(நிலைமண்டில ஆசிரியப்பா)


விரிகதிர் பரப்பி உலகம்முழுது ஆண்ட
ஒருதனித் திகிரி உரவோன் காணேன்
அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்
திங்கள்அம் செல்வன் யாண்டுஉளன் கொல்எனத்
திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள் 5
முழுநீர் வார முழுமெயும் பனித்துத்
திரைநீர் ஆடை இருநில மடந்தை
அரைசுகெடுத்து அலம்வரும் அல்லற் காலை,
கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு குடிகளொடு ஒருதிறம் பற்றி 10
வலம்படு தானை மன்னர் இல்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்தக்
காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ்வு எய்தக்
குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு 15
மழலைத் தும்பி வாய்வைத்து ஊத
அறுகால் குறும்புஎறிந்து அரும்புபொதி வாசம்
சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற
எல்வளை மகளிர் மணிவிளக்கு எடுப்ப
மல்லல் மூதூர் மாலைவந்து இருத்தென 20
இளையர் ஆயினும் பகைஅரசு கடியும்
செருமாண் தென்னர் குலமுதல் ஆகலின்
அந்திவா னத்து வெண்பிறை தோன்றிப்
புன்கண் மாலைக் குறும்புஎறிந்து ஓட்டிப்
பான்மையில் திரியாது பால்கதிர் பரப்பி 25
மீன்அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து,
இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளியுள் பொலிந்து
செந்துகிர்க் கோவை சென்றுஏந்து அல்குல்
அம்துகில் மேகலை அசைந்தன வருந்த 30
நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலம் கொண்ட மாதவி அன்றியும்,
குடதிசை மருங்கின் வெள்அயிர் தன்னொடு 35
குணதிசை மருங்கின் கார்அகில் துறந்து
வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத்
தென்மலைப் பிறந்த சந்தனம் மறுகத்
தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க்
காமரு குவளைக் கழுநீர் மாமலர்ப் 40
பைந்தளிர்ப் படலை பருஉக்காழ் ஆரம்
சுந்தரச் சுண்ணத் துகளொடு அளைஇச்
சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை
மந்தமா ருதத்து மயங்கினர் மலிந்துஆங்கு
ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கிக் 45
காவிஅம் கண்ணார் களித்துயில் எய்த
அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள் 50
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறுவியர்ப்பு இரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத்
தவள வாள்நகை கோவலன் இழப்ப 55
மைஇருங் கூந்தல் நெய்அணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும்,
காதலர்ப் பிரிந்த மாதர் நோதக
ஊதுஉலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி
வேனில் பள்ளி மேவாது கழிந்து 60
கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து
மலயத்து ஆரமும் மணிமுத்து ஆரமும்
அலர்முலை ஆகத்து அடையாது வருந்தத்
தாழிக் குவளையொடு தண்செங் கழுநீர்
வீழ்பூஞ் சேக்கை மேவாது கழியத் 65
துணைபுணர் அன்னத் து¡வியிற் செறித்த
இணைஅணை மேம்படத் திருந்துதுயில் பெறாஅது
உடைப்பெருங் கொழுநரோடு ஊடல் காலத்து
இடைக்குமிழ் எறிந்து கடைக்குழை ஓட்டிக்
கலங்கா உள்ளம் கலங்கக் கடைசிவந்து 70
விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத்து உறைப்ப,
அன்னம் மெல்நடை நன்னீர்ப் பொய்கை
ஆம்பல் நாறும் தேம்பொதி நறுவிரைத்
தாமரைச் செவ்வாய்த் தண்அறல் கூந்தல்
பாண்வாய் வண்டு நோதிறம் பாடக் 75
காண்வரு குவளைக் கண்மலர் விழிப்பப்
புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
முள்வாய்ச் சங்கம் முறைமுறை ஆர்ப்ப
உரவுநீர்ப் பரப்பின் ஊர்த்துயில் எடுப்பி
இரவுத் தலைப்பெயரும் வைகறை காறும் 80
அரைஇருள் யாமத்தும் பகலும் துஞ்சான்
விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி
மகர வெல்கொடி மைந்தன் திரிதர
நகரம் காவல் நனிசிறந் ததுஎன்.

(வெண்பா)

கூடினார் பால்நிழலாய்க் கூடார்ப்பால் வெய்தாய்க்
காவலன் வெண்குடைபோல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான்ஊர் மதிவிரிந்து
போதுஅவிழ்க்கும் கங்குல் பொழுது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework