அந்தி மாலை நீங்கிய பின்னர்
வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்
சான்றோர் தம் கண் எய்திய குற்றம்
தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல
மாசி அறு விசும்பின் மறு நிறம் கிளர
ஆசு அற விளங்கிய அம் தீம் தண்கதிர்
வெள்ளி வெண் குடத்துப் பால் சொரிவது போல்
கள் அவிழ் பூம் பொழில் இடைஇடைச் சொரிய
உருவு கொண்ட மின்னே போல
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள்
06-010
ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்
பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி
பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி
சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி
'ஈங்கு நின்றீர் என் உற்றீர்?' என
ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்
'அரசு இளங் குமரன் ஆய் இழை தன் மேல்
தணியா நோக்கம் தவிர்ந்திலனாகி
அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்
புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான்
06-020
பெருந் தெரு ஒழித்து இப்பெரு வனம் சூழ்ந்த
திருந்து எயில் குடபால் சிறு புழை போகி
மிக்க மாதவர் விரும்பினர் உறையும்
சக்கரவாளக் கோட்டம் புக்கால்
கங்குல் கழியினும் கடு நவை எய்தாது
அங்கு நீர் போம்' என்று அருந் தெய்வம் உரைப்ப
'வஞ்ச விஞ்சையன் மாருதவேகனும்
அம் செஞ் சாயல் நீயும் அல்லது
நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம்
சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார்
06-030
சக்கரவாளக் கோட்டம் அஃது என
மிக்கோய்! கூறிய உரைப் பொருள் அறியேன்
ஈங்கு இதன் காரணம் என்னையோ?' என
ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவன்
'மாதவி மகளொடு வல் இருள் வரினும்
நீ கேள்' என்றே நேர் இழை கூறும் 'இந்
நாமப் பேர் ஊர் தன்னொடு தோன்றிய
ஈமப் புறங்காடு ஈங்கு இதன் அயலது
ஊரா நல் தேர் ஓவியப் படுத்துத்
தேவர் புகுதரூஉம் செழுங் கொடி வாயிலும்
06-040
நெல்லும் கரும்பும் நீரும் சோலையும்
நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும்
வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து
உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும்
மடித்த செவ் வாய் கடுத்த நோக்கின்
தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து
நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும்
நால் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய
காப்பு உடை இஞ்சிக் கடி வழங்கு ஆர் இடை
உலையா உள்ளமோடு உயிர்க் கடன் இறுத்தோர்
06-050
தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி
பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில்
காடு அமர் செல்வி கழி பெருங் கோட்டமும்
அருந் தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்
நால் வேறு வருணப் பால் வேறு காட்டி
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்
அருந் திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும்
06-060
நிறைக் கல் தெற்றியும் மிறைக் களச் சந்தியும்
தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர்
உண்டு கண் படுக்கும் உறையுள் குடிகையும்
தூமக் கொடியும் சுடர்த் தோரணங்களும்
ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து
சுடுவோர் இடுவோர் தொடு குழிப் படுப்போர்
தாழ் வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் தரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்
எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி
06-070
> நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்
துறவோர் இறந்த தொழு விளிப் பூசலும்
பிறவோர் இறந்த அழு விளிப் பூசலும்
நீள் முக நரியின் தீ விளிக் கூவும்
சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்
புலவு ஊண் பொருந்திய குராலின் குரலும்
ஊண் தலை துற்றிய ஆண்டலைக் குரலும்
நல் நீர்ப் புணரி நளி கடல் ஓதையின்
இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது
தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி
06-080
கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து
காய் பசிக் கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும்
மால் அமர் பெருஞ்சினை வாகை மன்றமும்
வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ் சிறந்து
புள் இறைகூரும் வெள்ளில் மன்றமும்
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு
மடைதீ உறுக்கும் வன்னி மன்றமும்
விரத யாக்கையர் உடை தலை தொகுத்து ஆங்கு
இருந் தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும்
பிணம் தின் மாக்கள் நிணம் படு குழிசியில்
06-090
விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்
அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும்
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்
யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை
தவத் துறை மாக்கள் மிகப் பெருஞ் செல்வர்
ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
முதியோர் என்னான் இளையோர் என்னான்
கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இவ்
06-100
அழல் வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
கழி பெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து
மிக்க நல் அறம் விரும்பாது வாழும்
மக்களின் சிறந்த மடவோர் உண்டோ?
ஆங்கு அது தன்னை ஓர் அருங் கடி நகர் என
சார்ங்கலன் என்போன் தனி வழிச் சென்றோன்
என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று
அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி
வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து
அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய்க் கொண்டு
06-110
உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும்
கலைப் புற அல்குல் கழுகு குடைந்து உண்டு
நிலைத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும்
கடகம் செறித்த கையைத் தீநாய்
உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்
சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை
காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும்
பண்பு கொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து
மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர்
கருந் தலை வாங்கி கை அகத்து ஏந்தி
06-120
இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய் மகள்
புயலோ குழலோ கயலோ கண்ணோ
குமிழோ மூக்கோ இதழோ கவிரோ
பல்லோ முத்தோ என்னாது இரங்காது
கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து
தண்டாக் களிப்பின் ஆடும் கூத்துக்
கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி
விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து "ஈங்கு
எம் அனை! காணாய்! ஈமச் சுடலையின்
வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன்" என
06-130
தம் அனை தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும்
"பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இத்
தீத்தொழிலாட்டியேன் சிறுவன் தன்னை
யாரும் இல் தமியேன் என்பது நோக்காது
ஆர் உயிர் உண்டது அணங்கோ? பேயோ?
துறையும் மன்றமும் தொல் வலி மரனும்
உறையுளும் கோட்டமும் காப்பாய்! காவாய்
தகவு இலைகொல்லோ சம்பாபதி!" என
மகன் மெய் யாக்கையை மார்பு உறத் தழீஇ
ஈமப் புறங்காட்டு எயில் புற வாயிலில்
06-140
கோதமை என்பாள் கொடுந் துயர் சாற்ற
"கடி வழங்கு வாயிலில் கடுந் துயர் எய்தி
இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை
என் உற்றனையோ? எனக்கு உரை" என்றே
பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற
"ஆரும்இலாட்டியேன் அறியாப் பாலகன்
ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை
அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது
உறங்குவான் போலக் கிடந்தனன் காண்" என
"அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா
06-150
பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக
ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது
மா பெருந் துன்பம் நீ ஒழிவாய்" என்றலும்
"என் உயிர் கொண்டு இவன் உயிர் தந்தருளில் என்
கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும்
இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்
முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள்
"ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால்
செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல்?
ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல்
06-160
ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல்
'கொலை அறம் ஆம்' எனும் தொழில் மாக்கள்
அவலப் படிற்று உரை ஆங்கு அது மடவாய்
உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர்
இலரோ இந்த ஈமப் புறங்காட்டு
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்!
நிரயக் கொடு மொழி நீ ஒழிக" என்றலும்
"தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை
நான்மறை அந்தணர் நல் நூல் உரைக்கும்
மா பெருந் தெய்வம்! நீ அருளாவிடின்
06-170
யானோ காவேன் என் உயிர் ஈங்கு" என
"ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது
ஆழித் தாழி அகவரைத் திரிவோர்
தாம் தரின் யானும் தருகுவன் மடவாய்!
ஈங்கு என் ஆற்றலும் காண்பாய்" என்றே
நால் வகை மரபின் அரூபப் பிரமரும்
நால் நால் வகையில் உரூபப் பிரமரும்
இரு வகைச் சுடரும் இரு மூவகையின்
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும்
பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம்
06-180
எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும்
பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும்
தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து
வரம் தரற்கு உரியோர் தமை முன் நிறுத்தி
"அரந்தை கெடும் இவள் அருந் துயர் இது" எனச்
சம்பாபதி தான் உரைத்த அம் முறையே
எங்கு வாழ் தேவரும் உரைப்பக் கேட்டே
கோதமை உற்ற கொடுந் துயர் நீங்கி
ஈமச் சுடலையில் மகனை இட்டு இறந்த பின்
சம்பாபதி தன் ஆற்றல் தோன்ற
06-190
எங்கு வாழ் தேவரும் கூடிய இடம் தனில்
சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து
நடுவு நின்ற மேருக் குன்றமும்
புடையின் நின்ற எழு வகைக் குன்றமும்
நால் வகை மரபின் மா பெருந் தீவும்
ஓர் ஈர் ஆயிரம் சிற்றிடைத் தீவும்
பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன
பெறு முறை மரபின் அறிவு வரக் காட்டி
ஆங்கு வாழ் உயிர்களும் அவ் உயிர் இடங்களும்
பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து
06-200
மிக்க மயனால் இழைக்கப்பட்ட
சக்கரவாளக் கோட்டம் ஈங்கு இது காண்
இடு பிணக் கோட்டத்து எயில் புறம் ஆதலின்
சுடுகாட்டுக் கோட்டம் என்று அலது உரையார்
இதன் வரவு இது' என்று இருந் தெய்வம் உரைக்க
மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப
இறந்து இருள் கூர்ந்த இடை இருள் யாமத்துத்
தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழியப்
பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ
06-210
அந்தரம் ஆறா ஆறு ஐந்து யோசனைத்
தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த
மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம்
அணி இழை தன்னை வைத்து அகன்றது தான் என்
06-214
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework