பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
- விவரங்கள்
- தமிழர்கள்
- தாய்ப் பிரிவு: ஐம்பெருங்காப்பியங்கள்
- மணிமேகலை
தானம் தாங்கிச் சீலம் தலைநின்று போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள் புத்த தன்ம சங்கம் என்னும் முத் திற மணியை மும்மையின் வணங்கி சரணாகதியாய்ச் 'சரண்' சென்று அடைந்தபின் முரணாத் திருவறமூர்த்தியை மொழிவோன் 'அறிவு வறிதாய் உயிர் நிறை காலத்து முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப துடிதலோகம் ஒழியத் தோன்றி போதி மூலம் பொருந்தியிருந்து |
30-010 |
மாரனை வென்று வீரன் ஆகி குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும் வாமன் வாய்மை ஏமக் கட்டுரை இறந்த காலத்து எண் இல் புத்தர்களும் சிறந்து அருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது ஈர் அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய்ச் சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும் இலக்கு அணத் தொடர்தலின் மண்டில வகையாய் அறியக் காட்டி எதிர் முறை ஒப்ப மீட்சியும் ஆகி |
30-020 |
ஈங்கு இது இல்லாவழி இல்லாகி ஈங்கு இது உள்ளவழி உண்டு ஆகலின் தக்க தக்க சார்பின் தோற்றம் எனச் சொற்றகப்பட்டும் இலக்கு அணத் தொடர்பால் கருதப்பட்டும் கண்டம் நான்கு உடைத்தாய் மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய் தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய் தோற்றற்கு ஏற்ற காலம் மூன்று உடைத்தாய் குற்றமும் வினையும் பயனும் விளைந்து நிலையில வறிய துன்பம் என நோக்க |
30-030 |
உலையா வீட்டிற்கு உறுதி ஆகி நால்வகை வாய்மைக்குச் சார்பு இடன் ஆகி ஐந்து வகைக் கந்தத்து அமைதி ஆகி மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி இயன்ற நால்வகையால் வினா விடை உடைத்தாய் நின்மதி இன்றி ஊழ்பாடு இன்றிப் பின்போக்கு அல்லது பொன்றக் கெடாதாய் பண்ணுநர் இன்றிப் பண்ணப் படாதாய் யானும் இன்றி என்னதும் இன்றி |
30-040 |
போனதும் இன்றி வந்ததும் இன்றி முடித்தலும் இன்றி முடிவும் இன்றி வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனையன எல்லாம் தானே ஆகிய பேதைமை செய்கை உணர்வே அருஉரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும் பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர் அறியார்ஆயின் ஆழ் நரகு அறிகுவர் |
30-050 |
"பேதைமை என்பது யாது?" என வினவின் ஓதிய இவற்றை உணராது மயங்கி இயற்படு பொருளால் கண்டது மறந்து முயற்கோடு உண்டு எனக் கேட்டது தௌிதல் உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்றே நல்வினை தீவினை என்று இரு வகையால் சொல்லப்பட்ட கருவில் சார்தலும் |
30-060 |
கருவில் பட்ட பொழுதினுள் தோற்றி வினைப்பயன் விளையுங்காலை உயிர்கட்கு மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும் "தீவினை என்பது யாது?" என வினவின் ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய் கொலையே களவே காமத் தீவிழைவு உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் பொய்யே குறளை கடுஞ்சொல் பயன் இல் சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும் வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று |
30-070 |
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப் பத்து வகையால் பயன் தெரி புலவர் இத் திறம் படரார் படர்குவர் ஆயின் விலங்கும் பேயும் நரகரும் ஆகி கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றுவர் "நல்வினை என்பது யாது?" என வினவின் சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச் சீலம் தாங்கித் தானம் தலைநின்று மேல் என வகுத்த ஒருமூன்று திறத்துத் தேவரும் மக்களும் பிரமரும் ஆகி |
30-080 |
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின் புரிவு இன்றாகிப் புலன் கொளாததுவே அருஉரு என்பது அவ் உணர்வு சார்ந்த உயிரும் உடம்பும் ஆகும் என்ப வாயில் ஆறும் ஆயுங்காலை உள்ளம் உறுவிக்க உறும் இடன் ஆகும் ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும் வேறு புலன்களை மேவுதல் என்ப நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல் |
30-090 |
வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை பற்று எனப்படுவது பசைஇய அறிவே பவம் எனப்படுவது கரும ஈட்டம் தரும் முறை இது எனத் தாம்தாம் சார்தல் பிறப்பு எனப்படுவது அக் கருமப் பெற்றியின் உறப் புணர் உள்ளம் சார்பொடு கதிகளில் காரண காரிய உருக்களில் தோன்றல் பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய் இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல் மூப்பு என மொழிவது அந்தத்து அளவும் |
30-100 |
தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல் சாக்காடு என்பது அருஉருத் தன்மை யாக்கை வீழ் கதிரென மறைந்திடுதல் பேதைமை சார்வா செய்கை ஆகும் செய்கை சார்வா உணர்ச்சி ஆகும் உணர்ச்சி சார்வா அரூரு ஆகும் அருஉருச் சார்வா வாயில் ஆகும் வாயில் சார்வா ஊறு ஆகும்மே ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும் நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும் |
30-110 |
வேட்கை சார்ந்து பற்று ஆகும்மே பற்றின் தோன்றும் கருமத் தொகுதி கருமத் தொகுதி காரணமாக வருமே ஏனை வழிமுறைத் தோற்றம் தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு அவலம் அரற்றுக் கவலை கையாறு எனத் தவல் இல் துன்பம் தலைவரும் என்ப ஊழின் மண்டிலமாச் சூழும் இந் நுகர்ச்சி பேதைமை மீள செய்கை மீளும் செய்கை மீள உணர்ச்சி மீளும் |
30-120 |
உணர்ச்சி மீள அருஉரு மீளும் அருஉரு மீள வாயில் மீளும் வாயில் மீள ஊறு மீளும் ஊறு மீள நுகர்ச்சி மீளும் நுகர்ச்சி மீள வேட்கை மீளும் வேட்கை மீள பற்று மீளும் பற்று மீள கருமத் தொகுதி மீளும் கருமத் தொகுதி மீளத் தோற்றம் மீளும் தோற்றம் மீளப் பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்புச் |
30-130 |
சாக்காடு அவலம் அரற்றுக் கவலை கையாறு என்று இக் கடை இல் துன்பம் எல்லாம் மீளும் இவ் வகையால் மீட்சி ஆதிக் கண்டம் ஆகும் என்ப பேதைமை செய்கை என்று இவை இரண்டும் காரண வகைய ஆதலானே இரண்டாம் கண்டம் ஆகும் என்ப உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே நுகர்ச்சி என்று நோக்கப்படுவன முன்னவற்று இயல்பான் துன்னிய ஆதலின் |
30-140 |
மூன்றாம் கண்டம் வேட்கை பற்று கரும ஈட்டம் எனக் கட்டுரைப்பவை மற்று அப் பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள் குற்றமும் வினையும் ஆகலானே நான்காம் கண்டம் பிறப்பே பிணியே மூப்பே சாவு என மொழிந்திடும் துன்பம் என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின் பிறப்பின் முதல் உணர்வு ஆதிச் சந்தி நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம் புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி |
30-150 |
கன்மக் கூட்டத்தொடு வரு பிறப்பிடை முன்னிச் செல்வது மூன்றாம் சந்தி மூன்று வகைப் பிறப்பும் மொழியுங்காலை ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே தோன்றல் வீடு எனத் துணிந்து தோன்றியும் உணர்வு உள் அடங்க உருவாய்த் தோன்றியும் உணர்வும் உருவும் உடங்கத் தோன்றிப் புணர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும் காலம் மூன்றும் கருதுங்காலை இறந்த காலம் என்னல் வேண்டும் |
30-160 |
மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை நிகழ்ந்த காலம் என நேரப்படுமே உணர்வே அருஉரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் என்று இவை சொல்லுங்காலை எதிர்காலம் என இசைக்கப்படுமே பிறப்பே பிணியே மூப்பே சாவே அவலம் அரற்று கவலை கையாறுகள் குலவிய குற்றம் எனக் கூறப்படுமே அவாவே பற்றே பேதைமை என்று இவை |
30-170 |
புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும் உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே நுகர்ச்சி பிறப்பு மூப்புப் பிணி சாவு இவை நிகழ்ச்சிப் பயன் ஆங்கே நேருங்காலை குற்றமும் வினையும் பயனும் துன்பம் பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா எப்பொருளுக்கும் ஆன்மா இலை என இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம் உணர்வே அருஉரு வாயில் ஊறே நுகர்வே பிறப்பே பிணி மூப்புச் சாவே |
30-180 |
அவலம் அரற்றுக் கவலை கையாறு என நுவலப் படுவன நோய் ஆகும்மே அந் நோய் தனக்குப் பேதைமை செய்கை அவாவே பற்றுக் கரும ஈட்டம் இவை காரணம் ஆகும் துன்பம் தோற்றம் பற்றே காரணம் இன்பம் வீடே பற்றிலி காரணம் ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவது உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன |
30-190 |
அறுவகை வழக்கும் மறு இன்று கிளப்பின் தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த உண்மை வழக்கும் இன்மை வழக்கும் உள்ளது சார்ந்த உண்மை வழக்கும் இல்லது சார்ந்த இன்மை வழக்கும் உள்ளது சார்ந்த இன்மை வழக்கும் இல்லது சார்ந்த உண்மை வழக்கும் எனச் சொல்லிய தொகைத் திறம் உடம்பு நீர் நாடு தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இந் |
30-200 |
நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல் இயல்பு மிகுத்துரை ஈறுடைத்து என்றும் தோன்றிற்று என்றும் மூத்தது என்றும் மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்துரைத்தல் இயைந்துரை என்பது எழுத்துப் பல கூடச் சொல் எனத் தோற்றும் பல நாள் கூடிய எல்லையைத் திங்கள் என்று வழங்குதல் உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயற்கோடு உள்ளது சார்ந்த உள் வழக்காகும் சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி |
30-210 |
உள்ளது சார்ந்த இல் வழக்காகும் சித்தம் உற்பவித்தது மின்போல் என்கை இல்லது சார்ந்த உண்மை வழக்காகும் காரணம் இன்றிக் காரியம் நேர்தல் இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும் முயற்கோடு இன்மையின் தோற்றமும் இல் எனல் நான்கு நயம் எனத் தோன்றப்படுவன ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை இயல்பு என்க காரண காரியம் ஆகிய பொருள்களை ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம் |
30-220 |
வீற்று வீற்றாக வேதனை கொள்வது வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும் பொன்றக் கெடா அப் பொருள் வழிப்பொருள்களுக்கு ஒன்றிய காரணம் உதவு காரியத்தைத் தருதற்கு உள்ளம் தான் இலை என்றல் புரிவின்மை நயம் எனப் புகறல் வேண்டும் நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல் நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள்பயன் தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும் அப் பொருளிடைப் பற்று ஆகாது என்றும் |
30-230 |
செய்வானொடு கோட்பாடு இலை என்றும் எய்து காரணத்து ஆம் காரியம் என்றும் அதுவும் அன்று அது அலாததும் அன்று என்றும் விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும் வினா விடை நான்கு உள துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல் வினாவின் விடுத்தல் வாய் வாளாமை எனத் "தோன்றியது கெடுமோ? கெடாதோ?" என்றால் "கேடு உண்டு" என்றல் துணிந்து சொலல் ஆகும் "செத்தான் பிறப்பானோ? பிறவானோ?" |
30-240 |
என்று செப்பின் "பற்று இறந்தானோ? அல் மகனோ?" எனல் மிகக் கூறிட்டு மொழிதல் என விளம்புவர் வினாவின் விடுத்தல் "முட்டை முந்திற்றோ பனை முந்திற்றோ? எனக் கட்டுரை செய்" என்றால் "எம் முட்டைக்கு எப் பனை" என்றல் வாய் வாளாமை "ஆகாயப் பூப் பழைதோ, புதிதோ?" என்று புகல்வான் உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல் கட்டும் வீடும் அதன் காரணத்தது |
30-250 |
ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம் காமம் வெகுளி மயக்கம் காரணம் அநித்தம் துக்கம் அநான்மா அசுசி என தனித்துப் பார்த்துப் பற்று அறுத்திடுதல் மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக! சுருதி சிந்தனா பாவனா தரிசனை கருதி உய்த்து மயக்கம் கடிக! இந் நால் வகையான் மனத்திருள் நீங்கு!' என்று |
30-260 |
முன் பின் மலையா மங்கல மொழியின் ஞான தீபம் நன்கனம் காட்டத் தவத் திறம் பூண்டு தருமம் கேட்டுப் 'பவத் திறம் அறுக!' எனப் பாவை நோற்றனள் என் |
30-264 |