ஒழுக்கம்
- விவரங்கள்
- தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
- பழமொழி நானூறு
34.
விழுத்தொடையர் ஆகி விளங்கித்தொல் வந்தார்
ஒழுக்குடையர் ஆகி ஒழுகல் -பழத்தெங்கு
செய்த்தலை வீழும் புனலூர ! அஃதன்றோ
'நெய்த்தலைப்பால் உக்கு விடல்'
35.
கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலைநாட ! 'நாய்கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு'.
36.
தந்நடை நோக்கார் தமர்வந்த வாறறியார்
செந்நடை சேராச் சிறியார்போல் ஆகாது
நின்னடை யானே நடஅத்தா ! 'நின்னடை
நின்னின்(று) அறிகிற்பார் இல்'.
37.
நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால்
பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே
கூர்த்தநுண் கேள்வி அறிவுடையார்க்(கு) ஆயினும்
'ஓர்த்தது இசைக்கும் பறை'.
38.
தங்குற்றம் நீக்கல ராகிப் பிறர்குற்றம்
எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல் - எங்கும்
வியனுலகில் 'வெள்ளாடு தன்வளி தீராது
அயல்வளி தீர்த்து விடல்'.
39.
கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை
முற்றுநீர் ஆழி வரையகத்(து) ஈண்டிய
'கல்தேயும் தேயாது சொல்'.
40.
பொருந்தாப் பழியென்னும் பொல்லாப் பிணிக்கு
மருந்தாகி நிற்பதாம் மாட்சி - மருந்தின்
தணியாது விட்டக்கால் தண்கடல் சேர்ப்ப!
'பிணியீ டழித்து விடும்'.
41.
உரிஞ்சி நடப்பாரை உள்ளடி நோவா
நெருஞ்சியும் செய்வதொன் றில்லை - செருந்தி
இருங்கழித் தாழும் எறிகடல் தண்சேர்ப்ப !
'பெரும்பழியும் பேணாதார்க்(கு) இல்'.
42.
ஆவிற்கு அரும்பனி தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவலன் என்றுலகம் கூறுமால்
தேவர்க்கு மக்கட்(கு) எனல்வேண்டா 'தீங்குரைக்கும்
நாவிற்கு நல்குரவு இல்'.