வான் உறை வெள்ளி வெற்பின் வாரணவாசி மன்னன்
ஊன் உறை பருதி வெள் வேல் உலோகமா பாலன் என்பான்
தேன் உறை திருந்து கண்ணிச் சிறுவனுக்கு அரசு நாட்டிப்
பால் நிறக் குருகின் ஆய்ந்து பண்ணவர் படிவம் கொண்டான்.
395

 

வெம் சினம் குறைந்து நீங்க விழுத் தவம் தொடங்கி நோற்கும்
வஞ்சம் இல் கொள்கையாற்குப் பாவம் வந்து அடைந்தது ஆகக்
குஞ்சரம் முழங்கு தீயில் கொள்கையின் மெலிந்து இம் மூதூர்
மஞ்சு தோய் குன்றம் அன்ன மாட வீட்டு அகம் புகுந்தான்.
396

 

உரை விளையாமை மைந்தன் கேட்கிய உவந்து நோக்கி
வரை விளையாடு மார்பன் 'யார் அவன் வாழி' என்ன
'விரை விளையாடும் தாரோய் யான்' என விரும்பித் தீம்பால்
'திரை விளை அமிர்தம் அன்ன கட்டுரை செல்க' என்றான்.
397

 

பூத் தின்று புகன்று சேதாப் புணர் முலை பொழிந்த தீம்பால்
நீத்து அறச் செல்ல வேவித்து அட்ட இன் அமிர்தம் உண்பான்
பாத்தரும் பசும் பொன் தாலம் பரப்பிய பைம் பொன் பூமி
ஏத்த அரும் தவிசின் நம்பி தோழரொடு ஏறினானே.
398

 

புடை இரு குழையும் மின்னப் பூந்துகில் செறிந்த அல்குல்
நடை அறி மகளிர் ஏந்த நல் அமிர்து உண்ணும் போழ்தின்
இடை கழி நின்ற என்னை நோக்கிப் போந்து ஏறுக என்றான்
கடல் கெழு பருதி அன்ன பொன் கலத்து எனக்கும் இட்டார்.
399

 

கை கவி நறு நெய் பெய்து கன்னல் அம் குடங்கள் கூட்டிப்
பெய் பெய் என்று உரைப்ப யானும் பெருங் கடல் வெள்ளிக் குன்றம்
பெய்து தூர்க்கின்ற வண்ணம் விலாப் புடை பெரிதும் வீங்க
ஐயன் அது அருளினால் யான் அந்தணர் தொழிலன் ஆனேன்.
400

 

சுரும்பு உடை அலங்கல் மாலைச் சுநந்தையும் துணைவன் தானும்
விரும்பினர் எதிர் கொண்டு ஓம்ப வேழ வெந்தீயின் நீங்கி
இருந்தனன் ஏம முந் நீர் எறி சுறவு உயர்த்த தோன்றல்
கரும்பு உடைக் காளை அன்ன காளை நின் வலைப் பட்டு என்றான்.
401

 

நிலம் பொறுக்கலாத செம் பொன் நீள் நிதி நுந்தை இல்லம்
நலம் பொறுக்கலாத பிண்டி நான் முகன் தமர்கட்கு எல்லாம்
உலம் பொறுக்கலாத தோளாய் ஆதலால் ஊடு புக்கேன்
கலம் பொறுக்கலாத சாயல் அவர் உழை நின்னைக் கண்டேன்.
402

 

ஐயனைக் கண்ணில் காண யானைத்தீ அதகம் கண்ட
பை அணல் நாகம் போல வட்க யான் பெரிதும் உட்கித்
தெய்வம் கொல் என்று தேர்வேற்கு அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல்
மொய் குரல் முரசம் நாணும் தழங்கு குரல் முழங்கக் கேட்டேன்.
403

 

கோட்டு இளந் திங்கள் சூழ்ந்து குலவிய திருவில் போல
மோட்டு ஒளி முத்தம் சூழ்ந்து முருகு கொப்பளிக்கும் தாரோய்
கேட்டு அளப் பரிய சொல்லும் கிளர் ஒளி வனப்பும் நின்னைச்
சேட்டு இளஞ் சிங்கம் அன்னாய் சாதகம் செய்த என்றான்.
404
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework