உந்தி முதலா முந்து வளி தோன்றி
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்
உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லும் காலை
பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல
திறப்படத் தெரியும் காட்சியான. 1
அவ் வழி,
பன்னீர் உயிரும் தம் நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும். 2
அவற்றுள்,
அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும். 3
இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்
அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன
அவைதாம்,
அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய. 4
உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்
அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும். 5
தம்தம் திரிபே சிறிய என்ப. 6
ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 7
சகார ஞகாரம் இடை நா அண்ணம். 8
டகார ணகாரம் நுனி நா அண்ணம். 9
அவ் ஆறு எழுத்தும் மூ வகைப் பிறப்பின. 10
அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்
நா நுனி பரந்து மெய் உற ஒற்ற
தாம் இனிது பிறக்கும் தகார நகாரம். 11
அணரி நுனி நா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். 12
நுனி நா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13
நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14
இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம். 15
பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும். 16
அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை
கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும். 17
மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்
சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்
மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும். 18
சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத்
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்
தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி
ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும். 19
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்து எழு வளி இசை அரில் தப நாடி
அளபின் கோடல் அந்தணர் மறைத்தே. 20
அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்
மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே. 21

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework