பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.
(வெளிமானிடம் சென்றனர் புலவர். அவன் துஞ்ச, இளவெளிமான் சிறிது கொடுக்கின்றான். அதனைக் கொள்ளாது வெளிமான் துஞ்சியதற்கு இரங்கிப்
பாடிய செய்யுள் இது.)

‘நீடுவாழ்க!’ என்று, யான் நெடுங்கடை குறுகிப்,
பாடி நின்ற பசிநாட் கண்ணே,
‘கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப்,
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று’ என
நச்சி இருந்த நசைபழுது ஆக,
அட்ட குழிசி அழற்பயந் தாஅங்கு,
‘அளியர் தாமே ஆர்க’ என்னா
அறன்இல் கூற்றம் திறனின்று துணிய,
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
வாழைப் பூவின் வளைமுறி சிதற,
முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை,
வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே;
ஆங்கு அது நோயின்று ஆக, ஓங்குவரைப்
புலிபார்த்து ஒற்றிய களிற்றுஇரை பிழைப்பின்,
எலிபார்த்து ஒற்றாது ஆகும்; மலி திரைக்
கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று,
நனியுடைப் பரிசில் தருகம்,
எழுமதி, நெஞ்சே ! துணிபுமுந் துறுத்தே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework