கடவுள் எழுதிய நெடு நிலைக் கந்தின்
குடவயின் அமைத்த நெடு நிலை வாயில்
முதியாள் கோட்டத்து அகவயின் கிடந்த
மது மலர்க் குழலி மயங்கினள் எழுந்து
விஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன்
மைந்தற்கு உற்றதும் மன்றப் பொதியில்
கந்து உடை நெடு நிலைக் கடவுள் பாவை
அங்கு அவற்கு உரைத்த அற்புதக் கிளவியும்
கேட்டனள் எழுந்து 'கெடுக இவ் உரு' என
தோட்டு அலர்க் குழலி உள்வரி நீங்கித்
21-010
'திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள்
கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன்
உவவன மருங்கில் நின்பால் உள்ளம்
தவிர்விலேன் ஆதலின் தலைமகள் தோன்றி
மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து
பிணிப்பு அறு மாதவன் பீடிகை காட்டி
என் பிறப்பு உணர்ந்த என்முன் தோன்றி
உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின்
பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறம் தரு சால்பும் மறம் தரு துன்பமும்
21-020
யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்கக்
காயசண்டிகை வடிவு ஆனேன் காதல!
வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின்
வெவ் வினை உருப்ப விளிந்தனையோ!' என
விழுமக் கிளவியின் வெய்து உயிர்த்துப் புலம்பி
அழுதனள் ஏங்கி அயாஉயிர்த்து எழுதலும்
'செல்லல் செல்லல்! சேயரி நெடுங்கண்!
அல்லி அம் தாரோன் தன்பால் செல்லல்!
நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம்
மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம்
21-030
பண்டும் பண்டும் பல் பிறப்பு உளவால்
கண்ட பிறவியே அல்ல காரிகை
தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்
விடுமாறு முயல்வோய்! விழுமம் கொள்ளேல்!
என்று இவை சொல்லி, இருந் தெய்வம் உரைத்தலும்
பொன் திகழ் மேனிப் பூங்கொடி பொருந்திப்
'பொய்யா நாவொடு இப் பொதியிலில் பொருந்திய
தெய்வம் நீயோ? திருவடி தொழுதேன்
விட்ட பிறப்பின் வெய்து உயிர்த்து ஈங்கு இவன்
திட்டிவிடம் உணச் செல் உயிர் போயதும்
21-040
நெஞ்சு நடுங்கி நெடுந் துயர் கூர யான்
விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம்
அறிதலும் அறிதியோ? அறிந்தனை ஆயின்
பெறுவேன் தில்ல நின் பேர் அருள் ஈங்கு!' என
'ஐ அரி நெடுங் கண் ஆய் இழை! கேள்' எனத்
தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும்
'காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
மாயம் இல் மாதவன் வரு பொருள் உரைத்து
மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம்
பிரமதருமனைப் பேணினிராகி
21-050
"அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல்
விடியல் வேலை வேண்டினம்" என்றலும்
மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி
காலை தோன்ற வேலையின் வரூஉ
நடைத் திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து
மடைக் கலம் சிதைய வீழ்ந்த மடையனை
சீலம் நீங்காச் செய் தவத்தோர்க்கு
வேலை பிழைத்த வெகுளி தோன்றத்
தோளும் தலையும் துணிந்து வேறாக
வாளின் தப்பிய வல் வினை அன்றே
21-060
விரா மலர்க் கூந்தல் மெல் இயல் நின்னோடு
இராகுலன் தன்னை இட்டு அகலாதது
"தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய
அவல வெவ் வினை" என்போர் அறியார்
அறம் செய் காதல் அன்பினின் ஆயினும்
மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது
ஆங்கு அவ் வினை வந்து அணுகும்காலைத்
தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின்
மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும்
ஆங்கு அவ் வினை காண் ஆய் இழை கணவனை
21-070
ஈங்கு வந்து இவ் இடர் செய்து ஒழிந்தது
இன்னும் கேளாய் இளங் கொடி நல்லாய்!
மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி
மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டுக்
காவலன் நின்னையும் காவல்செய்து ஆங்கு இடும்
இடு சிறை நீக்கி இராசமாதேவி
கூட வைக்கும் கொட்பினள் ஆகி
மாதவி மாதவன் மலர் அடி வணங்கித்
தீது கூற அவள் தன்னொடும் சேர்ந்து
மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு
21-080
காதலி நின்னையும் காவல் நீக்குவள்
அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்பால்
புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை
போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி
மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து
மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும்
தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்
தீவதிலகையின் தன் திறம் கேட்டு
சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின்
ஆங்கு அத் தீவம் விட்டு அருந் தவன் வடிவு ஆய்
21-090
பூங் கொடி வஞ்சி மா நகர் புகுவை
ஆங்கு அந் நகரத்து அறி பொருள் வினாவும்
ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால்
"இறைவன் எம் கோன் எவ் உயிர் அனைத்தும்
முறைமையின் படைத்த முதல்வன்" என்போர்களும்
"தன் உரு இல்லோன் பிற உருப் படைப்போன்
அன்னோன் இறைவன் ஆகும்" என்போர்களும்
"துன்ப நோன்பு இத் தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு
இன்ப உலகு உச்சி இருத்தும்" என்போர்களும்
"பூத விகாரப் புணர்ப்பு" என்போர்களும்
21-100
பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம்
அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள்
"இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார்
அறனோடு என்னை?" என்று அறைந்தோன் தன்னைப்
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த
நறு மலர்க் கோதை! எள்ளினை நகுதி"
எள்ளினை போலும் இவ் உரை கேட்டு! இங்கு
ஒள்ளியது உரை!" என உன் பிறப்பு உணர்த்துவை
"ஆங்கு நிற்கொணர்ந்த அருந் தெய்வம் மயக்க
காம்பு அன தோளி! கனா மயக்கு உற்றனை"
21-110
என்று அவன் உரைக்கும் இளங் கொடி நல்லாய்!
"அன்று" என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை
"தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும்
வாயே" என்று மயக்கு ஒழி மடவாய்
வழு அறு மரனும் மண்ணும் கல்லும்
எழுதிய பாவையும் பேசா என்பது
அறிதலும் அறிதியோ? அறியாய்கொல்லோ?
அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய்!
முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும்
கொடித் தேர் வீதியும் தேவர் கோட்டமும்
21-120
முது மர இடங்களும் முது நீர்த் துறைகளும்
பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி
காப்பு உடை மா நகர்க் காவலும் கண்ணி
யாப்பு உடைத்தாக அறிந்தோர் வலித்து
மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்
கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க
ஆங்கு அத் தெய்வதம் அவ் இடம் நீங்கா
ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும்
என் திறம் கேட்டியோ இளங் கொடி நல்லாய்!
மன் பெருந் தெய்வ கணங்களின் உள்ளேன்!
21-130
துவதிகன் என்பேன் தொன்று முதிர் கந்தின்
மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின்
நீங்கேன் யான் என் நிலை அது கேளாய்
மாந்தர் அறிவது வானவர் அறியார்
ஓவியச்சேனன் என் உறு துணைத் தோழன்
ஆவதை இந் நகர்க்கு ஆர் உரைத்தனரோ?
அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம்
உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி
பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து
நா நனி வருந்த என் நலம் பாராட்டலின்
21-140
மணிமேகலை! யான் வரு பொருள் எல்லாம்
துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு' என
"தேறேன் அல்லேன் தெய்வக் கிளவிகள்
ஈறு கடைபோக எனக்கு அருள்?" என்றலும்
துவதிகன் உரைக்கும்' சொல்லலும் சொல்லுவேன்
வருவது கேளாய் மடக் கொடி நல்லாய்!
மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து
பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய
ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய்
ஈங்கு இம் முதியாள் இடவயின் வைத்த
21-150
தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கித்
தையல்! நிற்பயந்தோர் தம்மொடு போகி
அறவணன் தானும் ஆங்கு உளன் ஆதலின்
செறி தொடி! காஞ்சி மா நகர் சேர்குவை
அறவணன் அருளால் ஆய் தொடி! அவ் ஊர்ப்
பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி
வறன் ஓடு உலகில் மழைவளம் தரூஉம்
அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை
ஆய் தொடிக்கு அவ் ஊர் அறனொடு தோன்றும்
ஏது நிகழ்ச்சி யாவும் பல உள
21-160
பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம்
அறவணன் தனக்கு நீ உரைத்த அந் நாள்
தவமும் தருமமும் சார்பின் தோற்றமும்
பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து
"மற இருள் இரிய மன் உயிர் ஏம் உற
அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு இல் இருத்தியொடு
புத்த ஞாயிறு தோன்றும்காறும்
செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா
இத் தலம் நீங்கேன் இளங்கொடி! யானும்
தாயரும் நீயும் தவறு இன்றுஆக
21-170
வாய்வதாக நின் மனப்பாட்டு அறம்!" என
ஆங்கு அவன் உரைத்தலும் அவன் மொழி பிழையாய்
பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின்
கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள
உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம்
ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய்
மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து
பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்குத்
தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி
இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை!
21-180
ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை
வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம்
சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய்!
ஈது நின் பிறப்பு என்பது தௌிந்தே
உவவன மருங்கில் நின்பால் தோன்றி
மணிபல்லவத்திடைக் கொணர்ந்தது கேள் என
துவதிகன் உரைத்தலும் துயர்க் கடல் நீங்கி
அவதி அறிந்த அணி இழை நல்லாள்
வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும்
உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என்
21-190
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework