பரத்தையர் சேரியின் தோற்றம்
- விவரங்கள்
- திருத்தக்கதேவர்
- தாய்ப் பிரிவு: ஐம்பெருங்காப்பியங்கள்
- சீவக சிந்தாமணி
துப்பு உறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத் தூதின் ஒப்ப ஒன்று ஆதி ஆக ஆயிரத்தோர் எட்டு ஈறாச் செப்பித் தம் செம்பொன் அல்குல் நலம் வரைவின்றி விற்கும் உப்பு அமை காமத் துப்பின் அவர் இடம் உரைத்தும் அன்றே |
107 |
குங்குமம் மெழுகிச் சார்பும் திண்ணையும் குயிற்றி உள்ளால் தங்கும் மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி எங்கும் நல் சுவர்கள் தோறும் நாடகம் எழுதி ஏற்பப் பொங்கு மென் மலர் பெய் சேக்கை பொலிந்து விண் புகற்சி உண்டே |
108 |
தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த காசு சூழ் கோவை முத்தம் கதிர் முலை திமிர்ந்த சாந்தம் வாச நல் பொடிகள் மாலை வண்டு உண வீழ்ந்த முற்றம் ஆசைப் பட்டு அரசு வைக அருங் கடி கமழும் அன்றே |
109 |
அம் சிலம்பு ஒலியோடு அல்குல் கலை ஒலி அணிந்த முன்கைப் பஞ்சி மெல் விரலில் பாணி பண் ஒலி பவழச் செவ்வாய் அஞ்சி நேர்ந்து உயிர்க்கும் தேன் சேர் குழல் ஒலி முழவின் ஓசை துஞ்சல் இல் ஓசை தம்மால் துறக்கமும் நிகர்க்க லாதே |
110 |
தேன் உலாம் மதுச் செய் கோதை தேம் புகை கமழ ஊட்ட வான் உலாம் சுடர்கண் மூடி மா நகர் இரவு செய்யப் பால் நிலாச் சொரிந்து நல்லார் அணிகலம் பகலைச் செய்ய வேனிலான் விழைந்த சேரி மேல் உலகு அனையது ஒன்றே |
111 |