பொழிலிலுள்ள மரங்கள், மகிழ், தேமா, சுரபுன்னை, புன்கு முதலியன

மருவினியன மதுவிரிவன மலரணிவன வகுளம்
திருமருவிய செழுநிழலன செங்குழையன தேமா
வரிமருவிய மதுகரமுண மணம்விரிவன நாகம்
பொரிவிரிவன புதுமலரென புன்குதிர்வன புறனே


சந்தனம் சண்பகம் குரா அசோகம் ஆகிய மரங்கள்

நிழனகுவன நிமிர்தழையன நிறைகுளிர்வன சாந்தம்
எழினகுவன விளமலரென வெழுசண்பக நிகரம்
குழனகுவன மதுகரநிரை குடைவனபல குரவம்
அழனகுவன வலர்நெரிதர வசை நிலையவ சோகம்


இரதம் இருப்பை தாழை புன்னை ஆகியவை

எழுதுருவின வெழுதளிரென விணரணிவன விரதம்
இழுதுருவின கொழுமலரிடை யெழில்பொலிவன மதுகம்
கழுதுருவின கஞலிலையன கழிமடலின் கைதை
பொழுதுருவின வணிபொழிலின பொழி தளிரென புன்னை


மல்லிகை முல்லை முதலிய கொடி வகைகளின் மாண்பு

வளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடு மெளவல்
நளிர்கொடியன நறுவிரையக நறுமலரன நறவம்
குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி
ஒளிர்கொடியன வுயர்திரளினோ டொழு கிணரன வோடை


கோங்கு முதலியன

குடையவிவன கொழுமலரின் குளிர்களின கோங்கம்
புடையவிழ்வன புதுமலரன புன்னாகமொ டிலவம்
கடியவிழ்வன கமழ் பாதிரி கலிகளிகைய சாகம்
இடையவிழ்வன மலரளவில விதுபொழிலின தியல்பே


பொழிலில் வாழும் வண்டு ,புள் முதலியவற்றின் சிறப்பு

மதுமகிழ்வன மலர்குடைவன மணிவண்டொடு தும்பி
குதிமகிழ்வன குவிகுடையன நுகிகோதுபு குயில்கள்
புதுமகிழ்வன பொழிலிடையன புணர்துணையன பூவை
விதிமகிழ்பவர் மதிமகிழ்வுற விரவுற்றன விரிவே


மரீசி பூங்காவில் உள்ள பொய்கைக்கரையை அடைதல்

அதுவழகுத கைமகிழ்வுற வலர்தாரவ னடைய
இதுவழகிய திவண்வருகென வெழுபுள்ளொலி யிகவா
விதிவழகுடை விரியிலையிடை வெறிவிரவிய வேரிப்
பொதியவிழ்வன புதுமலரணி பொய்கைக்கரை புக்கான்


பொய்கைக்கரை மரீசியை வரவேற்றல்

புணர்கொண்டெழு பொய்கைக்கரை பொரு திவலைகள் சிதறாத்
துணர்கொண்டன கரைமாநனி தூறுமலர்பல தூவா
வணர்கொண்டன மலலுற்றலை வளர்வண்டின மெழுவா
இணர்கொண்டெதி ரெழுதென்றலி னெதிர்கொண்டதவ் விடமே


விஞ்சையர் தூதுவனாகிய மரீசி அசோகமரம் ஒன்றைக் காணுதல்

புனல்விரவிய துளிர்பிதிர்வது புரிமுத்தணி மணல்மேல்
மினல்விரவிய சுடர்பொன்னொளிர் மிளிர்வேதிகை மிகையொண்
கனல்விரவிய மணியிடைகன கங்கணியணி திரளின்
அனல்விரவிய வலரணியதொ ரசோகம்மது கண்டான்


மரீசி அசோகமரத்தின் நிழலையடைந்ததும், துருமகாந்தன் கல்லிருக்கையைக் காட்ட மரீசி
திகைத்தல்

அதனின்னிழ லவனடைதலு மதுகாவல னாவான்
பொதியின்னவிழ் மலர்சிதறுபு பொலிகென் றுரை புகலா
மதீயின்னொளி வளர்கின்றதொர் மணியின்சிலை காட்ட
இதுவென்னென இதுவென்னென வினையன்பல சொன்னான் 10


வேறு - நிலாநிழற்கல்லில் அமர்ந்திருக்குமாறு துருமகாந்தன் மரீசியை வேண்டிக்கொள்ளுதல்

மினற்கொடி விலங்கிய விலங்கன்மிசை வாழும்
புனற்கொடி மலர்த்தொகை புதைத்தபொலி தாரோய்
நினக்கென வியற்றிய நிலாநிழன் மணிக்கல்
மனக்கினிதி னேறினை மகிழ்ந்திருமி னென்றான்


இதுபொழிற்கடவுளுக்காக ஆக்கப் பெற்ற பொன்னிடம் அன்றோ? என்று மரீசி கேட்டல்

அழற்கதி ரியங்கற வலங்கிண ரசோகம்
நிழற்கதிர் மரத்தகைய தாக நினை கில்லேன்
பொழிற்கடவுள் பொன்னிடமி தென்னைபுகு மாறென்
றெழிற்கதிர் விசும்பிடை யிழிந்தவன் மொழிந்தான்


துருமாந்தகன் மரீசிக்குப் பதிலுரத்தல்

நிலாவளர் நிழற்கதிர் நிமிர்ந்தொளி துளும்பும்
சிலாதல மிதற்குரிய தெய்வமெனல் வேண்டா
அலாதவ ரிதற்குரிய ரல்லரவ ராவிர்
உலாவிய கழற் றகையி னீரென வுரைத்தான்


அங்கத நிமித்திகன் கூறியவற்றைக் கூறத்தொடங்குதல்

என்னவிது வந்தவகை யென்னினிது கேண்மின்
நன்னகரி தற்கிறைவன் முன்னநனி நண்ணித்
தன்னிகரி கந்தவ னங்கத னெனும் பேர்ப்
பொன்னருவி நூல்கெழுபு ரோகித னுரைத்தான்


தூதன் வருவான் என்று கூறியதைச் சொல்லுதல்

மின்னவிர் விளங்குசுடர் விஞ்சையுல காளும்
வின்னவி றடக்கைவிறல் வேலொருவன் வேண்டி
மன்னநின் மகற்கொரு மகட்கரும முன்னி
இன்னவ னினைப்பகலு ளீண்டிழியு மென்றான்

அச்சுவக்கிரீவனைக் கொல்வான் என்று அங்கத நிமித்திகன் கூறியதாகக் கூறல்

மடங்கலை யடுந்திற னெடுந்தகைதன் மாறாய்
அடங்கல ரடங்கவடு மாழியஃ தாள்வான்
உடங்கவ னுடன்றெரி துளும்பவரும் வந்தால்
நடந்தவ னடுங்கவடு நம்பியிவ னென்றான்


தன்னை அரசன் அங்கு இருக்குமாறு அமர்த்தியதைக் கூறுதல்

ஆங்கவன் மொழிந்தபி னடங்கலரை யட்டான்
தேங்கமழ் பொழிற்றிகழ் சிலாதலமி தாக்கி
ஈங்கவ னிழிந்தபி னெழுந்தெதிர்கொ ளென்ன
நீங்கல னிருந்தன னெடுந் தகையி தென்றான்


மரீசி தூது வந்து பொழிலில் தங்கியுள்ளமையை யுணர்ந்த அரசன் தூதுவனின் வழிப்பயணத்
துன்பை மாற்றுமாறு நான்கு நங்கையரை அனுப்புதல்

என்றவன் மொழிந்தபி னருந்தன னிருப்பச்
சென்றவன் வழிச் சிரமை தீர்மினென நால்வர்
பொன்றவழ் பொருந்திழை யணங்கினனை யாரை
மின்றவழ் விளங்குகொடி வேந்தனும் விடுத்தான்


பயாபதி மன்னன் விடுத்த பாவையர் புட்பமாகரண்டப் பூங்காவை நோக்கிப் புறப்படுதல்

பொன்னவிர் மணிக்கலை சிலம்பொடு புலம்ப
மின்னவிர் மணிக்குழை மிளிர்ந்தொளி துளும்பச்
சின்னமலர் துன்னுகுழ றேறலொடு சோர
அன்னமென வல்லவென வன்னண நடந்தார்

நலங்கனி மடந்தையர் நடத்தொறு மிணர்ப்போ
தலங்கலள கக்கொடி யயற்சுடர வோடி
விலங்குபுரு வக்கொடி முரிந்துவெரு வெய்த
மலங்கின விலங்கின மதர்த்தவவர் வாட்கண் 20

அலத்தக மலைத்தன வடித்தல மரற்றும்
கலைத்தலை மலைத்து விரி கின்றகடி யல்குல்
முலைத்தலை முகிழ்த்தொளி துளும்பி யுள முத்தம்
மலைத்தலை மயிற்கண் மருட்டுவர் சாயல்


வண்டுகள் ஒலித்தல்
கணங்கெழு கலாவமொளி காலுமக லல்குல்
சுணங்கெழு தடத்துணை முலைசுமை யிடத்தாய்
வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற்
கிணங்குதுணை யாய்ஞிமி றிரங்கின வெழுந்தே


இடையின் வருத்தங் கண்டு வண்டுகள் இரங்கியெழுந்தனவென்க

முலைத்தொழில் சிலைத்தொழிலி னாருயிர் முருக்கும்
நிலைத்தொழில் வென்றுள நினைத்தொழுக வின்பக்
கலைத்தொழில்கள் காமனெய் கணைத்தொழில்க ளெல்லாம்
கொலைத்தொழில்கொள் வாட்கணி னகத்தகுறி கண்டீர்

துடித்ததுவர் வாயொடுது ளும்புநகை முத்தம்
பொடித்தவியர் நீரொடுபொ லிந்தசுட ரோலை
அடுத்ததில கத்தினொட ணிந்தவள கத்தார்
வடித்தசிறு நோக்கொடுமு கத்தொழில்வ குத்தார்


வண்டுகள் மயக்கம்

பூவிரிகு ழற்சிகைம ணிப்பறவை போகா
வாவிகொள கிற்புகையுள் விம்மியவ ரொண்கண்
காவியென வூதுவன கைத்தலம் விலங்க
மேவியிவை காந்தளென வீழமிக நொந்தார்

சுரும்பொடு கழன்றுள குழற்றொகை யெழிற்கை
கரும்பொடு கலந்துள களித்தவவர் தீம்பண்
நரம்பொடு நடந்துள விரற்றலை யெயிற்றேர்
அரும்பொடு பொலிந்ததுவர் வாயமிர்த மன்றே

கணங்குழை மடந்தையர் கவின்பிற ழிருங்கண்
அணங்குர விலங்குதொ றகம்புலர வாடி
மணங்கம ழலங்கலுடை மைந்தர்த மனந்தாழ்
வணங்கிடை வணங்குதொ றணங்கென வணங்கும்


மைந்தர்கள் கலங்கி மெலிதல்

நெய்யலர் குழற்றொகை நெருப்பினடு மென்பார்
மையலர் நெடுங்கணிவை வல்லகொலை யென்பார்
தொய்யலிள மென்முலையி னீர்சுடுதி ராயின்
உய்யல மெனத்தொழுது மைந்தர்க ளுடைந்தார்


வேறு--
நாம நூற்கலை விச்சை யினன்னெறி யிவைதாம்
தாம நீள்குழற் றளர்நடை யுருவுகொண் டனையார்
வாம மேகலை மடவர லிவர்களை வளர்த்தார்
காம நூலினுக் கிலக்கியங் காட்டிய வளர்த்தார்


அம்மாதர்களின் தன்மை

இனிய வீங்கிய விளமுலை யிவர்களை வளர்த்தார்
பனியின் மென்மல ரலர்ந்தன வுவகையிற் பயில்வார்
கனிப வேலிவர் கடல்விளை யமிர் தெனக் கனிவார்
முனிப வேலிவ ரனங்கனைங் கணையென முனிவார் 30

புலவி தானுமோர் கலவியை விளிப்பதோர் புலவி
கலவி தானுமோர் புலவியை விளைப்பதோர் கலவி
குலவுவார் சிலை மதனனைங் கணையொடு குலவி
இலவு வாயுடை யிளையவ ருடையன விவையே 31

மன்னு வார்சிலை மதனனோர் வடிவுகொண் டிலாதான்
தன்னை நாமுமோர் தகைமையிற் றணத்துமென் றிருப்பார்
என்னை பாவமிங் கிவர்களைப் படைத்தன னிதுவால்
பின்னை யாங்கவன் பிறவிக்கு முதல் கண்ட வகையே.

வாம மேகலை முதனின்று வயிற்றிடை வளைர்ந்த
சாம லேகைகண் மயிர்நிரை யலதல மீது
காம நீரெரி யகத்து கனன்றெழ நிமிர்ந்த
தூம லேகைகள் பொடித்தன துணை முலை யுறவே


சூசுகக் கருமைக்கோர் காரணஞ் சொல்லுதல்

சனங்க டாஞ்சில தவங்களைத் தாங்குது மெனப்போய்
வனங்கள் காப்பவ ருளரென முனிவமற் றன்றேல்
தனங்க டாழ்ந்தவழ் சந்தனக் குழம்பிடை வளர்ந்த
கனங்கொள் வெம்முகங் கறுப்பதென் காரண முரையீர்

தூம மென்புகை துழாவிவண் டிடை யிடை துவைக்கும்
தாம வோதியர் தம்முகத் தனபிறர் மனத்த
காம நீள்சிலை கணையொடு குனிவகண் டாலும்
யாமெ மின்னுயி ருடையமென் றிருப்பதிங் கெவனோ


மங்கையர் மலர்ப்பொழிலை அடைதல்

என்று மைந்தர்க ளிடருற வெழுதிய கொடிபோற்
சென்று கற்பக வனமன செறிபொழி லடைந்தார்
இன்று காமுகர் படையினை யிடர்பட நடந்த
வென்றி காமனுக் குரைத்துமென் றிரைத்தளி விரைந்த


வேறு - பணிப்பெண்கள் கொண்டுவந்த பலவகைப் பொருள்கள்

ஆடைகைத் தலத்தொருத்தி கொண்டதங் கடைப்பைதன்
மாடுகைத் தலத்தொருத்தி கொண்டது மணிக்கலம்
சேடிகைத் தலத்தன செறிமணித் திகழ்வசெங்
கோடிகைத் தலத்தன குளிர்மணிப் பிணையலே


மற்றும் பலர் பலபொருள்களைக் கொண்டுசெல்லுதல்

வண்ணச் சந்தங்க ணிறைந்தன மணிச்செப்பு வளர்பூங்
கண்ணிச் சந்தங்க ணிறைந்தன கரண்டகங் கமழ்பூஞ்
சுண்ணச் சந்தங்க ணிறைந்தன சுடர்மணிப் பிரப்போ
டெண்ணச் சந்தங்கள் படச்சுமந் திளையவ ரிசைந்தார்


மகளிர் பலரின் வருகையைக் கண்ட மரீசி இது விண்ணுலகமே யென்று வியத்தல்

தகளி வெஞ்சுட ரெனத்திகழ் மணிக்குழை தயங்க
மகளிர் மங்கல வுழைக்கலஞ் சுமந்தவர் பிறரோ
டுகளு மான்பிணை யனையவ ருழைச் செல வொளிர்தார்த்
துகளில் விஞ்சையன் றுணிந்தனன் றுறக்கமீ தெனவே


மரீசிக்கு வேண்டுவன புரிதல்

துறக்கம் புக்கவர் பெறுவன விவையெனத் துணியா
வெறிக்கண் விம்மிய விரைவரி தாரவ னிருப்பச்
சிறைக்க ணோக்கமுஞ் சிறுநகைத் தொழில்களுஞ் சுருக்கி
அறைக்கண் மாந்தனுக் கதிதியந் தொழிலினி லமைந்தார்


மங்கையர் வழிபாட்டைப் பெறும் மரீசி தேவனைப்போலத் திகழ்தல்

ஆட்டி னார்வெறி கமழ்வன வணிகிளர் நறுநீர்
தீட்டி னார்நறுஞ் சாந்தமுஞ் சிறிதுமெய் கமழச்
சூட்டி னார்சிலர் நறுமல ரறுசுவை யடிசில்
ஊட்டி னாரவ னமரரு ளொருவனொத் தொளிர்ந்தான்


மாதர்கள் மாட்சிமையை எண்ணி மரீசி மகிழ்ந்திருத்தல்

வயந்த முன்னிய திலகைகல் லியாணிகை வடிவார்
வியந்த சேனைமென் கமலமா லதையென விளம்பும்
இயங்கு பூங்கொடி யனையவ ரியல்புக ணினையா
வயங்கு தொல்புக ழம்பர சரன்மகிழ்ந் திருந்தான்


வேறு - பயாபதி மன்னனுடைய கட்டளைப்படி மரீசியை அழைத்ததற்கு விசய திவிட்டர்கள் புறப்படுதல்

ஆங்கெழிற் பொலிந்தவன் னிருந்தபின் னலங்குதார்
வீங்கெழிற் பொலிந்தானை வேந்தனேவ வீவில்சீர்ப்
பூங்கழற் பொலங் குழைந் திவிட்டனோடு போர்க்கதந்
தாங்கெழிற் பெருங்கையானை சங்க வண்ண னேறினான்


யானைமீது விசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு

தம்பியோடு ங்கவிசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு
பைம்பொ னோடை வீழ்மணிப் பகட்டெருத்த மேறினான்
செம்பொன்மா மலைச்சிகைக் கருங்கொண்மூவி னோடெழூஉம்
வம்பவெண்ணி லாவிங்கு திங்கள்போல மன்னினான்


விசய திவிட்டர்களுடன் பலவகைப் படைகள் புறப்படுதல்

ஆர்த்தபல்லி யக்குழா மதித்தகுஞ்ச ரக்குழாம்
தேர்த்தவீரர் தேர்க்குழாந் திசைத்தபல்ச னக்குழாம்
போர்த்தசா மரக்குழாம் புதைத்தவெண் கொடிக்குழாம்
வேர்த்தவேந்தர் பல்குழாம் விரைந்தகூந்தல் மாக்குழாம்


விசய திவிட்டர்கள் கண்ட விளங்கிழையார் மயக்கம்

பாடுவார்வ ணங்குவார்ப லாண்டுகூறி வாழ்த்துவார்
ஆடுவாரோ டார்வமாந்த ரன்னரின்ன ராயபின்
சூடுமாலை சோரவுந் தொ டாரமாலை வீழவும்
மாடவாயின் மேலெலாம டந்தைமார்ம யங்கினார்

கொண்டலார்ந்த பொன்னொளிக் குழற்கொடிக்கு ழாமனார்
மண்டலந்நி றைந்ததிங்கள் வட்டமொத்த வாண்முகம்
குண்டலங்கொ ழும்பொனோலை யென்றிரண்டு கொண்டணிஇ
வண்டலர்ந்து மாலைதாழ்ந்து மாடவாய்ம றைந்தவே

கூடுதும்பி யூடுதோய்கு ழற்றொகைத்து ணர்துதைந்
தோடுமேலெ ருத்திடைக்கு லைந்தகோதை யோடுலாய்
மாடவாயின் மாலைஞால மாடமேறு மாதரார்
ஆடுமஞ்ஞை கோடுகொள்வ தென்னலாவ தாயினார்

தொண்டைவாய் மடந்தைமார்கள் சுடிகைவட்ட வாண்முகம்
கொண்டகோல நீரவாய கோடிமாட மேலெலாம்
வண்டுசூழ்ந்த பங்கயம லர்க்குழாமி ணைப்படூஉக்
கெண்டையோடு ந்ன்றலைந்த கேழவாய்க்கி ளர்ந்தவே


விசயதிவிட்டர்களை நகரத்து மாதர்கள் காணுதல்

மாலைதாழு மாடவாய் நிலத்தகத்து மங்கைமார்
வேலவாய நெடியகண் விலங்கிநின் றிலங்கலால்
சாலவாயி றாமெலாமொர் தாமரைத் தடத்திடை
நீலமாம லர்க்குழாநி ரந்தலர்ந்த நீரவே


சுண்ணமாரி தூவுவார் தொடர்ந்துசேர்ந்து தோழிமார்
வண்ணவார வளைதயங்கு முன்கைமேல்வ ணங்குவார்
நண்ணிநா ணொழிந்துசென்று நம்பிமார்கள் முன்னரே
கண்ணிதம்மி னென்றிரந்து கொண்டுந்ன்று கண்ணுவார்

பாடுவார்மு ரன்றபண்ம றந்தொர்வாறு பாடியும்
ஆடுவார்ம றந்தணிம யங்கியர்மை யாடியும்
சூடுவான்றொ டுத்த கோதை சூழ்குழன்ம றந்துகண்
நாடுவாய்நி ழற்கணிந்து நாணுவாரு மாயினார்

இட்டவில்லி ரட்டையுமி ரண்டுகெண்டை போல்பவும்
விட்டிலண்க்கு தொண்டையங் கனிப்பிழம்பொ டுள்விராய்ச்
சுட்டிசூட்ட ணிந்துசூளி மைமணிசு டர்ந்துனீள்
பட்டம்வேய்ந்த வட்டமல்ல தில்லைநல்ல பாங்கெலாம்

அலத்தகக்கு ழம்புதம்ம டித்தலத்தொர் பாகமா
நிலத்தலத்தொர் பாகமா நீடுவாயில் கூடுவார்
கலைத்தலைத்தொ டுத்தகோவை கண்ணெகிழ்ந்து சிந்தலான்
மலைத்தலைத்த ழற்சிதர்ந்த போன்றமாட வாயெலாம்

பாடகந்து ளங்கவும்பு சும்பொனோலை மின்னவும்
சூலகந்து ளும்பவஞ் சு ரும்புகழ்ந்து பாடவும்
ஊடகங்க சிந்தொசிந்து நின்றுசென்று வந்துலாய்
நாடகங்க ணன்னர்க்க ணங்கைமார்ந விற்றினார்


மாதர்கள் மயக்கம்

மாலையால்வி ளங்கியும்பொன் வாசச்சுண்ணம் வீசியும்
சாலவாயி லாறுசந்த னக்குழம்பு சிந்தியும்
நீலவாணெ டுங்கணார்நி ரந்து நெஞ்சு தாழொரீஇ
ஞாலமாளு நம்பிமாரின் மாலுமாகி நண்ணினார்

வேய்மறிந்த தோள்விளர்த்து வெவ்வுயிர்ப்பொ டுள்விராய்த்
தோமறிந்த சூழ்துகின்னெ கிழ்ந்துடுத்து வீழ்ந்தசைஇப்
பூமறிந்த தேங்குழன் முடிப்பொதிந்து வீழ்த்துலாய்த்
தாமறிந்த முல்லைவாய தாதுகுத்து டங்கினார்


விசயதிவிட்டர்களுடைய படை பொழிலை அடைதல்

கொங்குவார்ம லர்த்தடத்த மர்ந்தகோதை மார்களோ
டங்கராகம் வீற்றிருந்த ணிந்தவார மாகுலாய்
மங்கைமார்கள் கண்ணும்வண்டு மாலையும னங்களும்
தங்குமார்பி னம்பிமார்க டானைசோலை சார்ந்ததே


விசயதிவிட்டர்கள் பொழிலை அடைதல்

மானளாய நோக்கினார்ம னங்கலந்து பின்செல
வானளாய சோலைவாயின் மன்னவீரர் துன்னலலும்
கானளாய போதணிந்து காவிவிம்மு கள்ளளைஇத்
தேனளாவு வண்டுகொண்டு தெறல்சென் றெழுந்ததே


விசயதிவிட்டர்கள் வேழத்தினின்று இறங்குதல்

செம்முகப்ப சும்பொ னோடை வெண்மருப்பி ணைக்கரு
வெம்முகத்து வீழ்கடாத்து வேழநின்றி ழிந்தபின்
கைம்முகத்து வேலிலங்கு காமர் தாங்கொ லென்றுசென்
றம்முகத்து தும்பிவண்டு தேனொடாடி யார்த்தவே


பொழிலின் காட்சி

தாதுநின்ற தேறனீர் தளித்திவற்றின் மேலளி
கோதுகின்ற போதுகொண்டு சிந்திநம்பி மார்களை
மாதுநின்ற மாதவிக் கொடிகடந் தளிர்க்கையால்
போதுகென்றி டங்கள்காட்டு கின்றபோற்பொ லிந்தவே


பூங்காவின் பொதுக்காட்சி

போதுலாய வேரிமாரிஇ சாரலாய்ப்பொ ழிந்துதேன்
கோதலா னெரிந்துதாது கால்குடைந்து கொண்டுறீஇ
மாதுலாய வண்டிரைத்து மங்குல்கொண்டு கண்மறைத்
தேதிலார்க்கி யங்கலாவ தன்றுசோலை வண்ணமே


தென்றல் வீசுதல்

போதுலாய பூம்பொதும்பர் மேலதென்றல் வீசலால்
தாதுலாய போதணிந்து தாழ்ந்துதாம வார்குழல்
மாதரார்கள் போலவல்லி மார்புபுல்லி மைந்தரைக்
காதலால்வ ளைப்பபோன்று காவினுட்க லந்தவே


விசயதிவிட்டர்கள் அசோகமரத்தின் இடத்தை அடைதல்

புல்லிவண்ட மர்ந்துகங்கு பூந்தழைப்பொ தும்பிடை
மல்லிகைக்கொ டிக்கலந்து மெளவல்சூட வெளவுநீர்
வல்லிமண்ட பங்கள்சென்று மாதவிக் கொழுந்தணி
அல்லிமண்ட பத்தயல சோகமாங்க ணெய்தினார்


விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டர்களை வணங்குதல்

பஞ்சிலங்கு மல்குலார்ப லாண்டுகூற வாண்டுபோய்
மஞ்சிலங்க சோகநீழன் மன்னவீரர் துன்னலும்
விஞ்சையன்ம கிழ்ந்தெழுந்து வென்றிவீரர் தங்களுக்
கஞ்சலித்த டக்கைகூப்பி யார்வமிக்கி றைஞ்சினான்


நீர் எம்மை வணங்குவது ஏன்? என்று விசயன் மரீசியைக் கேட்டல்

ஆங்கவனி றைஞ்சலு மலர்ந்ததிங்க ணீளொளிப்
பூங்கழற்பொ லங்குழைப்பொ லிந்திலங்கு தாரினான்
நீங்கருங்கு குணத்தினீவிர் நீடுகுரவ ராதலில்
ஈங்கெமக்கு நீர்பணிந்த தென்னையென்றி யம்பினான்


விசயதிவிட்டர்களை மரீசி வியந்து நோக்குதல்

பானிறக்க திர்நகைப ரந்தசோதி யானையும்
நீனிறக்க ருங்கட னிகர்க்குமேனி யானையும்
வானெறிக்கண் வந்தவன்ம கிழ்ந்துகண்ம லர்ந்துதன்
நூனெறிக்கண் மிக்கநீர்மை யொக்கநின்று நோக்கினான்


மேலும் விசயதிவிட்டர்களை நன்கு பார்த்தல்

வேல்கொடானை வீரர்தம்மை விஞ்சையன் வியந்துநீள்
நூல்கொள்சிந்தை கண்கடாவ நோக்கிநோக்கி யார்காலன்
கால்கள்கொண்டு கண்ணிகாறு முண்மகிழ்ந்து கண்டுகண்
மால்கொள்சிந்தை யார்கள்போல மற்றுமற்று நோக்கினான்


மரீசி விசயதிவிட்டர்களைப் பார்த்துப் பேசத் தொடங்குதல்

வேரிமாலை விம்மவும்வி ளங்குபூண்டு ளும்பவுந்
தாரொடார மின்னவுந்த யங்குசோதி கண்கொள
வாரநோக்க கில்லனன்ன னரசநம்பி மார்களைச்
சாரவாங்கொர் கற்றலத்தி ருந்துகான்வி ளம்பினான்


விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டரின் மேம்பாட்டைக் கூறுதல்

செம்பொன்வான கட்டிழிந்து தெய்வ யானை யுண்மறைஇ
வம்புநீர்வ ரைப்பகம்வ ணக்கவந்த மாண்புடை
நம்பிமீர்க ணுங்கள்பாத நண்ணிநின் றி றைஞ்சுவார்
அம்பொன்மாலை மார்பினீர ருந்தவஞ்செய் தார்களே

திங்கள்வெண் கதிர்ச்சுடர்த் திலதவட்ட மென்றிரண்
டிங்கண்மா லுயிர்க்கெலாமெ ளிய்யவென்று தோன்றலும்
தங்கள்சோதி சாரலாவ வல்லவன்ன நீரவால்
எங்கண்முன்னை நுடங்கடன்மை யென்றுபின்னை யேத்தினான்


தந்தையைக் காணச்செல்வோம் என்று விசயதிவிட்டர்கள் மரீசியை அழைத்தல்

இமைகள்விட்ட நோக்கமேற வின்னபோல்வ சொல்லலு
மமைகமாற்றம் நூம்மை யெங்க ளடிகள்காண வேகுவாம்
சுமைகொண்மாலை தொடுகளிற்றெ ருத்தமேறு கென்றனர்
சிமைகொடேவர் போலநின்று திகழுகின்ற சோதியார்


மரீசியும் விசயதிவிட்டர்களும் யானைகள்மீது தனித்தனியே அரண்மனைக்குப் புறப்படுதல்

அம்பொன்மாலை கண் கவர்ந்த லர்ந்தசெல்வ வெள்ளமேய்
வெம்புமால்க ளிற்றெருத்தம் விஞ்சையாளன் மேல்கொளப்
பைம்பொன்மாலை வார்மதப்ப ரூஉக்கை யீரு வாக்கண்மீச்
செம்பொன்மாலை மார்பசேர்ந்து தேவரிற்று ளும்பினார்


மகளிர் எதிர்கொள்ள நகரஞ் சேர்தல்

கதிர்நகைக் கபாட வாயிற் கதலிகைக் கனக நெற்றி
மதிநக வுரிஞ்சு கோட்டு மாளிகை நிரைத்த வீதிப்
புதுநக ரிழைத்து முத்து பொலங்கலத் தொகையும் பூவும்
எதிர்நகைத் துகைத்து மாத ரெதிர்கொள நகரஞ் சேர்ந்தார்


மருசியும் விசயதிவிட்டரும் சேர்ந்திருந்ததன் வருணனை

விரைக்கதி ரலங்கற் செங்கேழ் விண்ணியங் கொருவ னோடும்
வரைக்கெதிர்ந் திலங்கு மார்பின் மன்னவ குமரச் செல்வர்
எரிக்கதி ரேற்றைக் கால மெழுநிலாப் பருவ மேக
நிரைத்தெழு மிருது மன்று நிரந்ததோர் சவிய ரானார்


தெருவிற் செல்லுதல்

வார்கலந் திலங்கு கொம்மை வனமுலை மகளி ரிட்ட
ஏர்கலந் தெழுந்த தூம வியன்புகை கழுமி நான
நீர்கலந் துகுத்த மாலை நிறமதுத் திவலை சிந்தக்
கார்கலந் திருண்ட போலுங் கண்ணகன் தெருவுட் சென்றார் 75


அரண்மனையின் வாயிலை அடைதல்

தெளிர்முத்த மணலுஞ் செம்பொற் சுண்ணமுஞ் சிதர்ந்து தீந்தேன்
தளிர்முத்த மலரும் போதும் சாந்தமு வண்டார்
ஒளிர்முத்த முறுவ லார்த முழைக்கலங் கலந்து மாலைக்
குளிர்முத்த நிழற்றுங் கோயிற் பெருங்கடை குறுகச் சென்றார்


பயாபதி மன்னன் பொற்கூடத்தில் அமருதல்

மற்றவை ரடைந்த போழ்கின் வாயிலோ ருணர்த்தக் கேட்டு
கொற்றவ னருவி தூங்குங் குளிர்மணிக் குன்றம் போல
முற்றிநின் றிலங்குஞ் செம்பொன் முடிமிசை முத்த மாலைக்
கற்றைகள் தவழச் சென்றோர் கனககூ டத்தி ருந்தான்


பயாபதி மன்னன் மூவரையும் அமரச் செய்தல்

மன்னவ குமர ரோடும் விஞ்சையன் மகிழ்ந்து வையத்
தின்னருள் புரிந்த வேந்த னிடையறிந் தினிதி னெய்திக்
கன்னவில் தோளி னான்றன் கழலடி தொழுது நின்றான்
அன்னவர்க் கிருக்கைத் தான மரசனு மருளிச் செய்தான்


பயாபதி அம்மன்னன் வீற்றிருக்கும் காட்சி

வீரியக் குமர ரொடும் விஞ்சையஞ் செல்வ னோடும்
காரியக் கிழவர் சூழக் கவின்றுகண் குளிரத் தோன்றி
ஆரியன் னலர்ந்த சோதி யருங்கலப் பீட நெற்றிக்
தாரகை யணிந்து தோன்றுஞ் சந்திர சவிய னானன்


மன்னவன் விஞ்சையனுக்கு முகமன் கூறியிருத்தல்

அலகையில் தானை வேந்த னம்பர சரனை நோக்கி
உலகுப சார மாற்ற முரைத்தலுக் குரிய கூறி
விலகிய கதிர வாகி விளங்கொளிக் கடகக் கையான்
மலரகங் கழுமப் போந்து மனமகிழ்ந் திருந்த போழ்தின் 80


மருசி கொண்டுவந்த திருமுகத்தை மதிவரன் வாங்குதல்

விஞ்சைய னெழுந்து தங்கோன் வெள்ளிவே தண்ட நோக்கி
அஞ்சலித் தடக்கை கூப்பி யரக்கிலச் சினையின் வைத்த
எஞ்சலி லோலை காட்ட விறைமகன் குறிப்பு நோக்கி
வஞ்சமில் வயங்கு கேள்வி மதிரவன் கரத்தில் வாங்கி


மதிவரன் திருமுகவோலையைப் படித்தல்

நிகரிகந் தழகி தாகி நெரிவடுப் படாத வேழப்
புகர்முகப் பொறிய தாய புகழ்ந்தசொல் லகத்துப் போகா
மகரவாய் மணிகட் செப்பின் மசிகலந் தெழுதப் பட்ட
பகரரும் பதங்கள் நோக்கிப் பயின்று பின் வாசிக் கின்றான்


இதுவும் அடுத்த பாடலும் திருமுகச் செய்தி

போதனத் திறைவன் காண்க விரதநூ புரத்தை யாளும்
காதுவேன் மன்ன னோலை கழலவன் றனக்கு நாளும்
ஆதிய வடிசி லொண்கே ழஞ்சன முள்ளிட் டெல்லாம்
தீதுதீர் காப்புப் பெற்றுச் செல்கென விடுத்த தன்றே

அல்லதூஉங் கரும தலங்குதா ரிவுளித் திண்டேர்
வல்லக னிளைய நம்பிக் குரியளா வழங்கப் பட்டாள்
மல்லக மார்பி னன்றான் மருமக ளிவளைக் கூவி
வல்லிதிற் கொடுக்க மன்னன் வாழ்கதன் கண்ணி மாதோ


திருமுகச்செய்திகேட்ட பயாபதிமன்னன் யாதுங் கூறாதிருத்தல்

என்றவ னோலைவாசித் திருந்தன னிறைவன் கேட்டு
வென்றியம் பெருமை விச்சா தரரென்பா ரெம்மின் மிக்கார்
இன்றிவன் விடுத்த திவ்வா றென்கொலோ வென்று சிந்தித்
தொன்றுமற் றுரைக்க மாட்டா திருந்தன னுரங்கொ டோ ளான்


மருசி சினத்துடன் கூறத்தொடங்குதல்

தீட்டருந் திலதக் கண்ணிச் செறிகழ லரசர் கோமான்
மீட்டுரை கொடாது சால விம்மலோ டிருப்ப நோக்கி
வாட்டரும் பெருமை யெங்கோ னோலையை மதியா வாறென்
றோட்டருங் கதத்த னாகிக்கேசர னுரைக்க லுற்றான்


மருசி சினந்து கூறுவன

முன்னமோர் கருமம் வேண்டி மொழிபவேல் மனிதர் தம்மால்
என்னவ ரேனு மாக விகழ்ந்திடப் படுப போலாம்
அன்னதே யுலக வார்த்தை யாவதின் றறியும் வண்ணம்
மின்னவின் றிலங்கும் வேலோய் நின்னுழை விளங்கிற் றன்றே

பூவிரி யுருவக் கண்ணிப் பொலங்குழை யிலங்கு சோதித்
தேவரே யெனினுந் தோறச் சில்பகல் செல்ப வாயில்
ஏவரே போல நோக்கி யிகழ்ந்துரைத் தெழுவ தன்றே
மாவிரி தானை மன்னா மனிதர தியற்கை யென்றான்

வரைமலி வயங்கு தோளாய் வியாதியான் மயங்கி னார்க்குச்
சுரைமலி யமிர்தத் தீம்பால் சுவைதெரிந் துண்ண லாமோ
விரைமலி விளங்கு பைந்தார் விஞ்சையர் செல்வந் தானும்
நுரைமலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகர லாமோ

அறவிய மனத்த ரன்றி யழுங்குத லியல்பி னார்க்குப்
பிறவியை யறுக்குங் காட்சிப் பெருநிலை யெய்த லாமோ
வெறிமயங் குருவக் கண்ணி விஞ்சையர் விளங்கு தானம்
மறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு நிகழ்த்த லாமோ 90

அருங்கடி கமழுந் தாரை யழிமதக் களிற்றி னாற்றல்
மரங்கெடத் தின்று வாழுங் களபக்கு மதிக்க லாமோ
இரங்கிடு சிறுபுன் வாழ்க்கை யிந்நிலத் தவர்கட் கென்றும்
வரங்கிடந் தெய்த லாமோ மற்றெமர் பெருமை மன்னா

உள்ளிய மரங்கொள் சோலை மண்மிசை யுறையு மாந்தர்
ஒள்ளிய ரேனுந் தக்க துணர்பவ ரில்லை போலாம்
வெள்ளியஞ் சிலம்பி னென்கோன் விடுத்தே யேது வாக
எள்ளியோ ருரையு மீயா திருந்தனை யிறைவ வென்றான்


பயாபதி மன்னன் பதில் உரைத்தல்

ஆங்கவ னுரைப்பக் கேட்டே யம்பர சரனை நோக்கித்
தேங்கம ழலங்கன் மார்ப சிவந்துரை யாடல் வேண்டா
ஓங்கிய வோலை மாற்றக் குரியவா றுரைக்க மாட்டா
தீங்கியா னிருந்த தென்றா னெரிசுடர் வயிரப் பூணான்

வெஞ்சுடர் தெறுதீ விச்சா தரரென்பார் மிக்க நீரார்
செஞ்சுடர்த் திலதக் கண்ணித் தேவரே தெரியுங் காலை
மஞ்சிடை மண்ணுள் வாழும் மக்களுக் கவர்க டம்மோ
டெஞ்சிய தொடர்ச்சி இன்ப மெய்துதற் கரிது மாதோ

ஈட்டிய வூன்செய் யாக்கை யெம்முழை யின்ன வாறு
வாட்டமில் வயங்கு கண்ணி மணிமுடி மன்ன னோலை
காட்டிநீ யுரைத்த வெல்லாங் கனவெனக் கருதி னல்லான்
மீட்டது மெய்ம்மை யாக வியந்துரை விரிக்க லாமோ

இன்னவ னின்ன நீரா னின்னவே யெய்து கென்று
முன்னவன் செய்த மொய்ம்பின் வினைகளே முயல்வ தல்லால்
பின்னவன் பிறந்து தன்னாற் பெறுதலுக் குரிய வாய
துன்னுவ தென்றுக் கான்று துணியுமோ சொல்ல வென்றான்

மெய்ப்புடை தெரிந்து மேலை விழுத்தவம் முயன்று நோற்றார்க்
கொப்புடைத் துங்கள் சேரி யுயர்நிலைச் செல்வ மெல்லாம்
எப்படி முயறு மேனு மெங்களுக் கெய்த லாகா
தப்படி நீயு முன்னர் மொழிந்தனை யன்றே யென்றான்


விஞ்சைச் சாரணான் நாணிச் சினம் மறுதல்

இறைவனாங் குரைத்த சொற்கேட் டென்னைபா வம்பொ ருந்தாக்
கறையவா மொழிகள் சொன்னேன் காவலன் கருதிற் றோரேன்
பொறையினாற் பெரியன் பூபன் சிறியன்யா னென்று நாணி
அறிவினாற் பெரிய நீரா னவிந்தன கதத்த னானான்


பயாபதியின் ஐயத்தை மருசி அகற்றுதற்கு உரைக்கத் தொடங்கல்

கிளர்ந்தொளி துளும்பும் மேனிக் கேசர ரோடு மண்மேல்
வளர்ந்தொளி திவளும் பூணோர் மணவினை முயங்க லில்லென்
றளந்தறி வரிய சீரோற் கையமீ தகற்று கென்றாங்
குளர்ந்துன னுணர்வி னூக்கி யுரைக்கிய வெடுத்துக் கூறும்


விஞ்சையரும் மனிதரே என்பதை மருசி விளக்கிக் கூறுதல்

மஞ்சிவர் மணங்கொள் சோலை மணிவரைச் சென்னி வாழும்
விஞ்சையர் விச்சை யாலே விழுமிய ரென்ப தல்லால்
அஞ்சலில் தானை வேந்தே மனிதரே யவரும் யாதும்
வெஞ்சுடர் விளங்கு வேலோய் வேற்றுமை யின்மை கேண்மோ 100


விஞ்சையன் தன்னை விளக்கிக் கூறுதல்

மண்ணவில் முழவின் மாநீர்ப் பவபுர முடைய மன்னன்
பண்ணவில் களிதல் யானைப் பவனவே கற்குத் தேவி
கண்ணவில் வடிவிற் காந்தி மதியவள் பாவை
வண்ணவிற் புருவ வாட்கண் வாயுமா வேகை யென்பான்

மற்றவ ளோடும் வந்தேன் மன்னன்யான் மருசி யென்பேன்
அற்றமில் கேள்வி யெந்தை யஞ்சுமா னென்னும் பேரான்
பெற்றதா யருசி மாலை பெருமக னருளினால் யான்
கற்றநூல் பல்ல வாகுங் கருமணிக் கடகக் கையான்

அலகைசா லாதி காலத் தரசர்கள் தொடர்ச்சி யெல்லாம்
உலகநூல் பலவு மோதி யுணர்ந்தன னுரைப்பக் கேண்மோ
விலகிய கதிர வாகி விடுசுடர் வயிரக் கோலத்
திலகம்வீற் றிருந்த கண்ணித் திருமுடிச் செல்வ என்றான்


மருசி நமியின் வரலாறு கூறுகின்றான்

ஆதிநா ளரசர் தங்க ளருங்குல மைந்து மாக்கி
ஓதநீ ருலகின் மிக்க வொழுக்கமுந் தொழிலுந் தோற்றித்
தீதுதீர்ந் திருந்த பெம்மான் திருவடி சாரச் சென்று
நீதி நூற் றுலகம் காத்து நிலத்திரு மலர நின்றான்

முசிநாச் சுரும்பு பாய முருகுடைத் துருக்குஞ் சோலைக்
காசிநாட் டரசன் செங்கோற் கதிர்முடிக் கச்ச னென்பான்
மாசினாற் கடலந் தானை மன்னவற் றவற்குத் தேவி
தூசினாற் றுளும்பு மல்குல் சுதஞ்சனை சுடரும் பூணாய்

வேய்ந்தக நிழற்றுங் கோதை மிளிர்மணிக் கலாப வட்டம்
போந்தகந் திகழ்ந்து மின்னுப் பூந்துகில் பொலிந்த வல்குல்
வாய்ந்தகங் கமழுங் கோதை யவள்பெற்ற வரச சிங்க
நாந்தகக் கிழவர் கோவே நமியென்பான் நலத்தின் மிக்கான் 106

அங்கவ னரசு வேண்டா னற்கடல் படைத்த நாதன்
பங்கயங் கமழு மேனி பவித்திர பரம யோகி
தங்கிய தியானப் போழ்தி றாழ்ந்துதன் றடக்கை கூப்பிப்
பொங்கிய காதல் கூரப் பாடினன் புலமை மிக்கான்


அருகக் கடவுள் வணக்கம்

அலகிலா ஞானத் தகத்தடங்க நுங்கி
உலகெலாம் நின்று னொளித்தாயு நீயே
ஒளித்தாயு நீயே யுயிர்க்கெலாங் கண்ணா
யளித்தாயுங் காத்தாயு நீயேவாழி யறவேந்தே

அழனாறும் வெங்கதிரோ னாண வலராது
நிழனாறு மூர்த்தியாய் நின்றாயு நீயே
நின்றாயு நீயே நிறைபொரு ளெல்லைக்கட்
சென்றாயும் வென்றாயு நீயேவாழி திருமாலே

நிறைதரு கேவலத்தோய் நின்னடியார்க் கெல்லாங்
குறைதலி லின்பங் கொடுப்பயு நீயே
கொடுப்பயு நீயேயெங் குற்றவேல் வேண்டாய்
விடுத்தாயு நீத்தாயு நீயேவென்ற பெருமானே 110


நமிபாடிய இசையின் தன்மை

என்றவன் பாடக் கேட்டே யிறஞ்சின குறிஞ்சி யேகா
நின்றன விலங்கு சாதி நிலங்கொண்ட பறவை எல்லா
மன்றுமெய் மறந்து சேர்ந்தார் கின்னர ரமரர் தாழ்ந்தார்
வென்றவன் றியானத் துள்ளான் வியந்திலன் சிறிதும் வேந்தே


நமியின் இசைகேட்டு ஆதிசேடன் வருதல்

மணநிரைத் திலங்குந் தாரோய் மற்றவ னுலோக நாதன்
குணநிரைத் திசைத்த கீதங் கேட்டலு மணிகொள் கோவைக்
கணநிரைத் திலங்குங் காய்பொன் முடிமிசை யீரைஞ்ஞாறு
பணநிரைத் திலங்கப் புக்கான் பணதர ரரச னன்றே


நமியை வணங்குதல்

பன்னக ருலகங் காக்கும் பாய்கதிர்ப் பசும்பொன் மேனி
மின்னவிர் வயிரச் சூட்டு விடுசுடர் மணிப்பொற் பூணான்
தன்னிக ரிகந்த தோன்றல் சரணெனப் பரமன் பாதம்
மன்னர்கட் கரசன் முன்னை வலங்கொடு வணக்கங் செய்தான்


நமியின் இசையில் தேவர்கள் ஈடுபட்டமை

தேந்துண ரிலங்கு கண்ணித் தேவனத் தேவர் கோனைத்
தீந்தொடை நரம்பின் றெய்வச் செழுங்குரல் சிலம்ப வேத்தப்
பூந்துணர்க் கற்ப லோகம் புடைபெயர்ந் திட்ட போற்றா
வேந்துடை மான மெல்லாம் வேலினால் விடுத்த வேந்தே


ஆதிசேடன் நமியரசனை வினவுதல்

மாண்டதன் நிலைமை யுள்ளி வருபொருண் மெய்ம்மைநோக்கித்
தூண்டிய சுடரி னின்ற தியானத்தைத் துளங்கு வாய்போ
லீண்டுவந் திசைக்குற் றேவ லெம்மிறை யடிக்கட் செய்தாய்
வேண்டுவ தெவன்கொ லென்றான் மிடைமணிப் பூணினானே


நமியரசன் விடையிறுத்தல்

பண்மிசைப் படர்ந்த சிந்தைப் பணதரற் பணிந்து மாற்றத்
துண்மிசைத் தொடர்பு நோக்கி யுறுவலி யதனைக் கேளா
விண்மிசை யவர்கள் போல வேண்டிய விளைக்குஞ் செல்வ
மண்மிசைப் பெறுவ னாக மற்றிதென் மனத்த தென்றான்


ஆதிசேடன் நமிக்கு வரமளித்துச் செல்லுதல்

இச்சையங் குரைப்ப கேட்டாங் கிமைய வரியற்கை யெய்தும்
வீச்சையுந் துணையும் வெள்ளி விலங்கலுங் கொடுத்து வேந்தாய்
நிச்சமு நிலாக வென்று நிறுவிப்போய் நிலத்தின் கீழ்த்த
னச்சமி லுலகஞ் சேர்ந்தா னாயிரம் பணத்தி னானே


நமியின் வழித்தோன்றலே சடியரசன் என்று மரீசி பயாபதிக்குப் பகர்தல்

ஆங்கவன் குலத்து ளானெம் மதிபதி யவனோ டொப்பா
யோங்கிய குலமுஞ் செல்வப் பெருமையு முடைய நீயு
மீங்கிரு குலத்து ளீர்க்குங் கருமம்வந் திசைத்த போழ்தி
னீங்கரு நறுநெய் தீம்பால் சொரிந்தோர் நீர்மைத் தென்றான்


பயாபதியின் வரலாறு கூறத்தொடங்குதல்

தங்குலத் தொடர்ச்சி கூறித் தானவ னிருந்த போழ்தி
னுங்குல நிலைமை யெல்லா நூலினீ யுரைத்த வாறே
எங்குல நிலைமை யானு முரைப்பனென் றெடுத்துக் கொண்டு
பொங்கலர்ப் பிணைய லான்றன் புரோகிதன் புகல லூற்றான்


அங்கனிமித்திகன் கூறுதல்

யாவனாற் படைக்கப் பட்ட துலகெலாம் யாவன் பாத்த
தேவனால் வணக்கப்பட்ட தியாவன தகலஞ் சேர்ந்து
பூவினாள் பொறியொன் றானாள் புண்ணிய வுலகங் கான
ஏவினான் யாவ னம்மை யாவன துலக மெல்லாம் 120


மற்றவ னருளின் வந்தான் மரகத மணிக்குன் றொப்பச்
சுற்றி நின் றிலங்கு சோதித் தோள்வலி யெனும்பே ரானக்
கொற்றவ னுலகங் காத்த கோன்முறை வேண்டி யன்றே
கற்றவ ரின்று காறுங் காவனூல் கற்ப தெல்ல்லம்


வாகுவலி தவஞ்செய்யச் செல்லுதல்

கொடிவரைந் தெழுதப் பட்ட குங்குமக் குவவுத் தோளான்
இடிமுர சதிருந் தானை யிறைத்தொழில் மகனுக் கீந்து
கடிமண் மனுக்குந் தெய்வக் கழலடி யரசர் தங்கள்
முடிபொர முனிவிற் றான்போய் முனிவன முன்னினானால்


கயிலாயத்து முடியில் தவஞ்செய்தல்

விண்ணுயர் விளங்கு கோட்டு விடுசுடர் விளங்க மாட்டாக்
கண்ணுயர் கதலி வேலிக் கார்க்கயி லாய நெற்றிப்
புண்ணியக் கிழவன் போகிப் பொலங்கலம் புலம்ப நீக்கித்
திண்ணிய தியானச் செந்தீச் செங்சுடர் திகழ நின்றான்


வாகுவலியின் தவநிலைமை

கழலணிந் திலங்கு பாதங் கலந்தன கருங்கட் புற்றத்
தழலணிந் தெழுந்த வைவா யருமணி யாடு நாகம்
பொழிலணிந் தெழுந்த வல்லி புதைந்தன பூமி நாதன்
குழலணிந் தெழுந்த குஞ்சி குடைந்தன குருவிக் கூட்டம்

அருமுடி யரசர் தாழ்ந்த வடிமிசை யரவ மூரக்
கருவடி நெடுங்க ணல்லார் கலந்த தோள் வல்லி புல்ல
மருவுடை யுலகம் பாடல் வனத்திடைப் பறவை பாடத்
திருவுடை யடிக ணிண்ற திறமிது தெரிய லாமோ

வெண்டவாங் குவளைக் கண்ணி மன்னர்தம் மகுட கோடி
விண்டவாம் பிணைய லுக்க விரி மதுத் துவலை மாரி
உண்டவான் கழல்கள் சூழ்ந்த திருவடி யரவ மூரக்
கண்டவா றிங்க ணார்க்குங் கருதுவ தரிது கண்டாய்

அடுக்கிய வனிச்சப் பூவி னளிமே லரத்தச் செவ்வாய்
வடிக்கயல் நெடுங்க ணார்தம் வளிக்கையால் வளித்த மார்பில்
தொடுக்கிய தொடுத்த போலுந் துறுமலர்க் கத்தி மாதர்
கொடிக்கையா லிடுக்க றன்மேல் கொற்றவன் குலவப் பட்டன்

புல்லிய பொலங்கொம் பொப்பார் புலவியுட் கலவி சென்று
மெல்லிய மாலை தம்மால் விசித்தலை விடுத்து மீட்டு
மல்லுய ரலர்ந்த மார்பின் மாதவிப் பேதை யார்த்த
வல்லிகள் விடுக்க மாட்டா மனத்தினன் மன்ன னானான்


வாகுவலி தேவரினும் உயர்நிலை யடைதல்

ஓவலில் குணங்க ளென்னு மொளிர்மணிக் கலங்க டாங்கித்
தேவர்க ளுலக மெல்லாஞ் செழுமண மயர்ந்து கூட்டக்
கேவலப் பெண்ணென் பாளோர் கிளரரொளி மடந்தை தன்னை
ஆவியு ளடக்கிப் பின்னை யமரர்க்கு மரிய னானான்


வாகுவலியின் வழித்தோன்றலே பயாபதி மன்னன் என்றல்

எங்கள்கோ னிவன்க ணின்று மிக்குயர் குலத்து வேந்தர்
தங்களோர் புறஞ்சொல் வாராத் தன்மையா லுலகங் காத்தார்
அங்கவர் வழிக்கண் தோன்றி யகலிடம் வணங்க நின்ற
இங்கிவன் பெருமை நீயுமறிதியா லேந்த லென்றான் 130


மருசி மேலுங் கூறத்தொடங்குதல்

குடித்தொட ரிரண்டுங் கேட்டே குறுமயி ரெறிந்து கண்ணுள்
பொடித்தநீர்த் திவலை சிந்தப் புகழ்ந்தன ரிருந்த வேந்தர்
அடுத்தெரி யலர்ந்த செம்பொ னணிமணி முடியி னானங்
கெடுத்துரை கெடாத முன்னக் கேசர னிதனைச் சொன்னான்


வாகுவலி கச்சனுக்கு மருமகன் என்று கூறுதல்

இப்படித் தாயிற் பண்டை யிசைந்தது சுற்ற மென்னை
அப்படி யரிய செய்த வடிகளெம் மரச னாய
கைப்புடை யிலங்கு செவ்வேற் கச்சற்கு மருக னாரென்
றொப்புடைப் புராண நன்னூ லுரைப்பதியா னறிவ னென்றான்


மன்னவன் மனத்தி னாற்ற மிறைவனை வணங்கி வாழ்த்திப்
பின்னவன் ரன்னை நோக்கிப் பேசினன் பிறங்கு தாரோய்
முன்னிய வுலக நூலுங் குலங்களு முறையு முள்ளிட்
டின்னவா றறியு நீரோ ரில்லை நின் போல வென்றான் 133


அரசாட்சிப் பொறிக்கு வாய் தூதுவர் என்றல்

மந்திரக் கிழவர் கண்ணா மக்கடன் றாள்க ளாகச்
சுந்தர வயிரத் திண்டோ டோ ழராச் செவிக ளொற்றா
அந்தர வுணர்வ நூலா வரசெனு முருவு கொண்ட
எந்திர மிதற்கு வாயாத் தூதுவ ரியற்றப் பட்டார்


சிறந்த தூதுவன் சிறப்பு

ஆதிநூ லமைச்சர்க் கோது மாண்பொலா மமைந்து நின்றான்
தூதனாச் சொல்லிற் சொல்லாச் சூழ்பொரு ளில்லை போலா
மேதிலார்க் காவ துண்டோ வின்னன புகுந்த போழ்திற்
கோதிலாக் குணங்க டேற்றிக் கொழித்துரை கொளுத்த லென்றான்பயாபதி மரிசியைப் பாராட்டல்

மற்றிம்மாண் புடைய நின்னை யுடையவம் மன்னர் மன்னன்
எற்றைநூற் றெய்த மாட்டா னிதன்றிற நிற்க வெம்மைச்
சுற்றமா நினைந்து நின்னைத் தூதனா விடுத்துச் செல்லப்
பெற்றியாம் பிறவி தன்னாற் பெறும்பயன் பெற்ற தென்றான்


பயாபதி மன்னன் மருசியை நோக்கிச் சில கூறுதல்

இன்றியா னின்னை முன்வைத் தினிச்சில வுரைக்கல் வேண்டா
ஒன்றியா னுரைக்கற் பால வுரையையு முணர்த்தி நீயே
வென்றியால் விளங்கு தானை விஞ்சையங் கிழவன் கண்ணா
நின்றியான் வாழ்வ தல்லா னினைப்பினி யில்லை மன்னோ

கொற்றவன் குறிப்பி தாயிற் கூவித்த னடியன் மாரை
உற்றதோர் சிறுகுற் றேவற் குரியராய்க் கருதித் தானே
அற்றமி லலங்கல் வேலோ னறிந்தருள் செய்வ தல்லான்
மற்றியா னுரைக்கு மாற்ற முடையனோ மன்னற் கென்றான்


மருசிக்குச் சிறப்புச் செய்தல்

தூதன்மற் றதனைக் கேட்டே தொழுதடி வணங்கிச் செங்கோல்
ஏதமில் புகழி னாயானடிவலங் கொள்வ னென்னப்
போதுசே ரலங்க லானும் பொலங்கலம் பொறுக்க லாகாச்
சோதிய சுடரச் சேர்த்திப் பெருஞ்சிறப் பருளிச் செய்தான்


மருசிக்கு நாடகங் காட்டி மறுநாள் அனுப்புதல்

அற்றைநா ளங்குத் தாழ்ப்பித் தகனகர்ச் செல்வந் தன்னோ
டுற்றவ னுவப்பக் கூறி யுரிமைநா டகங்கள் காட்டிப்
பிற்றைநாட் குரவர் தம்மைப் பின்சென்று விடுமி னென்று
மற்றவர்க் கருளிச் செய்தான் மருசியுந் தொழுது சென்றான்


மருசி தனது நகரத்தை அடைதல்

உலனல னடுதிண்டோ ளூழிவே லோடை யானைச்
சலநல சடியென்பேர்த் தாமரைச் செங்க ணான்றன்
குலநல மிகுசெல்கைக் கோவொடொப் பார்கள் வாழு
நலனமர் நளிசும்மைத் தொன்னகர் நண்ணி னானே 141


தூதுவிடு சருக்கம் முற்றிற்று

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework