'நவை அறு நன் பொருள் உரைமினோ' என
சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து
வைதிக மார்க்கத்து அளவை வாதியை
எய்தினள் எய்தி 'நின் கடைப்பிடி இயம்பு' என
'வேத வியாதனும் கிருதகோடியும்
ஏதம் இல் சைமினி எனும் இவ் ஆசிரியர்
பத்தும் எட்டும் ஆறும் பண்புறத்
தம் தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர்
காண்டல் கருதல் உவமம் ஆகமம்
ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு
27-010
ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு
எய்தி உண்டாம் நெறி என்று இவை தம்மால்
பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும்
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும்
கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும்
நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால்
சுவையும் மெய்யால் ஊறும் எனச் சொன்ன
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று
துக்கமும் சுகமும் எனத் துயக்கு அற அறிந்து
உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி
27-020
பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி
சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது
கிட்டிய தேசம் நாமம் சாதி
குணம் கிரியையின் அறிவது ஆகும்
கருத்து அளவு ஆவது
குறிக்கொள் அனுமானத்து அனுமேயத்
தகைமை உணரும் தன்மையது ஆகும்
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம்
பொது எனப்படுவது சாதன சாத்தியம்
இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும்
27-030
கடம் திகழ் யானைக் கான ஒலி கேட்டோன்
உடங்கு "எழில் யானை அங்கு உண்டு" என உணர்தல்
எச்சம் என்பது வெள்ள ஏதுவினால்
நிச்சயித்து அத் தலை மழை நிகழ்வு உரைத்தல்
முதல் என மொழிவது கருக்கொள் முகில் கண்டு
"இது மழை பெய்யும் என இயம்பிடுதல்
என்னும் ஏதுவின் ஒன்று முக் காலம்
தன்னில் ஒன்றில் சார்ந்து உளதாகி
மண்ட உயிர் முதல் மாசு இன்றாகி
காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்
27-040
உவமம் ஆவது ஒப்புமை அளவை
"கவய மா ஆப் போலும்" எனக் கருதல்
ஆகம அளவை அறிவன் நூலால்
"போக புவனம் உண்டு" எனப் புலங்கொளல்
அருத்தாபத்தி "ஆய்க்குடி கங்கை
இருக்கும்" என்றால் கரையில் என்று எண்ணல்
இயல்பு யானைமேல் இருந்தோன் தோட்டிற்கு
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல்
ஐதிகம் என்பது உலகு மறை "இம் மரத்து
எய்தியது ஓர் பேய் உண்டு" எனத் தௌிதல்
27-050
அபாவம் என்பது இன்மை "ஓர் பொருளைத்
தவாது அவ் இடத்துத் தான் இலை" என்றல்
மீட்சி என்பது "இராமன் வென்றான்" என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல்
எட்டு உள பிரமாண ஆபாசங்கள்
சுட்டுணர்வொடு திரியக் கோடல் ஐயம்
தேராது தௌிதல் கண்டு உணராமை
எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல்
27-060
நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது
எனைப் பொருள் உண்மை மாத்திரை காண்டல்
திரியக் கோடல் ஒன்றை ஒன்று என்றல்
விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல்
ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா
மையல் தறியோ? மகனோ? என்றல்
தேராது தௌிதல் செண்டு வௌியில்
ஓராது தறியை மகன் என உணர்தல்
கண்டு உணராமை கடு மாப் புலி ஒன்று
அண்டலை முதலிய கண்டும் அறியாமை
27-070
இல் வழக்கு என்பது முயற்கோடு ஒப்பன
சொல்லின் மாத்திரத்தால் கருத்தில் தோன்றல்
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்குத் தீப்
புணர்ந்திடல் மருந்து எனப் புலம் கொள நினைத்தல்
நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று
பிறர் சொலக் கருதல் இப் பெற்றிய அளவைகள்
பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம்
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர்
27-080
தாம் பிருகற்பதி சினனே கபிலன்
அக்கபாதன் கணாதன் சைமினி
மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம்
உவமானம் அருத்தாபத்தி அபாவம்
இவையே இப்போது இயன்று உள அளவைகள்'
என்றவன் தன்னை விட்டு 'இறைவன் ஈசன்' என
நின்ற சைவ வாதி நேர்படுதலும்
'பரசும் நின் தெய்வம் எப்படித்து?' என்ன
'இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமய்க்
27-090
கட்டி நிற்போனும் கலை உருவினோனும்
படைத்து விளையாடும் பண்பினோனும்
துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும்
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும்
அன்னோன் இறைவன் ஆகும்' என்று உரைத்தனன்
'பேர் உலகு எல்லாம்' பிரம வாதி 'ஓர்
தேவன் இட்ட முட்டை' என்றனன்
காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதினன் 'நாரணன் காப்பு' என்று உரைத்தனன்
'கற்பம் கை சந்தம் கால் எண் கண்
27-100
தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு
உற்ற வியாகரணம் முகம் பெற்றுச்
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு
ஆதி அந்தம் இல்லை அது நெறி' எனும்
வேதியன் உரையின் விதியும் கேட்டு
'மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற
எத் திறத்தினும் இசையாது இவர் உரை' என
ஆசீவக நூல் அறிந்த புராணனை
'பேசும் நின் இறை யார்? நூற்பொருள் யாது?' என
'எல்லை இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும்
27-110
புல்லிக் கிடந்து புலப்படுகின்ற
வரம்பு இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து
உரம் தரும் உயிரோடு ஒரு நால் வகை அணு
அவ் அணு உற்றும் கண்டும் உணர்ந்திடப்
பெய் வகை கூடிப் பிரிவதும் செய்யும்
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின
மலை மரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும்
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்
அவ் வகை அறிவது உயிர் எனப் படுமே
வற்பம் ஆகி உறும் நிலம் தாழ்ந்து
27-120
சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய்
இழினென நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீத்
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம்
காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை
வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால்
ஆதி இல்லாப் பரமாணுக்கள்
தீதுற்று யாவதும் சிதைவது செய்யா
புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா
முது நீர் அணு நில அணுவாய்த் திரியா
ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா
27-130
அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும்
குலாம் மலை பிறவாக் கூடும் பலவும்
பின்னையும் பிரிந்து தம் தன்மைய ஆகும்
மன்னிய வயிரமாய்ச் செறிந்து வற்பமும் ஆம்
வேய் ஆய்த் துளைபடும் பொருளா முளைக்கும்
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம்
நிறைந்த இவ் அணுக்கள் பூதமாய் நிகழின்
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின்
ஒன்று முக்கால் அரை கால் ஆய் உறும்
27-140
துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே
இக் குணத்து அடைந்தால் அல்லது நிலன் ஆய்ச்
சிக்கென்பதுவும் நீராய் இழிவதும்
தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும்
ஆய தொழிலை அடைந்திடமாட்டா
ஓர் அணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர்
தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர்
மாலைப் போதில் ஒரு மயிர் அறியார்
சாலத் திரள் மயிர் தோற்றுதல் சாலும்
கருமம் பிறப்பும் கரு நீலப் பிறப்பும்
27-150
பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்
என்று இவ் ஆறு பிறப்பினும் மேவி
பண்புறு வரிசையின் பாற்பட்டுப் பிறந்தோர்
கழி வெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர்
அழியல் வேண்டார் அது உறற்பாலார்
இது செம்போக்கின் இயல்பு இது தப்பும்
அது மண்டலம் என்று அறியல் வேண்டும்
பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும்
உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும்
27-160
பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும்
கருவில் பட்ட பொழுதே கலக்கும்
இன்பமும் துன்பமும் இவையும் அணு எனத் தகும்
முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது
மற்கலி நூலின் வகை இது' என்ன
சொல் தடுமாற்றத் தொடர்ச்சியை விட்டு
நிகண்ட வாதியை 'நீ உரை நின்னால்
புகழும் தலைவன் யார்? நூற்பொருள் யாவை,
அப் பொருள் நிகழ்வும் கட்டும் வீடும்
மெய்ப்பட விளம்பு' என விளம்பல் உறுவோன்
27-170
'இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன்
தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும்
அதன்மாத்திகாயமும் கால ஆகாயமும்
தீது இல் சீவனும் பரமாணுக்களும்
நல்வினையும் தீவினையும் அவ் வினையால்
செய்வுறு பந்தமும் வீடும் இத் திறத்த
ஆன்ற பொருள் தன் தன்மையது ஆயும்
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும்
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று
நுனித்த குணத்து ஓர் கணத்தின் கண்ணே
27-180
தோற்றமும் நிலையும் கேடும் என்னும்
மாற்று அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம்
நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம்
நிம்பத்து அப் பொருள் அன்மை அநித்தயம்
பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம்
இயற்றி அப் பயறு அழிதலும் ஏதுத்
தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய்
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா
அப்படித்தாகி அதன் மாத்திகாயமும்
எப் பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் 2
27-190
காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும்
ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும்
ஆக்கும் ஆகாயம் எல்லாப் பொருட்கும்
பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும்
சீவன் உடம்போடு ஒத்துக் கூடி
தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும்
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும்
சீர்சால் நல்வினை தீவினை அவை செயும்
வரு வழி இரண்டையும் மாற்றி முன்செய்
அரு வினைப் பயன் அனுபவித்து அறுத்திடுதல்
27-200
அது வீடு ஆகும்' என்றனன் அவன்பின்
'இது சாங்கிய மதம்' என்று எடுத்து உரைப்போன்
'தனை அறிவு அரிதாய் தான் முக் குணமாய்
மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய்
எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடம் எனச்
சொல்லுதல் மூலப் பகுதி சித்தத்து
மான் என்று உரைத்த புத்தி வௌிப்பட்டு
அதன்கண் ஆகாயம் வௌிப்பட்டு அதன்கண்
வாயு வௌிப்பட்டு அதன்கண் அங்கி
ஆனது வௌிப்பட்டு அதன்கண் அப்பின்
27-210
தன்மை வௌிப்பட்டு அதில் மண் வௌிப்பட்டு
அவற்றின் கூட்டத்தில் மனம் வௌிப்பட்டு
ஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும்
ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும்
வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும்
அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும்
தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும்
நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்
சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய்
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என
27-220
ஆக்கிய இவை வௌிப்பட்டு இங்கு அறைந்த
பூத விகாரத்தால் மலை மரம் முதல்
ஓதிய வௌிப்பட்டு உலகாய் நிகழ்ந்து
வந்த வழியே இவை சென்று அடங்கி
அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும்
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம்
அறிதற்கு எளிதாய் முக் குணம் அன்றி
பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி
எப் பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி
அப் பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய்
27-230
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய்
நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன்
புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம்
ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம்
உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம்' எனச்
செயிர் அறச் செப்பிய திறமும் கேட்டு
27-240
'வைசேடிக! நின் வழக்கு உரை' என்ன
'பொய் தீர் பொருளும் குணமும் கருமமும்
சாமானியமும் விசேடமும் கூட்டமும்
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது
குணமும் தொழிலும் உடைத்தாய் எத் தொகைப்
பொருளுக்கும் ஏது ஆம் அப் பொருள் ஒன்பான்
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம்
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும்
பயில் குணம் உடைத்து நின்ற நான்கும்
27-250
சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை
மாசு இல் பெருமை சிறுமை வன்மை
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம்
என்னும் நீர்மை பக்கம் முதல் அனேகம்
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும்
பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு
உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான்
போதலும் நிற்றலும் பொதுக் குணம் ஆதலின்
சாதலும் நிகழ்தலும் அப் பொருள் தன்மை
27-260
ஒன்று அணு கூட்டம் குணமும் குணியும்' என்று
ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே
'பூத வாதியைப் புகல் நீ' என்னத்
'தாதகிப் பூவும் கட்டியும் இட்டு
மற்றும் கூட்ட மதுக் களி பிறந்தாங்கு
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்
அவ் உணர்வு அவ் அப் பூதத்து அழிவுகளின்
வெவ் வேறு பிரியும் பறை ஓசையின் கெடும்
உயிரொடும் கூட்டிய உணர்வு உடைப் பூதமும்
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும்
27-270
அவ் அப் பூத வழி அவை பிறக்கும்
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும்
உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே
கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும்
இம்மையும் இம்மைப் பயனும் இப் பிறப்பே
பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்'
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு
'நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன்
பிறந்த முன் பிறப்பை எய்தப் பெறுதலின்
அறிந்தோர் உண்டோ?' என்று நக்கிடுதலும்
27-280
'தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும்
மையல் உறுவார் மனம் வேறு ஆம் வகை
ஐயம் அன்றி இல்லை' என்றலும் 'நின்
தந்தை தாயரை அனுமானத்தால் அலது
இந்த ஞாலத்து எவ் வகை அறிவாய்?
மெய்யுணர்வு இன்றி மெய்ப் பொருள் உணர்வு அரிய
ஐயம் அல்லது இது சொல்லப் பெறாய்' என
உள்வரிக் கோலமோடு உன்னிய பொருள் உரைத்து
ஐவகைச் சமயமும் அறிந்தனள் ஆங்கு என்
27-289
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework