(இணைக்குறள் ஆசிரியப்பா)

குணவாயில் கோட்டத்து அரசுதுறந்து இருந்த
குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்குக்
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடிப்
பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒருமுலை இழந்தாள்ஓர் திருமா பத்தினிக்கு (5)

அமரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டிஅவள்
காதல் கொழுநனைக் காட்டி அவளொடுஎம்
கட்புலம் காண விண்புலம் போயது
இறும்பூது போலும்அ·து அறிந்தருள் நீயென,
அவனுழை இருந்த தண்தமிழ்ச் சாத்தன் (10)

யான்அறி குவன்அது பட்டதுஎன் றுரைப்போன்:
ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்ப்
பேராச் சிறப்பின் புகார்நக ரத்துக்
கோவலன் என்பான்ஓர் வாணிகன் அவ்வூர்
நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு (15)

ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுறக்
கண்ணகி என்பாள் மனைவி அவள்கால்
பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
பாடல்சால் சிறப்பிற் பாண்டியன் பெருஞ்சீர்
மாட மதுரை புகுந்தனன், அதுகொண்டு (20)

மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன்
பொன்செய் கொல்லன் தன்கைக் காட்டக்
கோப்பெருந் தேவிக்கு அல்லதை இச்சிலம்பு
யாப்புறவு இல்லைஈங்கு இருக்கயென்று ஏகிப்
பண்டுதான் கொண்ட சில்லரிச் சிலம்பினைக் (25)

கண்டனன் பிறன்ஓர் கள்வன் கையென,
வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரா னாகிக்
கன்றிய காவலர்க் கூஉய்அக் கள்வனைக்
கொன்றுஅச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் (30)

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
நிலைக்களம் காணாள் நெடுங்கண் நீர்உகுத்துப்
பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற
முத்தார மார்பின் முலைமுகந் திருகி
நிலைகெழு கூடல் நீள்எரி ஊட்டிய (35)

பலர்புகழ் பத்தினி யாகும் இவள்என,
வினைவிளை காலம் என்றீர் யாதுஅவர்
வினைவிளைவு என்ன, விறலோய் கேட்டி
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் (40)

வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன்
ஆர்அஞர் உற்ற வீரபத் தினிமுன்
மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக்
கொதியழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்
முதிர்வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின் (45)

முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபம் கட்டியது ஆகலின்
வார்ஒலி கூந்தல்நின் மணமகன் தன்னை (50)

ஈர்ஏழ் நாளகத்து எல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவில் காண்டல் இல்எனக்
கோட்டம்இல் கட்டுரை கேட்டனன் யான்என,
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம் (55)

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்என, (60)

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுகஎன் றார்க்குஅவர்,
மங்கல வாழ்த்துப் பாடலும், குரவர்
மனையறம் படுத்த காதையும், நடம்நவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும், (65)

அந்தி மாலைச் சிறப்புசெய் காதையும்,
இந்திர விழவூர் எடுத்த காதையும்,
கடலாடு காதையும்,
மடல்அவிழ் கானல்வரியும், வேனில்வந் திறுத்தென
மாதவி இரங்கிய காதையும், தீதுடைக் (70)

கனாத்திறம் உரைத்த காதையும், வினாத்திறத்து
நாடுகாண் காதையும், காடுகாண் காதையும்,
வேட்டுவர் வரியும், தோட்டலர் கோதையொடு
புறஞ்சேரி இறுத்த காதையும், கறங்குஇசை
ஊர்க்காண் காதையும், சீர்சால் நங்கை (75)

அடைக்கலக் காதையும், கொலைக்களக் காதையும்,
ஆய்ச்சியர் குரவையும், தீத்திறம் கேட்ட
துன்ப மாலையும், நண்பகல் நடுங்கிய
ஊர்சூழ் வரியும், சீர்சால் வேந்தனொடு
வழக்குரை காதையும், வஞ்சின மாலையும், (80)

அழல்படு காதையும், அருந்தெய்வம் தோன்றிக்
கட்டுரை காதையும், மட்டலர் கோதையர்
குன்றக் குரவையும், என்றுஇவை அனைத்துடன்
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,
வாழ்த்து, வரந்தரு காதையொடு (85)

இவ்வா றைந்தும்
உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்,
இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென். (90)

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework