கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர் முலைக் கன்னி மார்பம்
முன்னினர் முயங்கின் அல்லான் முறி மிடை படலை மாலைப்
பொன் இழை மகளிர் ஒவ்வாதவரை முன் புணர்தல் செல்லார்
இன்னதான் முறைமை மாந்தர்க்கு என மனத்து எண்ணினானே.
483

 

கோட்டு இளங் களிறு போல்வான் நந்தகோன் முகத்தை நோக்கி
மோட்டுஇள முலையினாள் நின் மட மகள் எனக்கு மாமான்
சூட்டொடு ஒடு கண்ணி அன்றே என் செய்வான் இவைகள் சொல்லி
நீட்டித்தல் குணமோ என்று நெஞ்சு அகம் குளிர்ப்பச் சொன்னான்.
484

 

தேன் சொரி முல்லைக் கண்ணிச் செந் துவர் ஆடை ஆயர்
கோன் பெரிது உவந்து போகிக் குடை தயிர் குழுமப் புக்கு
மான் கறி கற்ற கூழை மௌவல் சூழ் மயிலைப் பந்தர்க்
கான் சொரி முல்லைத் தாரான் கடிவினை முடிக என்றான்.
485

 

கனிவளர் கிளவி காமர் சிறு நுதல் புருவம் காமன்
குனி வளர் சிலையைக் கொன்ற குவளைக் கண் கயலைக் கொன்ற
இனி உளர் அல்லர் ஆயர் எனச் சிலம்பு அரற்றத் தந்து
பனி வளர் கோதை மாதர் பாவையைப் பரவி வைத்தார்.
486

 

நாழியுள் இழுது நாகு ஆன் கன்று தின்று ஒழிந்த புல் தோய்த்து
ஊழி தொறு ஆவும் தோழும் போன்று உடன் மூக்க என்று
தாழ் இரும் குழலினாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி
மூழை நீர் சொரிந்து மொய் கொள் ஆயத்தியர் ஆட்டினாரே.
487

 

நெய் விலைப் பசும் பொன் தோடும் நிழல் மணிக் குழையும் நீவி
மை விரி குழலினாளை மங்கலக் கடிப்புச் சேர்த்திப்
பெய்தனர் பிணையல் மாலை ஓரிலைச் சாந்து பூசிச்
செய்தனர் சிறு புன் கோலம் தொறுத்தியர் திகைத்து நின்றார்.
488

 

ஏறம் கோள் முழங்க ஆயர் எடுத்துக் கொண்டு ஏகி மூதூர்ச்
சாறு எங்கும் அயரப் புக்கு நந்தகோன் தன்கை ஏந்தி
வீறு உயர் கலசம் நல்நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான்
பாறு கொள் பருதி வைவேல் பதுமுக குமாரற்கு என்றே.
489
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework