'அறவோன் ஆசனத்து ஆய் இழை அறிந்த
பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது' என
விரை மலர் ஏந்தி விசும்பூடு இழிந்து
பொரு அறு பூங் கொடி பூமியில் பொலிந்தென
வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம்
முந்தைப் பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப
'உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி
பொருள் வழங்கு செவித் துளை தூர்ந்து அறிவு இழந்த
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்கச்
சுடர் வழக்கு அற்றுத் தடுமாறுகாலை ஓர்
10-010
இள வள ஞாயிறு தோன்றியதென்ன
நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன்
நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் ஆசனம்
நாமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன்
பூமிசை ஏற்றினேன் புலம்பு அறுக" என்றே
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர்ப்
பொலம் கொடி நிலமிசைச் சேர்ந்தெனப் பொருந்தி
'உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன்
என் பெருங் கணவன் யாங்கு உளன்?' என்றலும்
'இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடு
10-020
புலத்தகை எய்தினை பூம்பொழில் அகவயின்
இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன்
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி
சாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன்
தெரு மரல் ஒழித்து ஆங்கு இரத்தினத் தீவத்துத்
தரும சக்கரம் உருட்டினன் வருவோன்
வெங்கதிர் அமயத்து வியன் பொழில் அகவயின்
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி
மெல் இயல்! கண்டனை மெய்ந் நடுக்குற்றனை
நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச
10-030
இராகுலன் "வந்தோன் யார்?" என வெகுளலும்
விரா மலர்க் கூந்தல்! அவன் வாய் புதையா
"வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது
நா நல்கூர்ந்தனை" என்று அவன் தன்னொடு
பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு
"அமர! கேள் நின் தமர் அலம் ஆயினும்
அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்
உண்டி யாம் உன் குறிப்பினம்" என்றலும்
"எம் அனை! உண்கேன் ஈங்குக் கொணர்க" என
அந் நாள் அவன் உண்டருளிய அவ் அறம் 1
10-040
நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும்
உவவன மருங்கில் உன்பால் தோன்றிய
உதயகுமரன் அவன் உன் இராகுலன்
ஆங்கு அவன் அன்றியும் அவன்பால் உள்ளம்
நீங்காத் தன்மை நினக்கும் உண்டு ஆகலின்
கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர்
வெந்து உகு வெங் களர் வீழ்வது போன்ம் என
அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர்
திறப்படற்கு ஏதுவா சேயிழை! செய்தேன்
இன்னும் கேளாய் இலக்குமி! நீ நின்
10-050
தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும்
ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அகவயின்
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்
துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்
அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி
கங்கைப் பேர் யாற்று அடைகரை இருந்துழி
மற வணம் நீத்த மாசு அறு கேள்வி
அறவணன் ஆங்கு அவன்பால் சென்றோனை
"ஈங்கு வந்தீர் யார்?" என்று எழுந்து அவன்
பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும்
10-060
"ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்
மா துயர் எவ்வம் மக்களை நீக்கி
விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி
உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக
தொன்று காலத்து நின்று அறம் உரைத்த
குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும்
பாத பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது
பாதபங்கய மலை எனும் பெயர்த்து ஆயது
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இப்
பழுது இல் காட்சியீர்! நீயிரும் தொழும்" என
10-070
அன்று அவன் உரைத்த அவ் உரை பிழையாது
சென்று கைதொழுது சிறப்புச் செய்தலின்
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
கோதை அம் சாயல்! நின்னொடு கூடினர்
அறிபிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை
பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை
பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம்
அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும்
10-080
அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் அருந் திறல்
மந்திரம் கொள்க' என வாய்மையின் ஓதி
'மதி நாள் முற்றிய மங்கலத் திருநாள்
பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன்
திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி
நின் 'பதிப் புகுவாய்' என்று எழுந்து ஓங்கி
'மறந்ததும் உண்டு' என மறித்து ஆங்கு இழிந்து
'சிறந்த கொள்கைச் சேயிழை! கேளாய்
மக்கள் யாக்கை உணவின் பிண்டம்
10-090
இப் பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும்' என்று
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து
நீங்கியது ஆங்கு நெடுந் தெய்வம் தான் என்
10-093
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework