258.
கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்
கொல்சின வேந்தன் அவைகாட்டும் - மல்கித்
தலைப்பாய் இழிதரு தண்புனல் 'நீத்தம்
மலைப்பெயல் காட்டும் துணை'.
259.
செயிரறு செங்கோல் சினவேந்தன் தீமை
பயிரறு பக்கத்தார் கொள்வர் - துகிர்புரையும்
செவ்வாய் முறுவலநற் சின்மொழியாய்! 'செய்தானை
ஒவ்வாத பாவையோ இல்'.
260.
சுற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான்
உற்றிடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்
மரையா துணைபயிரும் மாமலை நாட!
'சுரையாழ் நரம்பறுத் தற்று'.
261.
நல்லவும் தீயவும் நாடிப் பிறருரைக்கும்
நல்ல பிறவும் உணர்வாரைக் கட்டுரையின்
வல்லிதின் நாடி வலிப்பதே 'புல்லத்தைப்
புல்லம் புறம்புல்லு மாறு'.
262.
மனத்தினும் வாயினும் மெய்யினும் செய்கை
அனைத்தினும் ஆன்றவிந்தா ராகி - நினைத்திருந்து
ஒன்றும் பரியலராய் 'ஓம்புவார் இல்லெனில்
சென்று படுமாம் உயிர்'.
263.
செயல்வேண்டா நல்லன செய்விக்கும் தீய
செயல்வேண்டி நிற்பின் விலக்கும் இகல்வேந்தன்
தன்னை நலிந்து தனக்குறுதி கூறலால்
'முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல்'.
264.
செறிவுடைத் தார்வேந்தன் செவ்வியல பெற்றால்
அறிவுடையார் அவ்வியமும் செய்வர் - வறிதுரைத்துப்
பிள்ளை களைமருட்டும் தாயர்போல் அம்புலிமேல்
'ஒள்ளியகாட் டாளர்க்(கு) அரிது'.
265.
தீயன வல்ல செயினும் திறல்வேந்தன்
காய்வன சிந்தியார் சுற்றறிந்தார் - பாயும்
'புலிமுன்னர் புல்வாய்க்குப் போக்கில் அதுவே
வளிமுன்னர் வைப்பாரம் இல்'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework