உரைப்பாட்டு மடை


குருவியோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றுவைகி
அருவியாடியும் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேம்முன்
மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல்வீர் மனநடுங்க
முலையிழந்து வந்துநின்றீர் யாவிரோவென முனியாதே
மணமதுரையோ டரசுகேடுற வல்வினைவந் துருத்தகாலைக்
கணவனையங்கு இழந்துபோந்த கடுவினையேன் யானென்றாள்
என்றலும் இறைஞ்சியஞ் இணைவளைக்கை எதிர்கூப்பி
நின்றஎல்லையுள் வானவரும் நெடுமாரி மலர்பொழிந்து
குன்றவரும் கண்டுநிற்பக் கொழுநனொடு கொண்டுபோயினார்
இவள்போலும் நங்குலக்கோர் இருந்தெய்வம் இல்லையாதலின்
சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே
நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர்
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே
தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்
கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
பரவுலும் பரவுமின் விரவுமலர் தூவுமின்
ஒருமுலை இழந்த நங்கைக்குப்
பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே; 1

கொளுச் சொல்


ஆங்கொன்று காணாய் அணியிழாய் ஈங்கிதுகாண்
அஞ்சனப் பூமி யரிதாரத் தின்னிடியல்
சிந்துரச் சுண்ணஞ் செறியத் தூய்த் தேங்கமழ்ந்து
இந்திர வில்லின் எழில்கொண் டிழுமென்று
வந்தீங் கிழியு மலையருவி யாடுதுமே;
ஆடுதுமே தோழி யாடுதுமே தோழி
அஞ்சலோம் பென்று நலனுண்டு நல்காதான்
மஞ்சுசூழ் சோலை மலையருவி ஆடுதுமே; 2

எற்றொன்றும் காணேம் புலத்தல் அவர்மலைக்
கற்றீண்டி வந்த புதுப்புனல்
கற்றீண்டி வந்த புதுப்புனல் மற்றையார்
உற்றாடி னோம்தோழி நெஞ்சன்றே; 3

என்னொன்றும் காணேம் புலத்தல் அவர்மலைப்
பொன்னாடி வந்த புதுப்புனல்
பொன்னாடி வந்த புதுப்புனல் மற்றையார்
முன்னாடி னோம்தோழி நெஞ்சன்றே; 4

யாதொன்றுங் காணேம் புலத்தல் அவர்மலைப்
போதாடி வந்த புதுப்புனல்
போதாடி வந்த புதுப்புனல் மற்றையார்
மீதாடி னோம்தோழி நெஞ்சன்றே; 5

பாட்டுமடை


உரையினி மாதராய் உண்கண் சிவப்பப்
புரைதீர் புனல்குடைந் தாடினோ மாயின்
உரவுநீர் மாகொன்ற வேலேந்தி ஏத்திக்
குரவை தொடுத்தொன்று பாடுகம்வா தோழி; 6

சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமு நீங்கா இறைவன்கை வேலன்றே
பாரிரும் பெளவத்தின் உள்புக்குப் பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே; 7

அணிமுகங்க ளோராறும் ஈராறு கையும்
இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே
பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம்
மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே; 8

சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மா ரறுவர்
திருமுலைப்பா லுண்டான் திருக்கைவே லன்றே
வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து
குருகு பெயர்க்குன்றம் கொன்ற நெடுவேலே; 9

பாட்டுமடை


இறைவளை நல்லாய் இதுநகையா கின்றே
கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க
அறியாள்மற் றன்னை அலர்கடம்பன் என்றே
வெறியாடல் தான்விரும்பி வேலன்வரு கென்றாள்; 10

ஆய்வளை நல்லாய் இதுநகை யாகின்றே
மாமலை வெற்பனோய் தீர்க்கவரும் வேலன்
வருமாயின் வேலன் மடவன் அவனிற்
குருகு பெயர்க்குன்றங் கொன்றான் மடவன்; 11

செறிவளைக்கை நல்லாய் இதுநகையா கின்றே
வெறிகமழ் வெற்பனோய் தீர்க்கவரும் வேலன்
வேலன் மடவன் அவனினுந் தான்மடவன்
ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்; 12

நேரிழை நல்லாய் நகையா மலைநாடன்
மார்பு தருவெந்நோய் தீர்க்க வரும்வேலன்
தீர்க்க வரும்வேலன் தன்னினுந் தான்மடவன்
கார்க்கடப்பந் தாரெங் கடவுள் வருமாயின்; 13

பாட்டுமடை


வேலவனார் வந்து வெறியாடும் வெங்களத்து
நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும்
ஆலமர் செல்வன் புதல்வன் வரும்வந்தால்
மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே; 14

கயிலைநன் மலையிறை மகனைநின் மதிநுதல்
மயிலியல் மடவரல் மலையர்தம் மகளார்
செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்
அயல்மணம் ஒழியருள் அவர்மணம் எனவே; 15

மலைமகள் மகனைநின் மதிநுதல் மடவரல்
குலமலை உறைதரு குறவர்தம் மகளார்
நிலையுயர் கடவுள்நின் இணையடி தொழுதேம்
பலரறி மணமவர் படுகுவ ரெனவே; 16

குறமகள் அவளெம குலமகள் அவளொடும்
அறுமுக வொருவநின் அடியிணை தொழுதேம்
துறைமிசை நினதிரு திருவடி தொடுநர்
பெருகநன் மணம்விடு பிழைமண மெனவே; 17

பாட்டுமடை


என்றியாம் பாட மறைநின்று கேட்டருளி
மன்றலங் கண்ணி மலைநாடன் போவான்முன்
சென்றேன் அவன்றன் திருவடி கைதொழுது
நின்றேன் உரைத்தது கேள்வாழி தோழி
கடம்பு சூடி உடம்பிடி ஏந்தி
மடந்தை பொருட்டால் வருவ திவ்வூர்
அறுமுகம் இல்லை அணிமயில் இல்லை
குறமகள் இல்லை செறிதோ ளில்லை
கடம்பூண் தெய்வ மாக நேரார்
மடவர் மன்றவிச் சிறுகுடி யோரே; 18

பாட்டுமடை


என்றீங்கு,
அலர்பாடு பெற்றமை யானுரைப்பக் கேட்டுப்
புலர்வாடு நெஞ்சம் புறங்கொடுத்துப் போன
மலர்தலை வெற்பன் வரைவானும் போலும்
முலையினால் மாமதுரை கோளிழைத்தாள் காதல்
தலைவனை வானோர் தமராரும் கூடிப்
பலர்தொழு பத்தினிக்குக் காட்டிக் கொடுத்த
நிலையொன்று பாடுதும் யாம்
பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
பாடுகம் வாவாழி தோழியாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடிமாடக் கூடலைத்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுங்கால்
மாமலை வெற்பன் மணவணி வேண்டுதுமே
பாடுற்றுப்
பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாளோர்
பைத்தர வல்குல்நம் பைம்புனத் துள்ளாளே
பைத்தர வல்குல் கணவனை வானோர்கள்
உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே
வானக வாழ்க்கை யமரர் தொழுதேத்தக்
கான நறுவேங்கைக் கீழாளோர் காரிகையே
கான நறுவேங்கைக் கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை மறுதரவோ வில்லாளே
மறுதர வில்லாளை ஏத்திநாம் பாடப்
பெறுகதில் லம்மஇவ் வூருமோர் பெற்றி
பெற்றி யுடையதே பெற்றி யுடையதே
பொற்றொடி மாதர் கணவன் மணங்காணப்
பெற்றி யுடையதிவ் வூர்
என்றியாம்
கொண்டு நிலைபாடி ஆடும் குரவையைக்
கண்டுநம் காதலர் கைவந்தா ரானாது
உண்டு மகிழ்ந்தானா வைகலும் வாழியர்
வில்லெழுதிய இமயத்தொடு
கொல்லி யாண்ட குடவர் கோவே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework