களிமுகச் சுரும்பு உண் கோதை கயில் எருத்து அசைந்து சோர
வளிமுகச் சுடரின் நில்லா மனத்தொடு மயங்கி இப்பால்
சுளிமுகக் களிறு அனான்தன் சொல் நய நெறியில் போய
கிளி முகக் கிளவிக்கு உற்றது இற்று எனக் கிளக்கல் உற்றேன்.
298

 

எஃகு என விளங்கும் வாள் கண் எறி கடல் அமிர்தம் அன்னாள்
அஃகிய மதுகை தன்னால் ஆய் மயில் ஊரும் ஆங்கண்
வெஃகிய புகழினான் தன் வென்றி வெம் முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பிணையின் மாழ்கி இறுகி மெய்ம் மறந்து சோர்ந்தாள்.
299

 

மோடு உடை நகரின் நீங்கி முது மரம் துவன்றி உள்ளம்
பீடு உடையவரும் உட்கப் பிணம்பல பிறங்கி எங்கும்
காடு உடை அளவை எல்லாம் கழுகு இருந்து உறங்கும் நீழல்
பாடு உடை மயில் அம் தோகை பைபய வீழ்ந்தது அன்றே.
300

 

மஞ்சு சூழ்வதனை ஒத்துப் பிணப்புகை மலிந்து பேயும்
அஞ்சும் அம் மயானம் தன்னுள் அகில் வயிறு ஆர்ந்த கோதை
பஞ்சிமேல் வீழ்வதே போல் பல் பொறிக் குடுமி நெற்றிக்
குஞ்சி மா மஞ்ஞை வீழ்ந்து கால் குவித்து இருந்தது அன்றே.
301

 

வார் தரு தடம் கண் நீர் தன் வன முலை நனைப்ப ஏல் பெற்று
ஊர் கடல் அனைய காட்டுள் அச்சம் ஒன்றானும் உள்ளாள்
ஏர் தரு மயில் அம் சாயல் இறைவனுக்கு இரங்கி ஏங்கிச்
சோர் துகில் திருத்தல் தேற்றாள் துணை பிரி மகன்றில் ஒத்தாள்.
302

 

உண்டு என உரையில் கேட்பார் உயிர் உறு பாவம் எல்லாம்
கண்டு இனித் தெளிக என்று காட்டுவாள் போல ஆகி
விண்தொட நிவந்த கோயில் விண்ணவர் மகளின் சென்றாள்
வெண்தலை பயின்ற காட்டுள் விளங்கு இழை தமியள் ஆனாள்.
303

 

இருள் கெட இகலி எங்கும் மணிவிளக்கு எரிய ஏந்தி
அருள் உடை மனத்த வாகி அணங்கு எலாம் வணங்கி நிற்பப்
பொரு கடல் பருதி போலப் பொன் அனான் பிறந்த போழ்தே
மருள் உடை மாதர் உற்ற மம்மர் நோய் மறைந்தது அன்றே.
304

 

பூங்கழல் குருசில் தந்த புதல்வனைப் புகன்று நோக்கித்
தேம் கமழ் ஓதி திங்கள் வெண் கதிர் பொழிவதே போல்
வீங்கு இள முலைகள் விம்மித் திறந்து பால் பிலிற்ற ஆற்றாள்
வாங்குபு திலகம் சேர்த்தித் திலகனைத் திருந்த வைத்தாள்.
305
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework