என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத்தோளி
நின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி
முறையில் அரசன்றன் ஊரிருந்து வாழும்
நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று
பட்டேன் படாத துயரம் படுகாலை 5
உற்றேன் உறாதது உறுவனே ஈதொன்று
கள்வனோ அல்லன் கணவன்என் காற்சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈதொன்று
மாதர்த் தகைய மடவார்கண் முன்னரே
காதற் கணவனைக் காண்பனே ஈதொன்று 10
காதற் கணவனைக் கண்டா லவன்வாயில்
தீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று
தீதறு நல்லுரை கேளா தொழிவேனேல்
நோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று

அல்லலுற் றாற்றா தழுவாளைக் கண்டேங்கி 15
மல்லல் மதுரையா ரெல்லாருந் தாமயங்கிக்
களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல்

மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன்
தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல் 20
மண்குளிரச் செய்யும் மறவேல் நெடுந்தகை
தண்குடை வெம்மை விளைத்த திதுவென்கொல்

செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல்
ஐயரி யுண்கண் அழுதேங்கி யரற்றுவாள் 25
தெய்வமுற்றாள் போலுந் தகைய ளிதுவென்கொல்

என்பன சொல்லி இனைந்தேங்கி யாற்றவும்
மன்பழி தூற்றுங் குடியதே மாமதுரைக்
கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச்
செம்பொற் கொடியனையாள் கண்டாளைத் தான்காணான் 30

மல்லன்மா ஞாலம் இருளூட்டி மாமலைமேற்
செவ்வென் கதிர்சுருங்கிச் செங்கதிரோன் சென்றொளிப்பப்
புல்லென் மருள்மாலைப் பூங்கொடியாள் பூசலிட
ஒல்லென் ஒலிபடைத்த தூர்;

வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழன்மேற் 35
கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய்ப்
புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்
கண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம்

என்னுறு துயர்கண்டும் இடருறும் இவள்என்னீர்
பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ 40
மன்னுறு துயர்செய்த மறவினை யறியாதேற்கு
என்னுறு வினைகாணா இதுவென உரையாரோ

யாருமில் மருள்மாலை இடருறு தமியேன்முன்
தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ
பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறிழைப்ப 45
ஈர்வதோர் வினைகாணா இதுவென உரையாரோ

கண்பொழி புனல்சோரும் கடுவினை யுடையேன்முன்
புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ
மன்பதை பழிதூற்ற மன்னவன் தவறிழைப்ப
உண்பதோர் வினைகாணா இதுவென உரையாரோ 50

பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்

சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
ஈன்ற குழுவி எடுத்து வளர்க்குறூஉம் 55
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்

தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்

என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன் 60
பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள
நின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம்
கன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற
அழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன்
தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்றப் 65
பழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான்
எழுதெழில் மலருண்கண் இருந்தைக்க எனப்போனான்
மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல்
போயெங்கு நாடுகேன் பொருளுரையோ இதுவன்று
காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன் 70
தீவேந்தன் தனைக்கண்டித் திறங்கேட்பல் யானென்றாள்
என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர
நின்றால் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச்
சென்றால் அரசன் செழுங்கோயில் வாயில்முன். 75

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework