கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன்
யாவுந் தெரியா இயல்பினே னாயினும்
முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே
வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக 5
முன்னிறுத்திக் காட்டிய மொய்குழ லாள் பொன்னிக்
கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று
உரைசெய்த மாதரொடும் போகாள் திரைவந்து
அழியாது சூழ்போக வாங்குந்தி நின்ற
வரியா ரகலல்குல் மாதர் உரைசான்ற 10
மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று
கல்நவில் தோளாயோ வென்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள் மன்னி 15
மணல்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக்
கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் இணையாய
மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று
வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் வேற்றொருவன்
நீள்நோக்கங் கண்டு நிறைமதி வாள்முகத்தைத் 20
தானோர் குரக்குமுக மாகென்று போன
கொழுநன் வரவே குரக்குமுக நீத்த
பழுமணி அல்குற்பூம் பாவை விழுமிய
பெண்ணறி வென்பது பேதைமைத்தே என்றுரைத்த
நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன் 25
வண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால்
ஒண்டொடி நீயோர் மகற்பெறில் கொண்ட
கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம்
கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால்
சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத் 30
தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர்
கோடிக் கலிங்கம் உடுத்துக் குழல்கட்டி
நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த
ஆடகப்பூம் பாவை அவள்போல்வார் நீடிய
மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் 35
பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்
பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா
நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும்
வானக் கடவளரும் மாதவருங் கேட்டீமின் 40
யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து 45
விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த
நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்
பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து
மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி
மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள் 50
பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர்
ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப்
பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய 55
பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர்.

வெண்பா


பொற்பு வழுதியுந்தன் பூவையரும் மாளிகையும்
விற்பொலியுஞ் சேனையுமா வேழமுங்--கற்புண்ணத்
தீத்தரு வெங்கூடற் றெய்வக் கடவுளரும்
மாத்துவத் தான்மறைந்தார் மற்று.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework