சடையும் பிறையுந் தாழ்ந்த சென்னிக்
குவளை உண்கண் தவளவாள் முகத்தி
கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி
இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி
இடமருங் கிருண்ட நீல மாயினும் 5
வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள்
இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும்
வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்
வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால்
தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள் பனித்துறைக் 10
கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்
பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன்
குலமுதற் கிழத்தி ஆதலின் அலமந்து
ஒருமுலை குறைத்த திருமா பத்தினி
அலமரு திருமுகத் தாயிழை நங்கைதன் 15
முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக்
கேட்டிசின் வாழி நங்கையென் குறையென
வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி
யாரைநீ யென்பின் வருவோய் என்னுடை
ஆரஞ ரெவ்வ மறிதியோவென 20
ஆரஞ ரெவ்வ மறிந்தேன் அணிஇழாஅய்
மாபெருங் கூடல் மதுரா பதியென்பேன்
கட்டுரை யாட்டியேன் யானின் கணவற்குப்
பட்ட கவற்சியேன் பைந்தொடி கேட்டி
பெருந்தகைப் பெண்ணொன்று கேளாயென் நெஞ்சம் 25
வருந்திப் புலம்புறு நோய்
தோழீநீ ஈதொன்று கேட்டியென் கோமகற்கு
ஊழ்வினை வந்தக் கடை
மாதராய் ஈதொன்று கேளுன் கணவற்குத்
தீதுற வந்த வினை; காதின் 30
மறைநா வோசை யல்ல தியாவதும்
மணிநா வோசை கேட்டது மிலனே
அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது
குடிபழி தூற்றுங் கோலனு மல்லன்
இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர் 35
மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅது
ஒல்கா உள்ளத் தோடு மாயினும்
ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு 40
இழுக்கந் தாராது இதுவுங் கேட்டி
உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி
புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்
அரைச வேலி யல்ல தியாவதும்
புரைதீர் வேலி இல்லென மொழிந்து 45
மன்றத் திருத்திச் சென்றீ ரவ்வழி
இன்றவ் வேலி காவா தோவெனச்
செவிச்சூட் டாணியிற் புகையழல் பொத்தி
நெஞ்சஞ் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று
வச்சிரத் தடக்கை அமரர் கோமான் 50
உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை
குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து
இறைக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்க மின்மை
இன்னுங் கேட்டி நன்வா யாகுதல்
பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை 55
திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை
அறனறி செங்கோல் மறநெறி நெடுவாள்
புறவுநிறை புக்கோன் கறவைமுறை செய்தோன்
பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன்
தாங்கா விளையுள் நன்னா டதனுள் 60
வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி 65
நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு
ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க 70
நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப்
பார்ப்பன வாகை சூடி ஏற்புற
நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன்
செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர்
தங்கா லென்ப தூரே அவ்வூர்ப் 75
பாசிலை பொதுளிய போதி மன்றத்துத்
தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்
பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு
களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை
விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி 80
கடற்கடம் பெறிந்த காவலன் வாழி
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி
பூந்தண் பொருநைப் பொறையன் வாழி
மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கெனக்
குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த் 85
தளர்நடை யாயத்துத் தமர்முதல் நீங்கி
விளையாடு சிறாஅ ரெல்லாஞ் சூழ்தரக்
குண்டப் பார்ப்பீ ரென்னோ டோதியென்
பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்னெனச்
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் 90
ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்
பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த்
தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது
உளமலி உவகையோ டொப்ப வோதத்
தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து 95
முத்தப் பூணூல் அத்தகு புனைகலம்
கடகம் தோட்டொடு கையுறை ஈத்துத்
தன்பதிப் பெயர்ந்தன னாக நன்கலன்
புனைபவும் பூண்பவும் பொறாஅ ராகி
வார்த்திகன் தன்னைக் காத்தன ரோம்பிப் 100
கோத்தொழி லிளையவர் கோமுறை அன்றிப்
படுபொருள் வௌவிய பார்ப்பா னிவனென
இடுசிறைக் கோட்டத் திட்டன ராக
வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள்
அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில் 105
புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அதுகண்டு
மையறு சிறப்பின் ஐயை கோயில்
செய்வினைக் கதவந் திறவா தாகலின்
திறவா தடைத்த திண்ணிலைக் கதவம்
மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக் 110
கொடுங்கோ லுண்டுகொல் கொற்றவைக் குற்ற
இடும்பை யாவதும் அறிந்தீ மின்னென
ஏவ லிளையவர் காவலற் றொழுது
வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி யுரைப்ப
நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி 115
அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென்
இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நுங் கடனெனத்
தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன்
மடங்கா விளையுள் வயலூர் நல்கிக்
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் 120
இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள்
தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே
நிலைகெழு கூடல் நீள்நெடு மறுகின்
மலைபுரை மாடம் எங்கணும் கேட்பக்
கலையமர் செல்வி கதவந் திறந்தது 125
சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதுங்
கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்
இடுபொரு ளாயினும் படுபொரு ளாயினும்
உற்றவர்க் குறுதி பெற்றவர்க் காமென
யானை யெருத்தத்து அணிமுரசு இரீஇக் 130
கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன்
தான்முறை பிழைத்த தகுதியுங் கேள்நீ
ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து
அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண 135
உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும்
உரையு முண்டே நிரைதொடி யோயே
கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு
வடிவேல் தடக்கை வசுவுங் குமரனும்
தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும் 140
காம்பெழு கானக் கபில புரத்தினும்
அரைசாள் செல்வத்து நிரைதார் வேந்தர்
வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த
தாய வேந்தர் தம்முள் பகையுற
இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணுஞ் 145
செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின்
அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து
கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்தினோர்
அங்கா டிப்பட் டருங்கலன் பகரும் 150
சங்கமன் என்னும் வாணிகன் தன்னை
முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன்
வெந்திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன்
பரத னென்னும் பெயரனக் கோவலன்
விரத நீங்கிய வெறுப்பின னாதலின் 155
ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு
வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழிக்
கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி
நிலைக்களங் காணாள் நீலி என்போள்
அரசர் முறையோ பரதர் முறையோ 160
ஊரீர் முறையோ சேரியீர் முறையோவென
மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு
எழுநா ளிரட்டி எல்லை சென்றபின்
தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்தி
மலைத்தலை யேறியோர் மால்விசும் பேணியில் 165
கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள்
எம்முறு துயரம் செய்தோ ரியாவதும்
தம்முறு துயரமிற் றாகுக வென்றே
விழுவோ ளிட்ட வழுவில் சாபம்
பட்டனி ராதலிற் கட்டுரை கேள்நீ 170
உம்மை வினைவந் துருத்த காலைச்
செம்மையி லோர்க்குச் செய்தவ முதவாது
வாரொலி கூந்தல்நின் மணமகன் தன்னை
ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை 175
ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென
மதுரைமா தெய்வம் மாபத் தினிக்கு
விதிமுறை சொல்லி அழல்வீடு கொண்டபின்
கருத்துறு கணவற் கண்டபின் அல்லது
இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலனெனக் 180
கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்துக்
கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன்
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென
இரவும் பகலும் மயங்கினள் கையற்று
உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு 185
அவல என்னாள் அவலித்து இழிதலின்
மிசைய என்னாள் மிசைவைத் தேறலிற்
கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு
அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல்
நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப் 190
பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர்
தீத்தொழி லாட்டியேன் யானென் றேங்கி
எழுநா ளிரட்டி எல்லை சென்றபின்
தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்திப்
பீடுகெழு நங்கை பெரும்பெய ரேத்தி 195
வாடா மாமலர் மாரி பெய்தாங்கு
அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் றன்னொடு
வான வூர்தி ஏறினள் மாதோ
கானமர் புரிகுழற் கண்ணகி தானென். 200

வெண்பா


தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்
தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாய்
மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework