இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு ஒளி மேனி விரி சடையாட்டி
பொன் திகழ் நெடு வரை உச்சித் தோன்றி
தென் திசைப் பெயர்ந்த இத் தீவத் தெய்வதம்
சாகைச் சம்பு தன் கீழ் நின்று
மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு
வெந் திறல் அரக்கர்க்கு வெம் பகை நோற்ற
சம்பு என்பாள் சம்பாபதியினள்
செங்கதிர்ச் செல்வன் திருக் குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையின் காந்த மன் வேண்ட
00-010
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை
செங் குணக்கு ஒழுகி அச் சம்பாபதி அயல்
பொங்கு நீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற
ஆங்கு இனிது இருந்த அருந் தவ முதியோள்
ஓங்கு நீர்ப் பாவையை உவந்து எதிர்கொண்டு ஆங்கு
ஆணு விசும்பின் ஆகாயகங்கை
வேணவாத் தீர்த்த விளக்கே வா என
பின்னிலை முனியாப் பெருந் தவன் கேட்டு ஈங்கு
'அன்னை கேள் இவ் அருந் தவ முதியோள்
00-020
நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு' என
பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
கோடாச் செங்கோல் சோழர் தம் குலக்கொடி
கோள் நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியாத் தண் தமிழ்ப் பாவை
தொழுதனள் நிற்ப அத் தொல் மூதாட்டி
கழுமிய உவகையின் கவான் கொண்டிருந்து
தெய்வக் கருவும் திசைமுகக் கருவும்
செம்மலர் முதியோன் செய்த அந் நாள்
என் பெயர்ப் படுத்த இவ் விரும் பெயர் மூதூர்
00-030
நின் பெயர்ப் படுத்தேன் நீ வாழிய! என
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்
ஒரு நூறு வேள்வி உரவோன் தனக்குப்
பெரு விழா அறைந்ததும் 'பெருகியது அலர்' என
சிதைந்த நெஞ்சின் சித்திராபதி தான்
வயந்த மாலையான் மாதவிக்கு உரைத்ததும்
மணிமேகலை தான் மா மலர் கொய்ய
அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் சென்றதும்
ஆங்கு அப் பூம்பொழில் அரசு இளங் குமரனைப்
பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும்
00-040
பளிக்கறை புக்க பாவையைக் கண்டு அவன்
துளக்குறு நெஞ்சில் துயரொடும் போய பின்
மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும்
மணிமேகலையை மணிபல்லவத்து உய்த்ததும்
உவவன மருங்கின் அவ் உரைசால் தெய்வதம்
சுதமதி தன்னைத் துயில் எடுப்பியதூஉம்
ஆங்கு அத் தீவகத்து ஆய் இழை நல்லாள்
தான் துயில் உணர்ந்து தனித் துயர் உழந்ததும்
உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணிப் பீடிகைப்
பழம் பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும்
00-050
உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
'மனம் கவல் ஒழிக!' என மந்திரம் கொடுத்ததும்
தீபதிலகை செவ்வனம் தோன்றி
மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அளித்ததும்
பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு
யாப்புறு மா தவத்து அறவணர்த் தொழுததும்
அறவண அடிகள் ஆபுத்திரன் திறம்
நறு மலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்
அங்கைப் பாத்திரம் ஆபுத்திரன்பால்
சிந்தாதேவி கொடுத்த வண்ணமும்
00-060
மற்று அப் பாத்திரம் மடக்கொடி ஏந்தி
பிச்சைக்கு அவ் ஊர்ப் பெருந் தெரு அடைந்ததும்
பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில்
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்
காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று
ஆனைத்தீக் கெடுத்து அம்பலம் அடைந்ததும்
அம்பலம் அடைந்தனள் ஆய் இழை என்றே
கொங்கு அலர் நறுந் தார்க் கோமகன் சென்றதும்
அம்பலம் அடைந்த அரசு இளங் குமரன்முன்
வஞ்ச விஞ்சையன் மகள் வடிவு ஆகி
00-070
> மறம் செய் வேலோன் வான் சிறைக்கோட்டம்
அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
காயசண்டிகை என விஞ்சைக் காஞ்சனன்
ஆய் இழை தன்னை அகலாது அணுகலும்
வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை
மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும்
ஐ அரி உண் கண் அவன் துயர் பொறாஅள்
தெய்வக் கிளவியின் தௌிந்த வண்ணமும்
அறை கழல் வேந்தன் 'ஆய் இழை தன்னைச்
சிறை செய்க' என்றதும் சிறைவீடு செய்ததும்
00-080
நறு மலர்க் கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு
ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும்
ஆங்கு அவன்தன்னோடு அணி இழை போகி
ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும்
உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய்
பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்
'நவை அறு நன்பொருள் உரைமினோ' என
சமயக் கணக்கர் தம் திறம் கேட்டதும்
ஆங்கு அத் தாயரோடு அறவணர்த் தேர்ந்து
பூங்கொடி கச்சி மா நகர் புக்கதும்
00-090
புக்கு அவள் கொண்ட பொய் உருக் களைந்து
மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும்
தவத் திறம் பூண்டு தருமம் கேட்டு
'பவத் திறம் அறுக' என பாவை நோற்றதும்
இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
வளம் கெழு கூல வாணிகன் சாத்தன்
மா வண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு
ஆறு ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என்
00-098
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework