முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி
மது மலர்த் தாரோன் வஞ்சினம் கூற
'ஏடு அவிழ் தாரோய்! எம் கோமகள் முன்
நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை' என
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும்
உதயகுமரன் உள்ளம் கலங்கி
பொதி அறைப் பட்டோர் போன்று மெய் வருந்தி
"அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய்" என்றே
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம்
19-010
பை அரவு அல்குல் பலர் பசி களையக்
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம்
"முத்தை முதல்வி அடி பிழைத்தாய்" எனச்
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்
இந் நிலை எல்லாம் இளங்கொடி செய்தியின்
பின் அறிவாம்' எனப் பெயர்வோன் தன்னை
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண
பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப
மாலை நெற்றி வான் பிறைக் கோட்டு
நீல யானை மேலோர் இன்றிக்
19-020
காமர் செங் கை நீட்டி வண்டு படு
பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து
நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின்
நகர நம்பியர் வளையோர் தம்முடன்
மகர வீணையின் கிளை நரம்பு வடித்த
இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்பப்
பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி
பறாஅக் குருகின் உயிர்த்து அவன் போய பின்
உறையுள் குடிகை உள்வரிக் கொண்ட
மறு இல் செய்கை மணிமேகலை தான்
19-030
'மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின்
காவலன் மகனோ கைவிடலீ யான்!'
காய்பசியாட்டி காயசண்டிகை என
ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி
"ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர்
மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து" என்றே
நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம்' என
முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த
அமுதசுரபியை அங்கையின் வாங்கிப்
19-040
பதிஅகம் திரிதரும் பைந் தொடி நங்கை
அதிர் கழல் வேந்தன் அடி பிழைத்தாரை
ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம்
விருப்பொடும் புகுந்து வெய்து உயிர்த்துப் புலம்பி
ஆங்குப் பசியுறும் ஆர் உயிர் மாக்களை
வாங்கு கைஅகம் வருந்த நின்று ஊட்டலும்
'ஊட்டிய பாத்திரம் ஒன்று' என வியந்து
கோட்டம் காவலர் 'கோமகன் தனக்கு இப்
பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும்
யாப்பு உடைத்தாக இசைத்தும்' என்று ஏகி
19-050
நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன்
அடியில் படியை அடக்கிய அந் நாள்
நீரின் பெய்த மூரி வார் சிலை
மாவலி மருமான் சீர் கெழு திரு மகள்
சீர்த்தி என்னும் திருத் தகு தேவியொடு
போது அவிழ் பூம்பொழில் புகுந்தனன் புக்குக்
கொம்பர்த் தும்பி குழல் இசை காட்டக்
பொங்கர் வண்டு இனம் நல் யாழ்செய்ய
வரிக் குயில் பாட மா மயில் ஆடும்
விரைப் பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும்
19-060
புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு
மட மயில் பேடையும் தோகையும் கூடி
இரு சிறைக் விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன
ஒரு சிறைக் கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி
'மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும்
ஆடிய குரவை இஃது ஆம்' என நோக்கியும்
கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னைப்
பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையைச்
செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்திப்
பைங் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம்' என்றும்
19-070
அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் இருந்த
பிணவுக் குரங்கு ஏற்றி பெரு மதர் மழைக் கண்
மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல்
கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும்
பாசிலை செறிந்த பசுங் கால் கழையொடு
வால் வீ செறிந்த மராஅம் கண்டு
நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என
தொடி சேர் செங் கையின் தொழுது நின்று ஏத்தியும்
ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர்
நாடகக் காப்பிய நல் நூல் நுனிப்போர்
19-080
பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர்
தண்ணுமைக் கருவிக் கண் எறி தெரிவோர்
குழலொடு கண்டம் கொளச் சீர் நிறுப்போர்
பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர்
ஆரம் பரிந்த முத்தம் கோப்போர்
ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர்
குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர்
அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர்
நல் நெடுங் கூந்தல் நறு விரை குடைவோர்
பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர்
19-090
ஆங்கு அவர் தம்மோடு அகல் இரு வானத்து
வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து
குருந்தும் தளவும் திருந்து மலர்ச் செருந்தியும்
முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும்
பொருந்துபு நின்று திருந்து நகை செய்து
குறுங் கால் நகுலமும் நெடுஞ் செவி முயலும்
பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும்
'வம்' எனக் கூஉய் மகிழ் துணையொடு தன்
செம்மலர்ச் செங் கை காட்டுபு நின்று
மன்னவன் தானும் மலர்க் கணை மைந்தனும்
19-100
இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும்
எந்திரக் கிணறும் இடும் கல் குன்றமும்
வந்து வீழ் அருவியும் மலர்ப் பூம் பந்தரும்
பரப்பு நீர்ப் பொய்கையும் கரப்பு நீர்க் கேணியும்
ஒளித்து உறை இடங்களும் பளிக்கறைப் பள்ளியும்
யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி
மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண் தமிழ் வினைஞ்அர் தம்மொடு கூடிக்
கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினைப்
19-110
பவளத் திரள் கால் பல் மணிப் போதிகைத்
தவள நித்திலத் தாமம் தாழ்ந்த
கோணச் சந்தி மாண் வினை விதானத்துத்
தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின்
பைஞ் சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபத்து
இந்திர திருவன் சென்று இனிது ஏறலும்
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால்
சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி
எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி
19-120
முறம் செவி யானையும் தேரும் மாவும்
மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த
தலைத் தார்ச் சேனையொடு மலைத்துத் தலைவந்தோர்
சிலைக் கயல் நெடுங் கொடி செரு வேல் தடக் கை
ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால்
காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை
வலி கெழு தடக் கை மாவண்கிள்ளி!
ஒளியொடு வாழி ஊழிதோறு ஊழி!
வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை!
கேள் இது மன்னோ! கெடுக நின் பகைஞர்
19-130
யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இம்
மா நகர்த் திரியும் ஓர் வம்ப மாதர்
அருஞ் சிறைக்கோட்டத்து அகவயின் புகுந்து
பெரும் பெயர் மன்ன! நின் பெயர் வாழ்த்தி
ஐயப் பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு
மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள்
ஊழிதோறு ஊழி உலகம் காத்து
வாழி எம் கோ மன்னவ!' என்றலும்
'வருக வருக மடக்கொடி தான்' என்று
அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின்
19-140
வாயிலாளரின் மடக்கொடி தான் சென்று
'ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய!' எனத்
'தாங்கு அருந் தன்மைத் தவத்தோய் நீ யார்?
யாங்கு ஆகியது இவ் ஏந்திய கடிஞை?' என்று
அரசன் கூறலும் ஆய் இழை உரைக்கும்
'விரைத் தார் வேந்தே! நீ நீடு வாழி!
விஞ்சை மகள் யான் விழவு அணி மூதூர்
வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை!
வானம் வாய்க்க! மண் வளம் பெருகுக!
தீது இன்றாக கோமகற்கு! ஈங்கு ஈது
19-150
ஐயக் கடிஞை அம்பல மருங்கு ஓர்
தெய்வம் தந்தது திப்பியம் ஆயது
யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது
ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது' என
'யான் செயற்பாலது என் இளங்கொடிக்கு?' என்று
வேந்தன் கூற மெல் இயல் உரைக்கும்
'சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர்க்கு ஆக்குமது வாழியர்!' என
அருஞ் சிறை விட்டு ஆங்கு ஆய் இழை உரைத்த
பெருந் தவர் தம்மால் பெரும் பொருள் எய்த
கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம்
அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என்
19-162
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework