ஈங்கு இவள் இன்னணம் ஆக இருங் கடல்
வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடை
தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின்
முத்து விளை கழனி முரி செம் பவளமொடு
விரை மரம் உருட்டும் திரை உலாப் பரப்பின்
ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின்
ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி
வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி
முடக் கால் புன்னையும் மடல் பூந் தாழையும்
வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர்
08-010
அறல் விளங்கு நிலா மணல் நறு மலர்ப் பள்ளித்
துஞ்சு துயில் எழூஉம் அம் சில் ஓதி
காதல் சுற்றம் மறந்து கடைகொள
வேறு இடத்துப் பிறந்த உயிரே போன்று
பண்டு அறி கிளையொடு பதியும் காணாள்
கண்டு அறியாதன கண்ணில் காணா
நீல மாக் கடல் நெட்டிடை அன்றியும்
காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப
'உவவன மருங்கினில் ஓர் இடம்கொல் இது!
சுதமதி ஒளித்தாய்! துயரம் செய்தனை!
08-020
நனவோ கனவோ என்பதை அறியேன்!
மனம் நடுக்குறூஉம் மாற்றம் தாராய்!
வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும்
மெல் வளை! வாராய் விட்டு அகன்றனையோ?
விஞ்சையின் தோன்றிய விளங்கு இழை மடவாள்
வஞ்சம் செய்தனள்கொல்லோ? அறியேன்!
ஒரு தனி அஞ்சுவென் திருவே வா!' எனத்
திரை தவழ் பறவையும் விரி சிறைப் பறவையும்
எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும்
அன்னச் சேவல் அரசன் ஆக
08-030
பல் நிறப் புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி
பாசறை மன்னர் பாடி போல
வீசு நீர்ப் பரப்பின் எதிர் எதிர் இருக்கும்
துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும்
யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள்
குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழ
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி
வீழ் துயர் எய்திய விழுமக் கிளவியின்
தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி
'எம் இதில் படுத்தும் வெவ் வினை உருப்ப
08-040
கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து
வை வாள் உழந்த மணிப் பூண் அகலத்து
ஐயாவோ!' என்று அழுவோள் முன்னர்
விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி
உரை பெறு மும் முழம் நிலமிசை ஓங்கித்
திசைதொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று
விதி மாண் நாடியின் வட்டம் குயின்று
பதும சதுரம் மீமிசை விளங்கி
'அறவோற்கு அமைந்த ஆசனம்' என்றே
நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது
08-050
பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது
தேவர் கோன் இட்ட மா மணிப் பீடிகை
பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம்
கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும்
இருவர் மன்னவர் ஒரு வழித் தோன்றி
'எமது ஈது' என்றே எடுக்கல் ஆற்றார்
தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார்
செங் கண் சிவந்து நெஞ்சு புகையுயிர்த்துத்
தம் பெருஞ் சேனையொடு வெஞ் சமம் புரி நாள்
'இருஞ் செரு ஒழிமின் எமது ஈது' என்றே
08-060
பெருந் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும்
பொரு அறு சிறப்பின் புரையோர் ஏத்தும்
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்
08-063
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework