட்டைத்தான்.

அதோ புரந்தர்! போகாதீர்கள்! படை பலம் அதிகம்! கோட்டை முன்னால் தடைகளும் அதிகம். ஒற்றன் தடுத்தான் ஒருநாள் என்னை! இடுப்பொடிந்தோரெல்லாம் இல்லத்திருங்கள்; கோழைகள் விலக வீரர்கள் வரட்டும். ஏறு முன்னேறு என எக்காளமிட்டு பகைவர் தலைகளை கனியென கொய்து முரசும் ஒலித்து நான் முழக்கிய கோட்டை இதுதான். புரந்தர்! இதுதான்!

அதோ ராஜகிரி! ஆடுவார் ஆட்டமும், பாடுவார் பாட்டுமாய் அந்நியர் களித்திருக்க யாரது மண்ணிலே யாரது நாடகம் பார்ப்போம் என்று நான் படையெடுக்க, என்னடா முடியும் உன்னால் என்று எதிரிகள் கொக்கரிக்க, இதுவும் முடியும்… இன்னமும் முடியும் என்று நான் வாளெடுக்க பெட்டையர் கூட்டம் உள்ளம் கலங்க மராட்டிய மண்டல மக்கள் களிக்க நான் கட்டுக்காத்த கோட்டை இதுதான்.

அதோ கல்யாண்! கண்ணீர்விட்டு கதறிய பெண்கள், ஐயோ என்று அலறிய குழந்தைகள், முடிவறியாது தவித்த முதியோர் கொடியோர் கையில் சிக்கிக் கிடந்தனர்! பகைவர் பொடிப் பொடியாக போர்க்கலம் ஏந்தி மராட்டியக் கொடியை நான் ஏற்றிய கோட்டை இதுதான்.

என்னையா கேட்டார்கள்; நீ யாரென்று! எவன் இந்த மண்ணனுக்கு சொந்தக்காரனோ! எவனது நெற்றியில் எப்போதும் ரத்தத் திலகம் திகழ்ந்து கொண்டேயிருக்குமோ, அவனைப் பார்த்து வாழ வந்த வஞ்சகக் கூட்டம் கேலி பேசுகிறதாம்! தாழ்ந்த ஜாதி… அரசியலை அறியாதவன் என்று! இதுதான் முடிவென்றால்… இல்லையெனக்கு முடியென்றால், நான் காத்த கோட்டைகள் வேண்டுமோ? கொத்தளங்கள் வேண்டுமோ? வெற்றி பாட்டு வேண்டுமோ? பரவசம் வேண்டுமோ? கரையான் புற்றென்ன கருநாகங்களுக்கு சொந்தமோ? அடிபடட்டும் கோட்டைகள்! இடியட்டும் மதில் சுவர்கள்!

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework